Published:Updated:

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

Published:Updated:

'பழைய கிணத்துக்குள்ள இறங்கினப்போ, விஷ வாயு தாக்கி ஒருத்தர் இறந்துட்டார்'ங்கிற மாதிரியான செய்தி, அப்பப்போ நம்ம காதுல  விழறது வாடிக்கையா இருக்கு. குறிப்பா, இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்கள்லதான் அதிகமா நடக்கும். கிராமப்பகுதியில பெரும்பாலும், இப்படி சம்பவம் நடக்காது. அதுக்குக் காரணம், நம்ம முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகளை, இன்னமும் கிராமங்கள்ல கடைபிடிக்கறதுதான்.

காத்தோட்டம் இல்லாத கிணறு, நெல் சேமிச்சி வெக்கிற குதிர் இதுலயெல்லாம் மீத்தேன்... மாதிரியான விஷ வாயுங்க உருவாகி இருக்கும். முன்னெச்சரிக்கை இல்லாம கிணத்துக்குள்ளயோ, குதிர்குள்ளயோ இறங்கினா, பிராண வாயு கிடைக்காம மூச்சுத்திணறல்தான் வரும். அப்படிப்பட்ட கிணறுகள்ல இறங்குறதுக்கு முன்ன.. பெரிய அகல் விளக்கை நல்லெண்ணெய் ஊத்தி எரிய வெச்சு, கயிறு மூலமா அதை கிணத்துக்குள்ள இறக்கணும். விளக்கு எரியுறதுக்கு பிராண வாயு தேவை. அந்த வாயு கம்மியா இருந்தா... உள்ள இறக்குற விளக்கு 'பட்’னு அணைஞ்சுடும். இப்படி ரெண்டு, மூணு தடவை, முயற்சி பண்ணி... லேசா ஆட்டிக்கிட்டே விளக்கை உள்ளுக்குள்ள இறக்கினா... பிராண வாயு உள்ள போக ஆரம்பிச்சு, விளக்கு அணையாம எரிய ஆரம்பிக்கும். உள்ள இருக்குற விஷ வாயுக்களும் சேர்ந்து எரிஞ்சுடும். விஷ வாயு முழுக்க எரிஞ்சுடுச்சுனா... விளக்கு சுடர்விட்டு எரிய ஆரம்பிச்சுடும். இதுக்குப் பிறகு, தைரியமா கிணத்துக்குள்ள இறங்கலாம். இப்பவும், சேலம், தர்மபுரி பக்கமெல்லாம், இந்தப் பழக்கம் இருக்கு. இதை அக்கம்பக்கமிருக்கிறவங்கிட்ட சொல்லி வெச்சா, பல உயிர்களைக் காப்பாத்தலாம்தானே!

மண்புழு மன்னாரு

 அருவிகள்லயும், கிணறுகள்லயும் குளிக்கறப்போ... அங்க இருக்கற பாறை இடுக்குகள்ல சிலர் மாட்டிக்குவாங்க. ஆழமான தண்ணிக்குள்ள வெளிச்சம் இல்லாட்டி, அந்த மாதிரி இடுக்குல மாட்டிக்கிட்டவங்கள தேடிக் கண்டுபிடிக்கிறது, ரொம்ப சிரமமா இருக்கும். தண்ணிக்குள்ள எரியுற டார்ச் லைட்டுகள் இருந்தாலும், அவசரத் துக்கு அதை வெச்செல்லாம் தேட முடியாது. இப்படியான இக்கட்டான நேரத்துல தண்ணிக்குள்ள வெளிச்சம் கொடுக்க சுலபமான வழி இருக்கு. நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை வாய் நிறைய ஊத்தி அடக்கி வெச்சுக்கிட்டு, தண்ணிக்குள்ள இறங்கி பாறை இடுக்கு இருக்குற இடத்துல உமிழும்போது, பளீர்னு வெளிச்சம் வரும். அதை வெச்சு, ஆளைக் கண்டுபிடிக்கலாம். குற்றாலம், ஒகேனக்கல்... மாதிரியான இடங்கள்ல, அருவிகளோட பாறைகள்ல சிக்கிட்டவங்கள, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கறது, காப்பத்துறது இப்பவும் தொடருது.

