Published:Updated:

மரத்தடி மாநாடு - வெள்ளைக்கழிசல்... உஷார்... உஷார்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு - வெள்ளைக்கழிசல்... உஷார்... உஷார்!

ஓவியம்: ஹரன்

Published:Updated:
##~##

 றுவடை செய்து வைத்திருந்த உளுத்தம்பருப்பை, மாட்டு வண்டியில் ஏற்றி, வீட்டில் வைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். வழியில், வண்டியில் ஏறிக்கொண்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு நாளிதழ் படித்துக் கொண்டே வர... வண்டி தோட்டத்தில் நுழைந்ததும்...

''என்னங்கய்யா... ஏதோ ஏரோப்ளேன்ல வர்ற மாதிரி நினைப்பா? இங்க ஒரு ஆள் உக்கார்ந்திருக்கறதுகூட தெரியலையா?'' என்று 'காய்கறி' கண்ணம்மாவின் கணீர் குரல் பாய்ந்து வந்தது. திடுக்கிட்டு நாளிதழில் இருந்து கண்களை விலக்கிய வாத்தியார், தோட்டம் வந்துவிட்டதை உணர்ந்து, கீழே இறங்கிய படியே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நமக்கு இதுதான் கண்ணம்மா, ஏரோப்ளேன். இதுல வர்றதுதான் நம்மள மாதிரி ஆளுக்குப் பெருமை'' என்று சொல்லி, மரத்தடியில் போய் அமர்ந்தார், வாத்தியார். அதற்குள் மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு வைக்கோலை போட்டு விட்டு ஏரோட்டி வந்தமர... மாநாடு ஆரம்ப மானது.

''வைக்கோல் எங்கய்யா வாங்கினே... அர சாங்கம் கொடுத்த மானிய விலை வைக்கோலா?'' என்று ஒரு கேள்வியைப் போட்டார், காய்கறி.

''ஆமா, அரசாங்கம் கொடுத்துக் கிழிச்சாங்க. மையம் ஆரம்பிச்ச மறுநாள் ரேஷன் கார்டை தூக்கிட்டுப் போனா, 'இனிமே பதிவு கிடையாது’னு சொல்லிட்டாங்க. கால்நடைத் துறையில வேலை செய்றவங்களுக்கு வேண்டியவங்க பேர்களை மட்டும்தான் பதிஞ்சு வெச்சு, வைக்கோல் கொடுக்கறாங்களாம். மாநிலம் முழுக்க, மொத்தமே 125 தீவன விற்பனை மையம்தான் இருக்கு. இது எந்த மூலைக்கு பத்தும். எல்லா இடத்துலயும் ஒரே அடிதடிதான் நடந்துட்டிருக்கு. பதிஞ்சு வெச்சுருக்குற விவசாயிகளுக்கு மட்டும்தான் வைக்கோல்னா... குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தொடர்ந்து கிடைக்கற மாதிரி இருக்குது. 'எல்லாத்துக்கும் கிடைக்கற மாதிரி சுழற்சி முறையில கொடுத்தாத்தானே சரியா இருக்கும்’னு விவசாயிங்க கேட்டுட்டு இருக்காங்க. ஆனா, அதிகாரிகள் காதுல போட்டுக்கறதே இல்லை. 'கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டலையே’னு விவசாயிகள் புலம்பறாங்க. நான், போன போகம் நெல் அறுத்தப்பவே மொத்த வைக்கோலையும் போர் போட்டு வெச்சுட்டேன். இன்னும் ஆறு மாசத்துக்கு எனக்குக் கவலையில்லை'' என்றார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு - வெள்ளைக்கழிசல்... உஷார்... உஷார்!

''சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்காதுங்குற கதையால்ல இருக்குது'' என்று நீட்டி முழக்கினார், காய்கறி.

''அது தெரிஞ்ச விஷயம்தானே. ஒவ்வொரு திட்டத்துக்கும் கோடிக் கணக்குல நிதி மட்டும்தான் ஒதுக்குறாங்க. அது எங்க போகுதுனே நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தெரியமாட்டேங்குது. இப்போ இந்த வருஷம், தமிழ்நாட்டுல கடுமையான வறட்சி நிலவுறதால நிவாரணம் கொடுக்கலாம்னு அரசாங்கம் முடிவு பண்ணியிருக்கு போல. அதுக்காக, ரகசியமா கணக்கெடுக்கப் போறாங்களாம். குறிப்பா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்கள்லதான் ரகசிய கணக்கெடுப்பு வேலையை ஆரம்பிச்சுருக்காங்களாம். இதுல என்னென்ன தில்லுமுல்லு நடக்கப்போகுதோ...'' என்று கவலையுடன் சொன்னார், வாத்தியார்.

