Published:Updated:

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

ரத்தமும் சதையுமா கிடந்ததைப் பார்த்து, எங்களுக்கு நெஞ்சே வெடிச்சிடுச்சு!கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

ரத்தமும் சதையுமா கிடந்ததைப் பார்த்து, எங்களுக்கு நெஞ்சே வெடிச்சிடுச்சு!கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

 போராட்டம்

வேற்றுக்கிரகத்தில் வசிக்கும் மனிதன் ஒருவன், அங்கே கடும்தவம் புரிகிறான். அவன் எதிரே காட்சி அளிக்கிறார், கடவுள். 'பூலோகத்தில் சில காலம் வசிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால ஆசை. அதற்கு அனுமதி அளித்து, பெருந்துணை புரிய வேண்டும்’ என வரம் கேட்கிறான், அவன். 'பூலோகத்தில் வசிக்கும் மக்களுக்கு, எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன்’ என சத்தியம் செய்து கொடுத்தால், இப்போதே உன் ஆசை நிறைவேற்றப்படும்’ என்கிறார், கடவுள்.

'நான் மனதளவில்கூட, யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டேன். எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தால், அப்போதே என்னை நீங்கள் அழித்து விடலாம்’ என்று உறுதியளித்து, அந்த ஒப்பந்தத்தோடு பூலோகம் வருகிறான், வேற்றுக்கிரகவாசி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூலோகத்தில் உள்ள மக்கள், ஆரவாரத்தோடு வரவேற்கிறார் கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறான். முடிந்த உதவிகளைச் செய்கிறான். 6 மாதங்கள் கடந்தன. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. நட்பு தொடர் கிறது. இந்நிலையில், அங்குள்ள மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை மங்கி, கண்கள் குருடாகின்றன. பலர், மூச்சுத்திணறலுக்கு ஆளாகி, மரணத்தைத் தழுவுகிறார்கள். ஊரே சோகத்தில் உறைகிறது.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

'என்ன காரணம்?' என மருத்துவர் குழு ஆய்வு செய்யும்போது... வேற்றுக்கிரகத்து மனிதனின் கண்களில் உள்ள ஒரு மெல்லிய ஒளிக்கீற்றினைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அவனுடைய சுவாசக்காற்றை ஆய்வு செய்தவர் கள், அதிர்ச்சியில் உறைகிறார்கள். இவனுடைய பார்வையும் சுவாசமும்தான் ஊர்மக்களைப் பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள். இதனால், அவன் மீது கடவுள் கடும்கோபம் கொள்கிறார்.

'என் கண்களின் இயல்பு இது... சுவாசத்தின் இயல்பும் இதுதான். நான் யாருக்கும் தீங்கு நினைத்தால்தான் என்னை நீங்கள் அழிக்க முடியும். இதுதான் ஒப்பந்தம்’ என கடவுளின் வாயை அடைத்துவிட்டு, பூலோகத்திலேயே இருந்து விட்டான் அவன். பதறிப்போன கடவுளால், அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இந்தக் கதைதான் நாடு முழுக்கவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

'நம்முடைய அரசாங்கமே மக்களை அழிக்க நினைக்குமா? பெரிய அளவுல முதலீடு செஞ்சு, அரசே ஒரு திட்டத்தைக் கொண்டு வருதுனா, கண்டிப்பா அதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது’

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

- இப்படி அப்பாவித்தனமாக என்னிடம் கேட்பவர்களுக்கு... இந்தக் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

'சரி, மக்களை அழிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தோடுதான் மீத்தேன், நிலக்கரி, பெட்ரோல்-கேஸ் எடுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றனவா?' என்று கேட்டால்... நேரடியாக 'ஆம்’ என்று பதில் சொல்லிவிட முடியாது. அது விவாதத்துக்குரிய விஷயம். அதேசமயம் இத்திட்டங்களால் உருவாகும் விளைவுகள்... பயங்கரமானவை என்பது மட்டும் நிதர்சனம். அதை யாராலும் மறுக்க முடியாது.

'நூறு பேர் வாழறதுக்காக, நாலு பேர் உயிரை விட்டா தப்பில்லையே!' என்று நியாயம் பேசுபவர்களும் இங்கே இருப் பார்கள். ஆனால், இங்கே நடப்பது... நான்கு பேர் வாழ்வதற்காக நூறு பேரைக் கொல்லும் வேலைதான் என்பதை அனைவருமே உணர வேண்டும். ஆம், வளம்கொழித்துக் கொண்டிருக்கும் விவசாய பூமியை நம்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சம் மக்களையும்... அவர்களின் வாழ் வாதாரங்களையும் இந்தத் திட்டம் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது என்பதில் ஐயமேதும் இல்லை.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

'கடலில் அலைகள் சீறுவதும், எரிமலையில் தீப்பிளம்புகள் ஊற்றெடுப்பதும் எப்படி இயல்போ... அதேபோல இப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டும்போது... சுற்றுச்சூழல் மாசுபடுவது, மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவது, உச்சபட்சமாக மனித உயிர்களுக்கு உலை வைப்பது எல்லாமே இயல்பு'தான் என்று சொல்லுமளவுக்கு எதிர் விளைவுகள் மோசமாகவே இருப்பதுதான் நம்முடைய அனுபவங்கள்!

திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி, கமலாபுரம், அடியக்கமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் அமைந்திருக்கும் விளை நிலங்களில்.... ஊரையே விழுங்கும் ராட்சத அனகோண்டா பாம்புகளாக, பெட்ரொல்-கேஸ் குழாய்கள் ஊர்ந்து செல்கின்றன. ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள இக்குழாய்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அத்தனை எளிதான காரியமல்ல. இக்குழாய்களைக் கண்டு மக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ''பாதுகாப்பற்ற முறையில் பல இடங்களில் இக்குழாய்கள் வயல்கள் மற்றும் சாலைகளுக்கு மேலேயே செல்கின்றன. இதைப் பற்றியெல்லாம் அந்நிறுவன அதிகாரிகள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை'' என கொந்தளிக் கிறார்கள், இப்பகுதி மக்கள். 'இந்தக் குழாய்களில் இருந்து, எப்போது வேண்டுமானாலும் கசிவு ஏற்பட்டு, உயிர்களுக்கு உலை வைக்கக்கூடும்’ என்ற பயத்தோடுதான் நட மாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக ஏற்கெனவே நிகழ்ந்துள்ள சில சம்பவங்கள் நம்மை மிரட்சியில் உறைய வைக்கின்றன.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

மூன்றாண்டுகளுக்கு முன்பு... அதிகாலைப் பொழுதில் பயங்கரச் சத்தத்துடன் பெரும் வெடிச்சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி, மக்களைக் குலைநடுங்க வைத்தது. உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் ஆனந்தராஜ், அந்தக் கொடூரமான நெருப்பில் சிக்கி, உடல் கருகி உயிர் இழந்திருக்கிறான். அதைப் பற்றி பேச்செடுத்தாலே... ''அய்யய்யோ... அந்தக் கொடுமையைக் கேக்காதீங்க'' என தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார், ஆனந்தராஜின் அக்கா கீதா. அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.

''ரத்தமும் சதையுமா அவன் கிடந்ததைப் பார்த்து, எங்களுக்கு நெஞ்சே வெடிச்சுடுச்சு. அவன் உடம்புல ஒரு இடத்துலகூட, தோல் முழுசா இல்லை. அவன் பட்ட வேதனையை வார்த்தை யால சொல்ல முடியல. துடி துடிச்சி, ஊசலாடி உயிர் போச்சு'' என கதறி அழுதார் தாய் லெட்சுமி.

ஆட்டிப்படைக்கும் ஏழ்மை யினாலும், வதைத்தெடுக்கும் உடல் உபாதைகளாலும் பரிதாப மாகத் தோற்றமளிக்கும் தந்தை பக்கிரிசாமி, ''எங்களுக்கு அவன் தான் ஒரே ஆண் வாரிசு. நான் கூலி வேலைக்குப் போயி படாதபாடுபட்டு, ரெண்டு பொண்ணுங் கள கல்யாணம் பண்ணி கொடுத்தேன்.

ஆனந்த் வளர்ந்து, வேலைக்குப் போயிட்டா கஷ்ட மெல்லாம் தீர்ந்துடும்... கவலை இல்லாம காலத்தைக் கழிக்க லாம்னு நம்பிக்கையோடு இருந் தோம். எல்லாம் போச்சு. இப்ப என்னால வேலைக்குப் போக முடியல. என்னோட இரண்டு கால்லயுமே ஆணிக்கால் நோய் பாதிச்சுருக்கு. மனைவிக்கும் பலவீனமான உடல்நிலை. அதோடதான் கூலி வேலைக்குப் போயி, குடும்பத்தைக் காப்பாத்திக் கிட்டு இருக்கு. ஆனந்தராஜ் இறந்துபோனதுக் காக, ஒ.என்.ஜி.சி-காரங்க ஒண்ணரை லட்ச ரூபாய நஷ்டஈடு கொடுத்தாங்க. இது ரொம்ப குறைவான தொகைனு ஊர் மக்கள் பிரச்னை செஞ்சதால, மாசம் நாலாயிரம் ரூபாய் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டப் பட்டுதான் காலத்தை ஓட்டிட்டிருக்கோம். இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுங்கனு அதிகாரிகள்கிட்ட கேக்கப்போனேன். கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளி, அவமானப்படுத்திட்டாங்க'' என நொறுங்கி அழுததைப் பார்க்க பொறுக்கவில்லை எனக்கு.

இதே கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சேதுபதி, நெருப்பில் சிக்கியதில் உடல் முழுவதும் உருக்குலைந்து, கரிக்கட்டையாகிவிட... மிச்சமிருக்கும் உயிரோடு நடைபிணமாகி நிற்கிறான். உடல் எங்கும் தீக்காயத் தழும்புகள். காதுகள் முழுவதுமாக தீயில் கருகியதால், அந்தப் பகுதியே வெற்றிடமாக இருக்கும் சேதுபதியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

''அப்ப நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தேன். நானும், ஆனந்தராஜூம் டாய்லெட் போறதுக்காக, வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கினோம். கொஞ்ச நேரத்துல, அங்க இருக்கிற குழாய்ல இருந்து வெடிச் சத்தத்தோடு, நெருப்புப் புடிச்சி, எங்க உடம்பு முழுக்க எரிய ஆரம்பிச் சிடுச்சு. பாவம், அவன் செத்துப்போயிட்டான். நான், ஆறு மாசம் வரைக்கும் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதுக்குப் பிறகு கூட, உடம்பு முழுக்க புண்ணாதான் இருந்துச்சு. பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சும் கூட, என்னால மத்தவங்க மாதிரி வர முடியல...''

-சேதுபதி சொல்லச் சொல்ல... என் கண்களில் நீர்த்துளிகள்.

''என்னோட மருத்துவ சிகிச்சை செலவுகளை ஒ.என்ஜி.சி. ஏத்துக்கிச்சு. ஆனா, நஷ்டஈடா மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கொடுத்துக்கிட்டு இருக்காங்க'' என்று சொல்லும் சேதுபதி, தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். ஆனால், 'இதே தோற்றத்தோடு எப்படி கல்லூரிக்குச் செல்லப் போகிறோம்?' என்கிற கவலை, இப்போது சேதுபதியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!

- பாசக்கயிறு நீளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism