Published:Updated:

கழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..!

விஷ்வா படங்கள்: வீ. சக்திஅருணகிரி

கழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..!

விஷ்வா படங்கள்: வீ. சக்திஅருணகிரி

Published:Updated:

 மாற்று வழி

வீடுகளில் சமையலறை, குளியலறை ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கழிவுநீர்தான், பெரும்பாலான கிராமத்து வீட்டுத் தோட்டங்களுக்கு ஒரு காலத்தில் பாசன நீர். ஆனால், காலப்போக்கில் கிராமங்களிலும் 'பொல்லாத நாகரிகம்' எட்டிப் பார்க்க... வீட்டுத்தோட்டங்கள் காணாமல் போனதொருபக்கமிருக்க..., கழிவுநீரை வீணே சாக்கடை அல்லது சாலைகளில் ஓடவிடுவது மறுபக்கம் நடக்க ஆரம்பித்துவிட்டது. காரணம்... கழிவுநீர் என்றாலே, அருவெறுப்பாக பார்க்க ஆரம்பித்ததுதான். இந்நிலையில், தேனி மாவட்டம், பூமலைக்குண்டு விவசாயி அம்போதி, கழிவுநீரை மொத்தமாக விவசாய நிலத்துக்குப் பயன்படுத்தி, அருமையாக விளைச்சல் எடுத்து வருகிறார் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!

வானம் பார்த்த பூமியான இந்தக் கிராமத்தின் கடைக்கோடியில், சுமார் 50 வீடுகள் உள்ள குடியிருப்புக்குச் சற்றுத் தொலைவில் இருக்கிறது, அம்போதியின் நிலம். 60 அடி ஆழக் கிணறு வறண்டுவிட்ட சூழ்நிலையில், வானம் பொழிந்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலை. கடந்த மூன்று ஆண்டுகளாக மழை ஏமாற்றிக் கொண்டேயிருக்க... ஒன்றரை ஆண்டுக்கு முன் அம்போதிக்கு திடீரென உதித்த யோசனைதான்... ஊரின் தெருக்களில் வீணாகத் தேங்கும் கழிவுநீரை, விவசாயத்துக்குப் பயன்படுத்தும் திட்டம்!  

கழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..!

''யோசனை தோணினதுமே தோட்டத்துல 13 அடி ஆழத்துக்கு ஒரு தொட்டி கட்டினேன். சாக்கடை முடியுற இடத்துல இருந்து தொட்டி வரைக்கும் குழாய் பதிச்சு, தொட்டிக்குள்ள வந்து தண்ணி விழற மாதிரி செஞ்சேன். குழாய்ல சல்லடை இருக்கறதால, தண்ணி மட்டும்தான் தொட்டிக்கு வரும். குப்பைகள் வராது. அந்தத் தண்ணியை வெச்சு தக்காளி பயிர் பண்ணினேன். தொட்டி முழுக்க நிரம்பினா... ஒரு ஏக்கருக்கு போதுமானதா இருக்குது. 600 பெட்டி தக்காளி கிடைச்சுது. 25 ஆயிரம் ரூபாய்க்கு வித்தேன். எந்த உரமும் போடாம, நல்ல விளைஞ்சுருந்தது, தக்காளி. இப்போ, மல்லி, அகத்தினு போட்டிருக்கேன்'' எனும் அம்போதி,

''ஊர்க்காரங்கள்ல சிலர், இப்பவும் ஏளனமாத்தான் பார்க்கிறாங்க. ஆனா, நான் அதைப்பத்தியெல்லாம் கவலைப்படுறதில்லை. இந்த ஏரியாவுலயே என் தோட்டத்துல மட்டும்தான் இப்ப விவசாயம் நடக்குதுங்கற பெருமையே போதும்'' என்றார் தெம்பாக.

கழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..!

கழிவுநீரில் விவசாயம் செய்வதெல்லாம் சரிதான். ஆனால், அதை நேரடியாகப் பயிர்களுக்குப் பாய்ச்சுவது எந்த அளவுக்கு சரி?

இயற்கை வேளாண் வல்லுநரும், மண்புழு விஞ்ஞானியுமான டாக்டர். சுல்தான் அகமது இஸ்மாயிலிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தபோது, ''எனது வீட்டில் உள்ள செடிகளுக்குக்கூட கழிவுநீரைப் பயன்படுத்துகிறேன். ஆனால், நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. சுத்திகரித்துத்தான்

கழிவுநீரில் விவசாயம்... தளதளக்கும் தக்காளி..!

பயன்படுத்துகிறேன். காரணம்... அந்தக் காலத்தில பாத்திரங்கள் கழுவவும், குளிக்கவும், துணி துவைக்கவும், இயற்கையான பொருட்களையே பயன்படுத்தினார்கள். அதனால், அந்த நீரை அப்படியே தோட்டத்துக்கு விடும்போது, பிரச்னை ஏதும் இல்லாமல் இருந்தது. வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் செழித்தன. ஆனால், தற்போது பாத்திரங்களைக் கழுவ, துணி துவைக்க, குளிக்க, தலைக்குப் போட என எந்தப் பொருளாக இருந்தாலும், அதில் ரசாயனம் கட்டாயமாக இடம்பிடித்தே இருக்கிறது. இத்தகைய ரசாயனம் கரைந்த நீரை, நேரடியாக செடிகளுக்குப் பாய்ச்சும்போது முதலில் நல்ல பலனைக் கொடுப்பதாக தெரிந்தாலும்... அந்த மண்ணில் படியும் ரசாயனப் பொருட்கள், எதிர்காலத்தில் மண் வளத்தைப் பாதித்துவிடும். மேலும் உணவுக் கழிவுகள் அழுகும் தன்மை கொண்டவை. எனவே, அந்தப் பொருட்கள் கலந்த நீரை நேரடி யாகச் செடிகளுக்குப் பாய்ச்சக் கூடாது. என்னவித கழிவுகள் அந்த நீரில் கலந்து இருக்கின்றன என்பதும் தெரியாது. எனவே, கழிவு நீரை தொட்டிக்குக் கொண்டு செல்லும் முன்னரே வாய்க்காலில் கருங்கற்கள் (ஜல்லி) இட்டு தண்ணீரை வடிகட்டவேண்டும். இந்தக் கற்களில், பாசி போல உருவாகும். அதுதான் கழிவுநீரை சுத்திகரிக்கும் பாக்டீரியா. மேலும் அந்த வாய்க்காலில் கல்வாழை நட்டால், அதுவும் நீரை சுத்த மாக்கும். அதன் பின்னர் பயிர்களுக்குப் பாய்ச்சுவது தான் சரியான முறை'' என்று சொன்னார்.

இந்தத் தொழில்நுட்பங்களை உடனடியாக அம்போதியிடம் சொன்னபோது, ''நானும் இனி கழிவுநீரைச் சுத்திகரிச்சுத்தான் பயன் படுத்தப்போறேன்'' என்று சொன்னார் அக்கறை கொண்டவராக!

தொடர்புக்கு,அம்போதி,
செல்போன்: 96002-01930