Published:Updated:

திட்டமிடாத அதிகாரிகள்... பாதியில் திரும்பிய விவசாயிகள்...

நாக்பூர் விவசாயக் கண்காட்சி கலாட்டா!குளறுபடி ஜி. பழனிச்சாமி, த. ஜெயகுமார்

திட்டமிடாத அதிகாரிகள்... பாதியில் திரும்பிய விவசாயிகள்...

நாக்பூர் விவசாயக் கண்காட்சி கலாட்டா!குளறுபடி ஜி. பழனிச்சாமி, த. ஜெயகுமார்

Published:Updated:
##~##

 ''நாக்பூருக்கு வாருங்கள்... அகில இந்திய வேளாண் கண்காட்சியைப் பாருங்கள்...' என்றபடி விவசாயிகளை உசுப்பேற்றிய மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள்... அதற்கான பயண ஏற்பாடுகளில் கோட்டைவிடவே... ஆசை ஆசையாகப் புறப்பட்ட விவசாயிகள், நொந்து, வெந்து வேதனையில் புலம்பிக் கொண்டுள்ளனர். ரயிலிலேயே ஏறமுடியாமலும்... பாதிவழியிலேயே இறக்கிவிடப்பட்டும் நோகடிக்கப்பட்ட விவசாயிகளின் சோகம் ஒருபுறமென்றால்... ஒருவழியாக ரயிலில் தொற்றிக்கொண்டு நாக்பூர் சென்று வந்த விவசாயிகளின் சோகம்... பெருஞ்சோகம்!

மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 2014-ம் ஆண்டுக்கான 'கிருஷி வசந்த்’ என்ற பெயரில், எழுநூறுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் தேசிய வேளாண் கண்காட்சி பிப்ரவரி 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள, தமிழகத்திலிருந்து 'ஆத்மா' திட்டத்தின் கீழ் மாநில வேளாண் துறை, மாவட்டந்தோறும் விவசாயிகளைத் தேர்ந்தெடுத்தது. 'ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி என அனைத்தும் இலவசமாகத் தரப்படும்' என்று விவசாயிகளுக்குக் கூறப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்காக இரண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட... 8-ம் தேதி கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் சேலம் மார்க்கமாக செல்லும் ரயிலிலும், 9-ம் தேதி மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சென்னை எழும்பூர் வழியாக செல்லும் ரயிலிலும் செல்வதற்காக குறித்த நேரத்துக்கு வந்து காத்திருந்தனர் விவசாயிகள். ஆனால், நடந்ததோ.... கொடுமையிலும் கொடுமை!

திட்டமிடாத அதிகாரிகள்... பாதியில் திரும்பிய விவசாயிகள்...

ரயிலிலிருந்து பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட அவலத்தைப் பகிர்ந்துகொண்டார் நாமக்கல் மாவட்ட முன்னோடி விவசாயி நடேசன். ''நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 150 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். கண்காட்சிக்கு எப்பொழுது புறப்படவேண் டும் என்கிற தகவலை பலமுறை கேட்டும், எங்களிடம் சொல்லவில்லை. புறப்படுவதற்கு இரண்டுநாள் முன்பாக, அதாவது பிப்ரவரி 6-ம் தேதிதான் சொன்னார்கள். 8-ம் தேதி இரவு 'உங்களுக்கான சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்துக்கு வந்துவிடும் என்றார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளை வழிகாட்டி அழைத்துச்செல்ல, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் உதவி வேளாண் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் மிக தாமதமாக வந்து சேர்ந்தது. அது, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளால் ஏற்கெனவே நிரம்பி வழிந்தது. மாவட்ட வாரியாக பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. இதனால், கிடைத்த பெட்டியில் எல்லாம் ஏறிக்கொண்டனர் விவசாயிகள்.

விவசாயி என்கிற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 80 சதவிகிதம் பேர் கரைவேட்டி கட்டிய ஆளும் அ.தி.மு.க. பிரமுகர்கள் என்பதால், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கு காவல்துறையும் துணைபோனது. காட்பாடியில் காத்திருந்த விவசாயிகள் ரயில் ஏற முடியாமல், ஏற்கெனவே ரயிலில் பயணித்த ஆளும்கட்சிக்காரர்கள் பெட்டிகளின் கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். திடீர் மறியல்கூட செய்து பார்த்தோம். போலீஸ் அடிதான் கிடைத்தது.  வெறுத்துப்போய், 'கண்காட்சியே வேண்டாம்' என்று சேலம், அரக்கோணம், காட்பாடி, வேலூர் ரயில் நிலையங்களில் இறங்கி, பாதியில் ஊருக்கே ஓட்டம் பிடித்த விவசாயிகள் கிட்டதட்ட 500 பேர் இருக்கும். இதை இப்படியே விடமாட்டோம். முறையான ஏற்பாடுகள் செய்யாத ஆத்மா அலுவலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று ஆக்ரோஷப்பட்டார் நடேசன்.

