Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

வறண்ட நிலத்தில் உருவான கொழுஞ்சி... வி. காந்திமதி ஓவியம்: ஹரன் படம்: வீ. சிவக்குமார்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

வறண்ட நிலத்தில் உருவான கொழுஞ்சி... வி. காந்திமதி ஓவியம்: ஹரன் படம்: வீ. சிவக்குமார்

Published:Updated:

வராலறு

''நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...'’ என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மையோடு சேர்த்து தன் வாழ்க்கைக் கதையையும் எழுதி வந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார்,

39 அத்தியாயங்களை முடித்துக் கொடுத்ததோடு, மண்ணில் விதையாகி விட்டார். அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாசர்களுக்குத் தொகுத் துத் தரும் வகையில், அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, முடிந்த வரை அனைத்தையும் சேகரித்துத் தர தீர்மானித்துள்ளோம். அந்த வகையில், நம்மாழ்வாருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில், இதழ்தோறும் பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த இதழில் பேசிய காந்திமதி, தொடர்கிறார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

''அந்த சமயத்தில், தமிழ்நாடு முழுவதும் தைல மரம் வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தி வந்தது. ஆனால், ஆழ்வார் (நம்மாழ்வார்) உள்ளிட்ட எங்கள் குழுவுக்கு அதில் உடன்பாடு இல்லை. புதுக்கோட்டை பகுதி, சுதந்திரத்துக்கு முன்பு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்ட மன்னர்களுக்கு காடு வளர்ப்பில் ஆர்வம் அதிகம். ஆகையால், புதுக்கோட்டையைச் சுற்றி, காடுகளை உருவாக்கி வைத்திருந்தனர். மேலும், வறட்சியான மாவட்டம் என்பதால், நிலத்தில் மழை நீரை சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்துவார்கள். கிள்ளுக்கோட்டை பகுதியில், குத்தகைக்கு நிலம் பிடித்து, பல வகையான மரக்கன்றுகளை நட்டோம். சிறிது காலத்தில், நிலத்தின் உரிமையாளர், 'எனது நிலத்தில் மரங்களை நடவு செய்தீர்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். எப்போது பணி செய்தாலும், உள்ளூர் மக்களுடன் இணைந்து செய்வதுதான் எங்கள் பழக்கம். இந்தச் சூழ்நிலையை எங்களுடன் பணியாற்றிய சுற்றுப்புற கிராமத்து இளைஞர்களிடம் சொன்னோம். உடனே, 'கோயில் நிலத்திலும், பொது நிலத்திலும் நடலாம்’ என்றார்கள். அதன்படி பொது இடங்களில் நடத் தொடங்கினோம்.

மானாவாரி இடமும் மகத்தான இடமா மாறணும்!

அப்போது, 'உலகம்காத்தன்பட்டி அருகில் உள்ள அம்மன்குறை என்ற இடத்தில் பொது நிலம் நிறைய உள்ளது’ என்று கேள்விப்பட்டோம். அந்த இடத்தில் ஒரு காலத்தில் நிறைய மரங்கள் இருந்திருக்கின்றன. அங்கே தேவதை வழிபாடு செய்யும் பழக்கமும் இருந் துள்ளது. நாங்கள் மீண்டும் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்யப் போகிறோம் என்றதும்... சுற்றுவட்டார மக்களும் ஒத்துழைத்தனர். பெரிய அளவில் மழை நீரை சேமிக்க குளமும் அங்கு இருந்ததால், விதம்விதமான மரக்கன்றுகளை நடவு செய்தோம். இப்போது, அந்த இடத்தில் மிகப்பெரிய காடு உருவாகியுள்ளது. வெளிநாட்டினர்கூட வந்து பார்த்துச் செல்கிறார்கள். மரக்கன்றுகளை நடவு செய்யும்போது களைப்பு தெரியாமல் இருக்க, விடுகதை, பாடல், தாலாட்டு... என்று அமர்க்களப்படும். ஆழ்வாருக்கு, விடுகதை என்றால், கொள்ளைப் பிரியம். உள்ளூர் மக்களிடம், விடுகதை போடுவது, பழைய காலத்து விவசாய முறைகளைக் கேட்பது என்று கலகலப்பாகவே இருப்பார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

அடுத்ததாக, மரம் வளர்ப்பு பற்றிய விழிப்பு உணர்வு உருவாக்க, ஒடுகம்பட்டி கிராமத்தின் வறண்ட நிலத்தில்... உயிர்ச்சூழல் பண்ணையைத் தொடங்கத் திட்டமிட்டோம். 1990-ம் ஆண்டு நான், ஆழ்வார், ஆஸி மூன்று பேரும், எங்களின் சேமிப்புப் பணத்தை மூலதனமாகக் கொண்டு, முதல் கட்டமாக பத்து ஏக்கர் நிலத்தை வாங்கினோம். அதற்கு 'கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை’ என்று பெயரிட்டோம்.

