Published:Updated:

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

காசி. வேம்பையன் படங்கள்: க. தனசேகரன், எஸ். தேவராஜன்

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

காசி. வேம்பையன் படங்கள்: க. தனசேகரன், எஸ். தேவராஜன்

Published:Updated:

 அறிமுகம்

ஆறு சுவைகள் இருந்தாலும், உணவில் பெரும்பாலும் உவர்ப்புச் சுவையையும் காரச்சுவையையும்தான் அனைவரும் விரும்புவார்கள். காரம் இல்லாத ஒரு கவளம் சோறுகூட பலரின் தொண்டைக்குள் இறங்காது. காரச்சுவைக்காக பரவலாக நாம் பயன்படுத்துவது, மிளகாயைத்தான். மிளகாயில் சாத்தூர் மிளகாய், ராமநாதபுரம் முண்டு, குடமிளகாய், ஊசி மிளகாய், பூத் ஜலக்கியா... என்று, தன்மை மற்றும் விளையும் இடங்களைப் பொறுத்து பல ரகங்கள் உள்ளன. இவற்றில், 'நெய் மிளகாய்' என்று ஒரு ரகமும் உள்ளது. இதை, சமையலுக்கு அப்படியே பயன்படுத்தும்போது லேசாக நெய் மணம் வீசுவதால், இதற்கு இப்படியொரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஏற்காடு, ஊட்டி, மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் வீட்டுப்பயிராக இந்த நெய் மிளகாய் தற்போது பயிரிடப்படுகிறது.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஏற்காடு பகுதிக்குச் சென்ற நாம், முருகன் நகரில் வசிக்கும் தெய்வானை வீட்டுக்குச் சென்றபோது, ''தமிழ்நாட்டுல இருந்து இலங்கைக்கு நிறைய பேர் வேலைக்குப் போனாங்க. அப்படிப் போனவங்கள்ல பலர், அங்க ஏற்பட்ட பிரச்னை காரணமா திரும்பவும் தாயகத்துக்கே வந்துட்டாங்க. இப்படி வேலைக்குப் போன நாங்க, 1972-ம் வருஷம் இந்திரா காந்தி ஆட்சியில இருந்த சமயத்துல இந்தியாவுக்கே திரும்பி வந்தோம். கூடவே அங்க இருந்து, நெய் மிளகாய் விதைகளையும் எடுத்து வந்தோம். இதை அங்க 'மூட்ட மிளகாய்’னு சொல்வாங்க. அதை இங்க விதைச்சதுல... அங்க, இங்கனு பரவிடுச்சு.

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

இலங்கையில எல்லார் வீட்டுலயும் 10 சென்ட், 20 சென்ட் அளவுல வீட்டுத் தோட்டம் போட்டு, தேவையான காய்கறிச் செடிகளை வளர்ப்பாங்க. அதுல இந்த மிளகாயும் கட்டாயம் இருக்கும். ஒரு மிளகாய் செடியே ஒரு குடும்பத்தோட தேவைக்குப் போதும். அந்தப் பழக்கத்துலதான் இப்பவும் இதை வளர்த்துட்டு இருக்கேன். இது நல்ல காரமா இருக்கறதால... குறைவா பயன்படுத்தினாலே போதும். இதுல மோர் மிளகாய், புளி மிளகாய் வத்தல் எல்லாமே போடலாம்'' என்றார்.

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

இதேபகுதியைச் சேர்ந்த நாகம்மா, ''இதுல சமைச்சா... நல்ல டேஸ்ட் கிடைக்குது. ஒரு செடியில ஆறு ஏழு மாசத்துக்கு மிளகாய் கிடைக்கும். வருஷத்துக்கு ஒருதடவை அழிச்சுட்டு, திரும்பவும் புதுசா நடணும். ஒரு செடியில மொத்தமா மூணு கிலோ அளவுக்கு மிளகாய் கிடைக்கும். மழைக்காலத்துல நல்லா காய்க்கும். இதுக்கு பெருசா உரமெல்லாம் தேவையில்ல. வெறும் தொழுவுரத்தை வெச்சாலே தளதளனு வளர்ந்து வந்துடும்'' என்றார்.

ஏற்காடு மலை படகுத்துறை அருகே பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்து வரும் தீபா, ''இதுக்கு 'பம்பர மிளகாய்'னும் ஒரு பேர் இருக்கு. இந்த எட்டு வருஷமா விற்பனைக்கும் வந்திட்டிருக்கு. ஒரு கிலோ மிளகாய் 20 ரூபாயில இருந்து 50 ரூபாய் வரைக்கு விற்பனையாகும். மழைக்காலத்துலதான் அதிகமா வரும். இந்த வருஷம் மழை குறைவா இருக்கறதால அவ்வளவா வரத்து இல்லை'' என்று சொன்னார்.

இந்த ரகத்தைப் பற்றி ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மற்றும் காய்கறிகள் துறை பேராசிரியர் முனைவர் புகழேந்தியிடம் கேட்டபோது, ''கேப்சிகம் சைனென்ஸ் (சிணீஜீsவீநீuனீ நீலீவீஸீமீஸீsமீ) எனும் இனத்தைச் சேர்ந்ததுதான் இந்த 'நெய் மிளகாய்’. இதன் பூர்வீகம், அமெரிக்காவுக்கு அருகில் உள்ள டிரினிடாட் தீவில் உள்ள மொருகா என்கிற மாவட்டம். இங்கு இருந்துதான் பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. வெப்பமண்டல நாடுகளில், மிதவெப்பம் இருக்கும் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மிளகாய் 17 முதல் 32 டிகிரி வெப்பநிலையில் வளரும் தன்மை கொண்டது.

இதை நம் ஊரில்  பெரும்பாலும் வீடுகளில் தான் வளர்க்கிறார்கள். அதிக காரம் கொண்ட இந்த மிளகாயில் தயாரிக்கப்படும் மசாலா, நல்ல மணத்துடன் இருக்கும். இந்த மிளகாயிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த மிளகாய்ச் செடியின் ஆயுட்காலம் ஓர் ஆண்டு. 4 அடி முதல் 5 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது. நடவு செய்த மூன்று மாதங்களில் காய்க்க ஆரம்பிக்கும். ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காய்ப்பு நன்றாக இருக்கும். கோடைக் காலங்களில் காய்ப்பு குறைந்து விடும்.

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

தமிழ்நாட்டில் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், குன்னூர் ஆகிய  மலைகளில் இருக்கும் விவசாயிகள்... அவர்களின் தேவைக்காக மட்டும் இந்த மிளகாய் ரகத்தை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கின்றனர். இந்த ரக மிளகாய்களை அதிகமான அளவில் சாகுபடி செய்து, நேரடியான விற்பனையில் இறங்கினால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,
புகழேந்தி,
செல்போன்: 94434-98469

கின்னஸ் சாதனை!

கமகமக்கும் நெய் மிளகாய்...கூடுதல் காரம்... கூடுதல் மணம்..!

மிளகாயின் காரத்தன்மை 'ஸ்கோவில் ஹீட் யூனிட்’ (Scoville Heat Units)  எனும் அலகில் அளக்கப்படுகிறது. தமிழ்நாட்டுல 0 யூனிட் அளவிலிருந்து 30 ஆயிரம் யூனிட் அளவு வரை உள்ள மிளகாய் ரகங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2011-ம் ஆண்டு சராசரியாக 10 லட்சத்து 41 ஆயிரத்து 427 யூனிட் அளவு காரத்தன்மை கொண்ட வடஇந்தியாவைச் சேர்ந்த 'பூத் ஜலக்கியா’ மிளகாய்க்கு உலகிலேயே காரமான மிளகாய் என்று கின்னஸ் விருது கிடைத்தது. 2012-ம் ஆண்டு அந்த சாதனையை 'நெய் மிளகாய்' முறியடித்தது. 'டிரினிடாட் மொருகா ஸ்கார்ப்பியன்’(trinidad moruga scorpion) என்று அழைக்கப்படும் நெய் மிளகாயின் கார அளவு, 14 லட்சத்து 69 ஆயிரத்து 700 யூனிட். 2013-ம் ஆண்டு 'கரோலீனா ரீப்பர்’ (Carolina reaper)  என்கிற ரகம், நெய் மிளகாயின் சாதனையை முறியடித்துவிட்டது!

ஆராய்ச்சி!

இந்த நெய் மிளகாய் ரகம் பற்றி நமக்குத் தகவல் சொன்னவர், 'பத்மஸ்ரீ’ விருது பெற்றிருக்கும் புதுச்சேரி, வெங்கடபதி. இதன் மூலம் புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், ''சில மாதங்களுக்கு முன்பு காட்டுக் கனகாம்பர ரகங்களைத் தேடி, மூணாறு மலைப் பகுதிக்கு போயிருந்தோம். அங்கே வித்தியாசமான ஒரு மிளகாய் ரகம் இருந்துச்சு. அந்த மிளகாய் ரகத்துல ஒரு கிலோ வாங்கிட்டு வந்து சமைச்சு, சாப்பிட்டுப் பார்த்தோம். நெய் வாசனையோட, காரமும் இருந்துச்சு. சில மிளகாய்களை நண்பர்கள்கிட்ட கொடுத்து, சமைத்துப் பார்க்கச் சொன்னோம். அவங்களும் சுவையாவும், மணமாவும் இருக்குனு சொன்னாங்க. பிறகு, இந்த மிளகாய் ரக விதைகளை முளைக்க வைச்சு... சோதனை செய்துட்டிருக்கேன். அணுக்கதிர் வீச்சு மூலமாவும், 'பரமக்குடி மிளகாய்’ ரகத்தோட இணைச்சும் புதிய மிளகாய் ரகம் உருவாக்கவும், முடிவு செய்திருக்கேன்'' என்றார், வெங்கடபதி.