Published:Updated:

வயல்வெளிப் பள்ளி

காசி. வேம்பையன்

வயல்வெளிப் பள்ளி

காசி. வேம்பையன்

Published:Updated:

பாடம்

##~##

ஒவ்வொரு பயிரைப் பற்றியும் அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் விடையாக மலர்கிறது, இந்தப் புதிய தொடர். கடந்த இதழில் முதல் பயிராக இடம் பிடித்த நெல், இந்த இதழிலும் தொடர்கிறது. நெல் பற்றிய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 'நெல் துறை’ தலைவர் மற்றும் பேராசிரியர் ராபின்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்று உற்பத்தி செய்ய எத்தனை கிலோ விதைநெல் தேவை?''

''ஒற்றை நெல் சாகுபடி முறைக்கு எந்த ரகமாக இருந்தாலும் 3 கிலோ முதல் 4 கிலோ அளவில் விதைநெல் தேவைப்படும்.  

வழக்கமான முறைக்கு... நீண்ட கால ரகங்கள் என்றால் 12 கிலோ; மத்திய கால ரகங்கள் என்றால் 16 கிலோ; குறுகிய கால ரகங்கள் என்றால் 24 கிலோ; உயர் விளைச்சல் ரகங்கள் என்றால் 8 கிலோ; பாரம்பரிய ரகம் என்றால் 30 கிலோ என்ற அளவில் விதைநெல் தேவைப்படும். இயந்திர நடவுமுறைக்கு... சன்ன ரகங்களாக இருந்தால், 12 கிலோவும், மோட்டா ரகமாக இருந்தால், 15 கிலோ அளவிலும் விதைநெல் தேவைப்படும்.''

'விதையின் முளைப்புத்திறனை எப்படித் தெரிந்து கொள்வது?'

'சான்றிதழ் பெற்ற விதைகளைப் பயன்படுத்தும்போது, முளைப்புத்திறன் பிரச்னைகள் வருவதில்லை. விதைநெல்லில் கை அளவு நெல்மணிகளை தண்ணீரில் ஓர் இரவு ஊற வைத்து, ஈரமான வெள்ளைத்துணியில் ஒரு நாள் முழுவதும் கட்டி வைத்திருந்தால், விதைகள் முளைப்பு எடுத்திருக்கும். கட்டி வைத்த விதையில் 70 முதல் 80 சதவிகிதம் விதைகள் முளைப்பு எடுத்திருந்தால்... தரமான விதைகள்.'

வயல்வெளிப் பள்ளி

'தரமான நெல் விதையை எவ்வாறு தேர்வு செய்வது?'

'உப்புக்கரைசலைப் பயன்படுத்தி தரமான விதைகளைத் தேர்வு செய்யலாம். அதாவது, 15 லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் வாளியில், 10 லிட்டர் தண்ணீரை நிரப்பி புதிய கோழிமுட்டையை தண்ணீருக்குள் போடவேண்டும். முட்டை தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு, கல் உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் கரைத்துக் கொண்டே வந்தால், தண்ணீரின் அடர்த்தி அதிகரித்து, கோழிமுட்டை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி வரும். கோழிமுட்டையின் மேற்பரப்பு உப்புக்கரைசலுக்கு மேல் தெரிந்த பிறகு, உப்புக் கரைப்பதை நிறுத்திவிட வேண்டும் (சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு உப்பு தேவைப்படும்). பிறகு, இக்கரைசலில் 10 கிலோ விதைநெல்லைக் கொட்டினால், தரம் குறைவான விதைகள் நீரின் மேற்பகுதியில் மிதக்கும். அவற்றை அகற்றிவிட்டு, அடிப்பகுதியில் தங்கி இருக்கும் தரமான விதையைச் சேகரித்து... இரண்டு முதல் மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்படி தேர்வு செய்து தரமான விதைகளை விதைத்தால்... அவற்றிலேயே முதல் ஏழு நாட்களுக்கு நாற்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.''

'விதைநேர்த்தி செய்வதால் என்ன பயன்..?'

'விதைகள் மூலமாக பரவக்கூடிய பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்கும், விதைகளின் முளைப்புத்திறனை அதிகப்படுத்தவும் விதைநேர்த்தி உதவும். விதைநேர்த்தி செய்தால், 'குலைநோய்’ தாக்காது.''

'விதைநேர்த்தி செய்வது எப்படி.?'

'ஒரு லிட்டர் தண்ணீரில், 10 கிராம் 'சூடோமோனஸ் ஃபுளோரசன்ஸ்’ நுண்ணுயிரைக் கலந்து... அதில், ஒரு கிலோ விதைநெல்லைக் கொட்டி ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் விதைநெல்லை சணல் சாக்கில் இட்டுக் கட்டி, 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைத்திருந்து, முளைகட்ட வைத்து (மூன்றாம் கொம்பு) விதைக்க வேண்டும். விதைநெல்லின் அளவுக்கேற்ப தண்ணீரின் அளவையும் நுண்ணுயிரியின் அளவையும் கூட்டிக்கொள்ளலாம்.

இன்னொரு முறையிலும் விதைநேர்த்தி செய்யலாம். 50 லிட்டர் தண்ணீரில் தலா 250 கிராம் 'அசோஸ்பைரில்லம்’, 'பாஸ்போ -பாக்டீரியா’ ஆகிய நுண்ணுயிர்களைக் கலந்து (அசோபாஸ் கலவையாக இருந்தால் 500 கிராம்)... ஒரு ஏக்கருக்குத் தேவையான அளவு விதைநெல்லை இக்கரைசலில் இட்டு, ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பிறகு, சணல் சாக்கில் கட்டி, 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைத்திருந்து, முளைகட்ட வைத்து விதைக்க வேண்டும்.

இயற்கை விவசாய முறையில், 5 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, இதே முறையில் விதைநேர்த்தி செய்கிறார்கள். இதனுடன் நுண்ணுயிரிகளையும் கலந்தும் விதைநேர்த்தி செய்யலாம்.'

'நெல் சாகுபடியில் எத்தனை விதமான நாற்றங்கால் முறைகள் உள்ளன?'

'சேற்று நாற்றங்கால், மேட்டுப்பாத்தி நாற்றங்கால், புழுதி நாற்றங்கால், ஒற்றை நாற்று நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால், இயந்திர நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால் போன்ற முறைகள் பயன்பாட்டில் உள்ளன.'

'சேற்று நாற்றங்கால் தயாரிப்பது எப்படி?'

'நாற்றங்கால் அமைக்க... தண்ணீர் வசதியும், வடிகால் வசதியும் இருக்கும் வளமான நிலத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒட்டு ரகமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 8 சென்ட் நிலமும், பாரம்பரிய ரகத்துக்கு10 சென்ட் நிலமும் தேவை. களி மற்றும் மணல் கலந்த நிலமாக இருந்தால், சிறப்பாக இருக்கும். முதலில் இரண்டு சால் புழுதி உழவு செய்து, 400 கிலோ தொழுவுரத்தைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு, தண்ணீர் கட்டி இரண்டு நாட்கள் வைத்திருந்து, இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப் படியான தண்ணீரை வடித்து விடுவதற்காக நாற்றங்காலின் மையப்பகுதியில் 10 அடி இடைவெளியிலும், நாற்றங்காலின் நான்கு பக்கமும் அரை அடி அகலத்துக்கு வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

50 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் பஞ்சகவ்யா, 200 கிராம் சூடோமோனஸ் கலவையைக் கலந்து நாற்றங்காலில் ஊற்றி... மறுநாள், இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் கட்டி தேவையான அளவு விதைநேர்த்தி செய்த மூன்றாம் கொம்பு விதையைப் பாவ வேண்டும். விதைத்த 12 மணி நேரத்துக்குப் பிறகு, தண்ணீரை வடிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரத்துக்கு தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் கட்டி, வடிக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு அங்குல உயரத்துக்கு நிரந்தரமாக தண்ணீரை நிறுத்த வேண்டும். சேறு இறுக்கமாகும் அளவுக்கு காய விடக் கூடாது.

ஏழு நாட்களுக்குப் பிறகு, நாற்று நல்ல பச்சை கொடுத்து வளரும். 10 முதல் 12 நாட்களில் களைகளை நீக்க வேண்டும். போதுமான வளர்ச்சி இல்லை என்றால், ஒரு சென்ட் நிலத்துக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற கணக்கில், தண்ணீரில் கலந்து பாசனம் செய்தால், வளர்ச்சி அதிகரிக்கும். களிமண் பாங்கான பகுதிகளில் நாற்றின் வேர் பகுதி அறுந்து விடாமல் இருக்க...

10 கிலோ ஜிப்சத்தை, நாற்றுப் பறிப்பதற்கு முதல்நாள் தூவி விட வேண்டும். 135 நாட்களுக்கு குறைவான குறுகிய மற்றும் மத்திய கால நெல் ரகங்களின் நாற்றுகளை 20 முதல் 25 நாட்களிலும், நீண்ட கால நெல் ரகங்களின் நாற்றுகளை 30 நாட்களிலும் பறித்து நடவு செய்ய வேண்டும்.'

மேட்டுப்பாத்தி நாற்றங்கால், புழுதி நாற்றங்கால், ஒற்றை நாற்று நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால், இயந்திர நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால் போன்றவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்...

- படிப்போம்...