'இந்தப் பண்ணை எப்போதும் வளமாக இருக்கணும். கொழுஞ்சிங்கிறது பசுந்தாள் உரச்செடி. ஒரு முறை விதைச்சிட்டா வளர்ந்துக்கிட்டே இருக்கும். அதுமாதிரி இந்த மானாவாரி நிலமும் மகத்தான இடமா மாறணும்’னு ஆழ்வார் சொல்வார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

உயிர்ச்சூழல் விவசாயம்!

புதர்ச் செடிகள் மட்டுமே வளர்ந்து கிடந்த, நிலத்தில், இன்று 60 வகையான மரங்கள் உள்ளன. ஆழ்வார் உள்ளிட்ட எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பு... இன்று, பலருக்கும் வழிகாட்டும் பயிற்சி மையமாக மாறி உள்ளது. கொழுஞ்சி பண்ணைக்கு உலகின் பல மூலைகளில் இருந்தும் பயிற்சிக்கு வருகிறார்கள். இன்று 30 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது, பண்ணை. தொடங்கிய புதிதில் காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம்... போன்ற பயிற்சிகளைக் கொடுத்தோம். தொண்டு நிறுவன களப்பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அடுத்தக் கட்டமாக குடும்பம் தொண்டு நிறுவனமும், லீசா நெட்வெர்க், ஏ.எம்.இ. (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீமீ, விணீஸீ ணீஸீபீ ணிநீஷீறீஷீரீஹ்) அமைப்பும் இணைந்து 'உயிர்ச்சூழல் விவசாயம்’ என்ற சான்றிதழ் பயிற்சியைத் தொடங்கினோம்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இயற்கை உரம், மண்புழுவின் பயன்பாடு, மூலிகைப் பூச்சிவிரட்டி... என செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்கும் விஷயங்களாக விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்தோம். தமிழ்நாட்டில் இந்தச் சான்றிதழ் பயிற்சியை இயற்கை விவசாயத்தின் முதல் மைல் கல் என்றும்கூட சொல்ல முடியும். வெறுமனே, ஏட்டுக்கல்வியாக இல்லாமல் செய்முறைப் பயிற்சியுடன் இருந்தது. முதல் கட்டமாக சான்றிதழ் பயிற்சியை முடித்தவர்களும், பயிற்சி கொடுத்தவர்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதை 'உயிர்ச்சூழல் விவசாயம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டோம். இயற்கை விவசாயம் பற்றி தமிழில் அனுபவப் பகிர்வுடன், வெளிவந்த முதல் புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்புத்தகம் இயற்கை விவசாயத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அரிச்சுவடியாக இருந்தது.

சான்றிதழ் பயிற்சியிலும், புத்தக உருவாக்கத்திலும் ஆழ்வாரின் கைவண்ணம் தனித்துத் தெரியும். இன்று இயற்கை விவசாயம் என்றால், மரியாதையாகப் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனால், நாங்கள் பணியைத் தொடங்கிய காலத்தில் அது மனநலம் சரியில்லாதவர்களின் பிதற்றல் விஷயமாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், நாங்கள் எங்கள் பசுமைப் பயணத்தைத் தொடர்ந்தோம். அந்தப் பயணம், பயனுள்ள விஷயங்களை விதைத்துச் சென்றுள்ளது என்பதை நினைக்கும்போது, பெருமையாக உள்ளது.

ஒரு கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவன பணி செய்வதற்காக நான் தமிழகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால், ஆழ்வாரும், ஆஸியும், பல நண்பர்களும் இயற்கை விவசாயப் பணிகளைத் தொடர்ந்தார்கள்'' என்று நெகிழ்ந்தார், காந்திமதி.

வறண்ட நிலத்தில் அமைந்த 'கொழுஞ்சி' பண்ணையை வளர்த்தெடுக்க, தன் அளவில் நம்மாழ்வார் ஆற்றிய பணிகள் அளவில்லாதவை. அதைப் பற்றி...

அடுத்த இதழில்...பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism