Published:Updated:

மீத்தேன் எமன்!

பாலைவனமாகும் பரிதாப டெல்டாபோராட்டம் கு. ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

மீத்தேன் எமன்!

பாலைவனமாகும் பரிதாப டெல்டாபோராட்டம் கு. ராமகிருஷ்ணன், ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

Published:Updated:
##~##

 ந்தத் தெருவில், பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அதை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்தார், வீட்டுக்காரர். அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டியபோது, செப்புக் குடம் ஒன்று கிடைத்தது. அதில் தங்கக் காசுகள், வெள்ளி ஆபரணங்கள் தகதகத்தன. இந்தத் தகவல், அந்தத் தெரு முழுவதும் பரவியது.

பக்கத்து வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒகு. ராமகிருஷ்ணன்ருவன், 'இங்கேயும் கண்டிப்பாக புதையல் இருக்கும்... தோண்டிப் பார்க்கலாம்’ என்று நினைத்தான். இரவோடு இரவாக அந்த வீடு முழுக்க ஆழமான குழிகளைத் தோண்டி, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஒட்டம் எடுத்தான். மறுநாள் கனமழை... ஆங்காங்கே குழியெடுக்கப்பட்டதால் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டம் கண்டு, ஒட்டுமொத்த வீடும் இடிந்து... அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டாவின் நிலையும் இப்படித்தான் மாறும். எது எங்கு சாத்தியமோ, அதை அங்குதான் செய்ய வேண்டும். எதுவும் விளையாத பாலைவனப் பகுதிகளில் பெட்ரோல், கேஸ் எடுக்கிறார்கள் சரி. ஆனால், முப்போகம் விளையும் செழிப்பான விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம், 'எண்ணெய் எடுக்கிறேன்...', 'மீத்தேன் எடுக்கிறேன்' எனச் செய்யப்படும் விஷப்பரீட்சைகளை மூடத்தனம் என்பதா? இல்லை, 'இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது. அழியப்போவது யாரோதானே...' என்ற எண்ணத்தில் நடைபோடும் ஆட்சியாளர்களின் அரக்கத்தனம் என்பதா?

நாளைக்கு எடுக்கப்பட இருக்கும் மீத்தேன் ஆபத்துக்கு ஒரு சோறு பதமே... கடந்த இருபது, ஆண்டுகளுக்கும் மேலாக இதே டெல்டா பகுதியில், 'பெட்ரோல் எடுக்கிறோம்' என்கிற பெயரில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம்), நடத்திக் கொண்டிருக்கும் அழிவு வேலைகள்!

மீத்தேன் எமன்!

திருவாரூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது... வெள்ளக்குடி கிராமம். பாண்டவை ஆற்றின் கிளை வாய்க்கால்களால் பாசனம் பெறும் இந்த ஊர், ஒரு காலத்தில் மிகமிக செழிப்பான விவசாய பூமி. வளம் மிக்க வண்டல் மண் பூமி என்பதோடு, 10 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் தவழ, ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து, பொருளாதாரத்தில் தன்னிறைவோடு திகழ்ந்தனர், விவசாயிகள். 80-களின் இறுதி வரை நீடித்த இந்த நிலை... 90-களின் தொடக்கத்தில் தலைகீழாக மாறிப்போனது... பெருங்கொடுமை! ஆம்... ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அப்போதுதான் இங்கே அடியெடுத்து வைத்தது.

அதன் கோர முகத்தை, அப்போது உணராத டெல்டா வாழ் விவசாயிகள், விவசாயக் கூலிகள் என அனைவருமே... 'நம்ம ஊர்ல பெட்ரோல் எடுக்கப் போறாங்களாம்... துபாய், குவைத் மாதிரி நம்ம ஊரும் உலகம் முழுக்க ஃபேமஸாகி, பணக்கார ஊராயிடும். வழவழப்பான விசாலமான ரோடெல்லாம் வந்துடும். ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைச்சுடும்’ என்றெல்லாம் வெள்ளந்தியாகவே பேசிக் கொண்டிருந்தனர். மீடியாக்களிலும், 'காவிரி டெல்டாவில் பெட்ரோல் ஊற்று... ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெட்ரோல் பல ஆண்டுகளுக்குக் கிடைக்கும்... இதன் காரணமாக காவிரி டெல்டா முழுக்க தொழில்கள் பெருகும்' என்றே செய்திகள் பரப்பப்பட்டன!

மீத்தேன் எமன்!

அன்றைக்கு இதையெல்லாம் ஆச்சர்யமும்... பெருமையும் பொங்க உள்வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் வெள்ளக்குடி மக்கள். ஆனால், இன்று இந்தப் பசுமை பூமியின் நிலை... கொடுமையிலும் கொடுமை! நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து நம்மால் விலகவே முடியவில்லை.

ஒரே வரியில் சொன்னால்... 'நவீன சாலைகளைக் கொண்ட நரகம்தான் வெள்ளக்குடி'.

''ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சுக்கிட்டு இருக்கோம். ஓ.என்.ஜி.சி-யோட எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இங்கதான் இருக்கு. கேஸை தனியா பிரிக்கக்கூடிய சார்பு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனமும் இங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தேவைற்ற நச்சு வாயுக்கள் இருபத்தி நாலு மணிநேரமும் வெளியாகும். அதை அப்படியே எரிய விட்டுடுவாங்க. அதனால, ஆண்டு முழுக்க அணையா ஜோதியா அது எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதனால வர்ற புகை, கரித்துகள் எல்லாம் விளைநிலங்கள்ல படியுது. நீர்நிலைகளும் விஷமாயிடுச்சு. எண்ணெய்க் கழிவுகளை திறந்தவெளியில வயல்கள்ல கொட்டி வெச்சுருக்காங்க. 60 அடி சுற்றளவு

20 அடி ஆழத்துக்கு கிணறுகளை அமைச்சி, அதுலயும் நச்சுக்கழிவுகளைக் கொட்டி வெச்சுருக்காங்க. இந்த கிணறுகளோட பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைஞ்சு கிடக்கறதால, நச்சுக் கழிவுகள் மண்ணுல பரவி, ஊர் முழுக்க ஊடுருவியிடுச்சு.

மீத்தேன் எமன்!

மழை, வெள்ளக்காலங்கள்ல இந்த எண்ணெய்க் கழிவுகள் தண்ணீரோடு அடிச்சிக்கிட்டு வந்து, பரவலா எல்லா இடங்கள்லயும் வெளியில தேங்கிடுது. இதனால் இங்க உள்ள நிலங்கள்ல விளைச்சலே இல்லாம போயிடுச்சு. ஒருவேளை உயிர் புடிச்சி வந்தாலும், விதவிதமான நோய்கள் தாக்கி, பயிர்கள் செத்துடுது. அதனால, பெரும்பாலான நிலங்கள், தரிசாத்தான் கிடக்கு. விவசாயம் அழிஞ்சி போனதால, வெளியூர்களுக்கு கூலி வேலைக்குத்தான் நிறையபேர் போயிக்கிட்டு இருக்காங்க'' என்று சொல்லும் பரசுராமனின் வார்த்தைகள் முழுக்க... வருத்தம் இழையோடுகிறது!

''இந்த எண்ணெய் கம்பெனியால, நாங்க இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல...'' என பெருக்கெடுத்த கண்ணீரோடு, கதறி அழுத கமலா, ''மேய்ச்சலுக்குப் போற ஆடு, மாடுக கால்கள்ல, எண்ணெய்க் கழிவுகள் பட்டு, புண்ணாகி, இறந்துடுது. இந்தப் பகுதிகள்ல எப்பவும் எண்ணெய் வாடை, நச்சுப்புகை இதுங்களைத்தான் சுவாசிச்சுக்கிட்டு இருக்கோம். இதனால, ஏகப்பட்ட நோய்கள் எங்களுக்கு வருது. எப்பவுமே ஊருக்குள்ள வெப்பக் காத்துதான் வீசிட்டே இருக்கு. சின்னக் குழந்தைகள் எல்லாம் தாங்க முடியாம பலியாகுதுக.

குடிக்கக்கூட நல்ல தண்ணி கிடையாது. அடிபம்பு தண்ணியிலகூட எண்ணெய் வாடை அடிக்குது. இதையெல்லாம்விட பெரிய வேதனை... ஒ.என்.ஜி.சி கம்பெனிக்காரங்க, எங்க குடியிருப்புப் பகுதியை சுத்திலும் பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. 'ஏன் இதைக் கட்டறீங்க?'னு கேட்டதுக்கு, 'இங்க புதுசா ஃபேக்டரி வரப் போகுது'னு சொல்றாங்க. எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா கூட நாங்க தப்பிச்சி ஓட முடியாது. இங்க இருந்து சில அடி தூரத்துலதான் எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இருக்கு. 'எப்ப வேணும்னாலும் எது வேணுனாலும் நடக்கலாம்'னு இங்க உள்ள அதிகாரிகளே சொல்றாங்க'' என்று நடுங்கியவர்,  

மீத்தேன் எமன்!

''அப்பப்ப ஒ.என்.ஜி.சி-யோட மீட்புப் படை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் அவசர அவசரமா இங்க ஓடி வந்து... 'விஷ வாயு கசிஞ்சுடுச்சி... இந்த சேமிப்பு நிலையம் வெடிக்கப் போகுது. சிக்கீரம் கிளம்புங்க’னு பதற்றமா சொல்லுவாங்க. நாங்க பயந்து, உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு, குழந்தை, குட்டிகளைத் தூக்கிக்கிட்டு, கையில கிடைக்குற சாமான்களோடு வெளியில ஓடுவோம். ரொம்ப நேரம் கழிச்சி, எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமே இல்லாம, 'பயிற்சிக்காக ஒத்திகை பார்த்தோம்’னு அதிகாரிக சொல்லுவாங்க. இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு.

எங்க மேல அக்கறை இருக்கற மாதிரி பேசற சில அதிகாரிகள், 'இங்க எப்ப வேணும்னாலும் பெரிய அளவுல ஆபத்துகள் ஏற்பட லாம். இங்க இருந்து நீங்க வேற இடத்துக்கு போறது நல்லது’னு சொல்றாங்க. அதை எந்த அளவுக்கு நம்பறதுனு தெரியல.

இது எங்களோட பட்டா நிலம். காலகாலமா, தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப எங்களோட வாழ்க்கை, நடைப்பிணமா நகர்ந்துக்கிட்டு இருக்கு'' என்று அழுதார், கமலா.

இங்குள்ள அத்தனை விவசாயிகளிடமும் இதுபோன்ற கதறல் கதைகளே நீக்கமற நிறைந்திருக்கின்றன.

- பாசக்கயிறு நீளும்...