''நிவாரணம் கொடுக்குறதுனு முடிவு பண்ணிட்டா... வெளிப்படையாவே கணக்கு எடுக்க வேண்டியதுதான். அதென்ன ரகசிய கணக்கெடுப்பு...''

-வெடுக்கென கேட்டார், காய்கறி.

''அதெல்லாம் அரசாங்க ரகசியம். நீ தோண்டித் துருவிப் பார்க்க நினைக்காதே... அப்புறம் உன்கூடைக்கே ஆபத்து வந்தாலும் வரலாம்'' என்று காய்கறிக்கு திகில் கொடுத்த வாத்தியார், அடுத்தச் செய்திக்குத் தாவினார்.

''விருத்தாசலம், மார்க்கெட் கமிட்டியில் நெல் கொள்முதல் ஆரம்பிச்சு தினமும் நூத்துக்கணக்கான நெல் மூட்டை வந்துட்டுருக்குதாம். ஆனா, அங்க இட வசதி இல்லாததால, விவசாயிகள் எல்லாம் நெல் மூட்டைகளை வெட்டவெளியில வெச்சுருக்காங்க. திடீர்னு மழை பெஞ்சதுல 40 ஆயிரம் மூட்டை நெல் நனைஞ்சு போச்சாம். இதுல பாதிக்கு மேல வீணா போயிடுச்சாம். அதேமாதிரி, செஞ்சி மார்கெட் கமிட்டியில ஏலத்துக்கு வந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகளை வெட்டவெளியில வெச்சுருந்துருக்காங்க. திடீர்னு ஒரு மணி நேரம் மழை அடிச்சு ஊத்தவும் அம்புட்டு மூட்டையும் நனைஞ்சு போச்சாம். இதுதான் சமயம்னு மூட்டைக்கு முன்னூறு ரூபாய் வரைக்கும் விலையைக் குறைச்சுட்டாங்களாம், வியாபாரிங்க. அதனால விவசாயிகள்லாம் ரோடு மறியல் பண்ணியிருக்காங்க. அப்பறம், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார் எல்லாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தியிருக்காங்க'' என்றார், வாத்தியார்.

''ஆமாம்யா... நான்கூட கேள்விப்பட்டேன்'' என்ற ஏரோட்டி,

''விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியிலயும் இதேமாதிரி ஒரு பிரச்னை. கமிட்டியோட குடோனுக்குப் போறதுக்கு ரெண்டு வழி இருக்குதாம். ஆனா, ராத்திரி நேரத்துல ஒரு வழியை மட்டும்தான் அடைப்பாங்களாம். எடை மேடைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு வழியை அடைக்கறதில்லையாம். இதனால, அந்த வழியா திருடனுங்க வந்து தானிய மூட்டைகளைத் திருடிக்கிட்டுப் போயிடுறாங்களாம். அதனால, 'ராத்திரி நேரத்துல வாட்ச் மேன் போடணும். அல்லது அந்த வழியை மூடி வைக்கணும்’னு விவசாயிகள் கோரிக்கை வைக்கிறாங்களாம். ஆனா, அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கறாங்களாம். கமிட்டிக்குக் கொண்டு வர்ற மூட்டை விலை போகலைனா, ராத்திரி குடோன்லயே வெச்சுட்டுப் போறதுக்கு இப்பல்லாம் விவசாயிங்க பயப்படுறாங்களாம்'' என்றார்.

''பாவம்பா நம்ம சம்சாரிகள். இதுக்கும் யாராவது பொதுநல வழக்கு போட்டாதான் சரியாகும்போல...'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன வாத்தியார்,