 பால் கறக்குற கறவை மாடுங்க, சில நேரங்கள்ல தென்னங்குச்சி, விளக்குமாறு, தென்னை மட்டை இதெல்லாத்தையும் தேடிப்பிடிச்சு தின்னும். இப்படி சாப்பிட்டா மாட்டுக்கு, கால்சியம் பற்றாக்குறை வந்திருக்குனு அர்த்தம். அதுக்காகத்தான் இப்படிச் செய்யும். உடனடியா, கால்சியம் பற்றாக்குறையை சரி செய்யணும். இல்லாட்டி, கொஞ்ச நாள்ல மாடுக எழுந்து நிக்க முடியாம போயிடும். சில மாடுங்களுக்கு வலிப்பு வந்துடும். ஒரு கிலோ சுண்ணாம்பு 10 லிட்டர் தண்ணியில போட்டு, நாலு மணி நேரம் ஊற வெச்சு, அதுல தினமும் 200 மில்லி எடுத்து அஞ்சு நாளைக்கு, மாட்டுக்குக் கொடுத்தா... தேவையான கால்சியம் சத்து கிடைச்சுடும். இதை விட்டுட்டு இங்கிலீசு மருந்தைத் தேட ஆரம்பிச்சா, பணத்துக்கு வேட்டுதான்.

 'நம்ம நிலத்தைச் சுத்தியிருக்கிற பொருட்களை வெச்சே இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிச்சாலும், அது செடிகள்ல ஒட்டுறதுக்காக காதி சோப் வாங்கறதுக்கு கடைக்குத்தானே போக வேண்டியிருக்கு'னு சிலர் ஆதங்கப்படுறாங்க. அந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கு. பத்து லிட்டர் பூச்சி விரட்டியில, அரை லிட்டர் புளிச்ச மோரைக் கலந்து தெளிச்சா... செடிகள்ல பூச்சிவிரட்டி நல்லாவே ஒட்டிக்கும். மோர் அருமையான ஒட்டும் திரவமா இருக்கறதோட, நல்ல வளர்ச்சி ஊக்கியாவும் வேலை செய்யும். சில வைரஸ் கிருமிகளையும் விரட்டிடும்.

 'வாழை இலையில சாப்பிட்டா, உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும். உணவுல இருக்கிற விஷத்தன்மையை இது போக்கிடும். இளமை குறையாம இருக்கலாம்’னு, வாழையோட மகிமையைச் சொல்லிட்டே போகலாம். ஆனாலும், வாழை இலையோட பலனை முழுமையா பயன்படுத்துறவங்க ரொம்பக் குறைவுதான். வாழை இலையில, சூடான சோறு, குழம்பு ஊத்தி சாப்பிட்டாத்தான், இலையில இருக்குற சத்து முழுமையா கிடைக்கும். ஆறிப்போன சாப்பாட்டைச் சாப்பிட்டா... எந்தப் பலனும் கிடைக்காதுங்க.

 'லவ் பேர்ட்ஸ்’ங்கிற காதல் பறவை வளர்க்கிறவங்களுக்கான சேதி இது. காதல் பறவையில ரெண்டு, மூணு ஜோடி வாங்கிட்டு வந்து ஒரே கூண்டுக்குள்ள வையுங்க. அந்தப் பறவைங்களே, அது, அதுக்கு ஏத்த ஜோடியைத் தேடிக்கும். இதை விட்டுப்புட்டு, அந்த மஞ்ச கலரு ஆணும், பச்சைக் கலரு பொண்ணும்தான், சரியான ஜோடினு, கலரை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்காதீங்க. பாவம், பறவைகளையாவது இயற்கையா வாழ விடுங்க. இல்லைனா, ஜோடிப் பொருத்தம் இல்லாம, காதல் பறவைங்க வாடி வதங்கி, உயிரை மாய்ச்சிக்கும்.