சிறப்பு ரெயிலில் ஏறாமல், வீடு திரும்பிய காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி பரசுராம். ''பிப்ரவரி 9-ம் தேதி காலை 8 மணிக்கு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடுங்க’னு அதிகாரிகள் சொன்னபடி வந்துட்டோம். ஆனா, மதியம் ஒண்ணரை மணிக்குத்தான் ரயிலே வந்துச்சு. எங்களுக்கு ரெண்டு பெட்டிகள் ஒதுக்கினதா சொல்லி, பெட்டியோட நம்பரையும் கொடுத்திருந்தாங்க. ஆனா, அந்தப் பெட்டியில உக்கார்றதுக்காககூட இடம் இல்லாம மதுரை, சிவகங்கையிலிருந்து வந்திருந்த விவசாயகளின் கூட்டம் நிரம்பி வழிஞ்சுது. 28 மணி நேரம் நின்னுட்டே போக முடியாதுனு, மாற்று ரெயில் ஏற்பாடு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கல. ஒருத்தரு மேல ஒருத்தரு படுத்துகிட்டும், நின்னுக் கிட்டும் போக முடியுமா? அதிகாரிங்க இந்த மாதிரி போவாங்களா? இது சம்பந்தமா கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்கோம்'' என்றார் ஆவேசமாக.

திட்டமிடாத அதிகாரிகள்... பாதியில் திரும்பிய விவசாயிகள்...

இத்தனை களேபரங்களையும் சமாளித்து, நாக்பூர் வரை சென்று கண்காட்சியைக் கண்டுவந்த விவசாயி களில் ஈரோடு மாவட்டம் விஜயமங் கலத்தைச் சேர்ந்த நல்லசிவம், ''பெண் விவசாயிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் பெட்டிகள் நிரம்பி வழிந்தன. அதில் இருந்தவர்களில் 80 சதவிகிதம் பேர் கரைவேட்டி கட்டிய ஆளும்கட்சி பிரமுகர்கள். அவர்கள் செய்த அடாவடித்தனம் சொல்லி மாளாது. பயங்கர குடிபோதையில் இருந்தவர்கள், நிஜமான விவசாயிகளை போலீஸ் மூலமாக அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே விரட்டி அடித்தனர். தாளவாடி பகுதியைச் சேர்ந்த 8 விவசாயிகள் அரக்கோணத்திலும், இரண்டு பெண்கள் உள்பட 6 விவசாயிகள் வேலூரிலும், பெட்டியை விட்டு இறக்கி விரட்டப்பட்டனர். நாக்பூர் செல்லும் வரை 50 பேர் அமரும் பெட்டியில் 150 விவசாயிகள் கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் போல அடைப்பட்டு உட் கார்ந்தே பயணித்தோம்.

'ஆத்மா' நிதியில் இருந்து நாள் ஒன்றுக்கு தலா 600 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு மொத்தம் 3,600 ரூபாய் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட வேண்டும். இதுக்காக ரசீதில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர். ஆனால், விவசாயிகளுக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டதற்கு, சாப்பாட்டுச் செலவு, தங்கும் விடுதிக் கட்டணம் என்று மழுப்பலான பதிலே வந்தது'' என்றார் நொந்து போனவராக!

திட்டமிடாத அதிகாரிகள்... பாதியில் திரும்பிய விவசாயிகள்...

காஞ்சிபுரம் மாவட்டம், பட்டு முடையார்குப்பம் முன்னோடி விவசாயி மனோகரன், ''கண்காட்சியை 11-ம் தேதி ஒரு நாள் மட்டும்தான் பார்வையிட அனுமதிச்சாங்க. அதுவும் சாயந்திரம் 4 மணிக்கு ரயில் கிளம்பும்னு சொன்னதால அவசர அவசரமா பார்த்துட்டு கிளம் பிட்டோம். 750 ஸ்டால்கள 6 மணி நேரத்துல நாங்க எந்த லட்சணத்துல பார்த்திருப்போம்னு நீங்களே புரிஞ்சுக் கோங்க'' என்றார் வேதனை பொங்க!

தமிழக வேளாண்துறை அமைச்சர் தாமோதரனிடம் இதுகுறித்துக் கேட்ட போது, ''அனைத்து விவசாயிகளுக்கும் படுக்கை வசதியுடன் கூடிய 4 ரயில்களை ஒதுக்குமாறு கேட்டிருந்தோம். கடைசி யில் 2 ரயில்கள்தான் ஒதுக்கப்பட்டன. அதுவும் பிப்ரவரி 4-ம் தேதிதான் தகவல் தெரிவித்தார்கள். அதற்குள் கண்காட்சி யில் கலந்துகொள்ளும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இருந்தாலும், விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தோம். 'அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறோம்' என்று விவசாயிகள் கூறிவிட்டனர். சேலம் மார்க்கமாக சென்ற ரயிலில் 23 பெட்டிகளில் 3 பெட்டிகள் புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு ஒதுக்கப் பட்டதுதான் அந்த ரயிலில் கூட்ட நெரிசலுக்கு காரணம். சில விவசாயிகள் ரயிலில் முதலிலே ஏறிக்கொண்டு உட்பக்க மாக தாளிட்டுக் கொண்டனர். அதனால் மற்ற விவசாயிகள் ஏற முடியாமல் போய் விட்டது. கடைசி நேரத்தில் ஏற முடியாமல் போன விவசாயிகள் பற்றி தகவல் கிடைத்த தும், அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானே உத்தரவிட்டேன். 'கண்காட்சியை சுற்றிப் பார்ப்பதற்கு மத்திய அரசு ஒருநாள்தான் ஒதுக்கியிருந்தது. கண்காட்சியைப் பார்வையிடும் நேரத்தை நீட்டிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை'' என்றவர்,

''இந்தப் பிரச்னை குறித்து விவசாயிகள் ஏதாவது பேச வேண்டும் என்றால், மனுவோடு என்னை வந்து பார்க்கலாம்'' என்று சொன்னார்.