''மதுரை, உயர் நீதிமன்ற கிளையில... மதுரையைச் சேர்ந்த லட்சுமணன்ங்கிற வக்கீல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செஞ்சுருந்தார். 'தமிழகத்துல இருக்குற ஆறு, குளம், அணை மாதிரியான பெரும்பாலான நீர் நிலைகளை தனியார் சட்ட விரோதமா ஆக்கிரமிச்சுருக்காங்க. அரசாங்கமும் நீர் நிலைகளை ஆக்கிரமிச்சு கட்டடங்களைக் கட்டுது. அதனால மழைநீரைச் சேகரிக்க முடியலை. நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சு போயிடுச்சு. 1923-ம் வருஷம் சர்வே பண்ணப்ப இருந்தபடி, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், கால்வாய்கள் எல்லாத்தையும் மீட்டு, பழைய நிலைக்கு கொண்டு வந்து, பாதுகாக்க உத்தரவிடணும்’னு கேட்டுருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போ, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு முதன்மை தலைமைப் பொறியாளர் அசோகன் கோர்ட்டுல ஆஜரானார். அவரை நீதிபதிகள் குடைஞ்சு எடுத்துட்டாங்களாம்.

மரத்தடி மாநாடு - வெள்ளைக்கழிசல்... உஷார்... உஷார்!

'வைகை, அமராவதி அணைகளை ஆழப்படுத்தப் போறோம். அதுக்காக மண் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கோம்’னு பதில் சொன்ன அசோகன்கிட்ட... 'கண்மாயெல்லாம் என்ன ஆச்சு? அதுக்கு என்ன பண்ணப் போறீங்க?’னு கேள்வியா அடுக்கியிருக்காங்க. 'பெரிய கண்மாய்களை ஆழப்படுத்தறதுக்கு மூணு வருஷம் வரைக்கும் ஆகுது. அதனால், அந்த வேலை செய்றதுக்கு கான்ட்ராக்டர்கள் ஒப்புக்கிறதில்லை’னு சொல்லி ஒரு வழியா அசோகன் சமாளிச்சுருக்கார். ஆனாலும், நீதிபதிகள் சமாதானமாகலையாம். தமிழ்நாடு முழுக்க இருக்குற முக்கிய நீர் நிலைகளை ஆழப்படுத்தறதுக்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பத்தின அறிக்கையை தயார் செஞ்சு உடனடியா கோர்ட்டுல தாக்கல் செய்யணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. எல்லா பிரச்னையையும் இப்படி கோர்ட்டுக்குக் கொண்டு போய்த்தான் தீத்துக்கணும் போல'' என்றார்.

''ஏதோ நீதிபதிகளுக்கு இதுமாதிரியான சூழல் விஷயமெல்லாம் தெரியப்போய்த்தான்... அப்பப்ப இப்படிப்பட்ட வழக்குகள் மூலமா மணல் கொள்ளை, மரக்கடத்தல், காடு அழிப்பு மாதிரியான கொடுமைகளைத் தடுக்க முடியுது. இதுவும் இல்லாட்டி, இந்நேரம் நாசமாப் போயிருக்கும் இந்த நாடு'' என்று சொன்னார் ஏரோட்டி!

அதை ஆமோதித்த வாத்தியார், ''இன்னொரு முக்கியமான விஷயம்யா... இத்தனை நாளா கொட்டித் தீர்த்துக்கிட்டிருந்த பனி, திடீர்னு விலகிப் போயிடுச்சு பார்த்தியா. வெக்கையும் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பல ஊர்கள்ல வெப்பக் காத்து வீசுதாம். 'இந்த மாதிரி பருவம் மாறுற சமயங்கள்லதான் ஆடு, மாடு வளர்க்கு றவங்க ஜாக்கிரதையா இருக்கணும். இந்த சமயத்துலதான் நோய்கள் தாக்கும். அதனால முன்னெச்சரிக்கையா அந்தந்தப் பகுதிகள்ல பரவுற நோய்களுக்கான தடுப்பூசியைப் போட ணும். குறிப்பா இந்தப் பருவத்துல கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வர்றதுக்கு வாய்ப்பு அதிகம். அதனால அதுக்கான தடுப்பூசியைப் போடணும். அரசு கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள்ல இந்த ஊசியை இலவசமாவே போட்டுக்கலாம்’னு கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி திண்டுக்கல் பயிற்சி மையத் தலைவர் டாக்டர். பீர் முகம்மது சொல்லியிருக்கார். நீயும் போய் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுடுய்யா'' என்றார்.

''போட்டாச்சு... போட்டாச்சு... நான் போன வாரமே என் ஆட்டுக்கும், கோழிக்கும் தடுப்பூசி போட்டாச்சுல்ல'' என்ற ஏரோட்டி,

''மாட்டைக் கட்டிட்டு வர்றேன்'' என்று எழுந்து செல்ல, அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.