Published:Updated:

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

பரிதாப நிலையில், பால் கூட்டுறவு சங்கங்கள்..! த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன், சு. குமரேசன்

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

பரிதாப நிலையில், பால் கூட்டுறவு சங்கங்கள்..! த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன், சு. குமரேசன்

Published:Updated:

ஒரு லிட்டர் தண்ணீர், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், கடும் சிரமங்களுக்கிடையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால், ஒரு லிட்டர் 23 ரூபாய்க்குத்தான் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு லிட்டர் பாலுக்கு 29 ரூபாய் வரை கொடுக்கின்றன, தனியார் பால் நிறுவனங்கள். இதனால், பெரும்பாலான விவசாயிகள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்க ஆரம்பித்துள்ளனர். எதிர்விளைவாக, அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன, கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்கள்.

''தனியாரிடம் குறைந்த விலைக்குக் கொடுத்து ஏமாறக் கூடாது அப்படிங்கறதுக்காகத்தான் விவசாயிகளை வெச்சு, கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினாங்க. இதுல விவசாயிகளேதான் முதலாளிகள். ஆனா, இன்னிக்கு தனியார் முதலாளிங்களோட கால்ல விழற நிலமையை அரசாங்கமே ஏற்படுத்திட்டிருக்கு'' என்று கொதிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் ராமு கவுண்டர், தொடர்ந்தார்.

''கிருஷ்ணகிரி-தருமபுரி மாவட்டத்துல, ஒரு நாளைக்கு மொத்தம் 13 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுது. இதுல 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் ஆவினுக்கு. மீதி 11 லட்சத்து 80 ஆயிரம் லிட்டரும் தனியாருக்குத்தான் போயிட்டிருக்கு. இதுக்கு காரணம் பால்ல இருக்கற சத்துகளை அளவிடும் முறைதான். தனியார் கம்பெனிகள்ல இருக்கற மாதிரி, நவீன முறைக்கு ஆவின் மாறுறதில்லை. மத்த மாநிலங்கள்ல ஐ.எஸ்.ஐ. கருவிகள் மூலமா அளவிடுறாங்க. இன்னும், ஆவின்ல எம்.ஆர்.எஃப். அப்படினு சொல்லப்படுற பழைய முறையிலதான் அளவிடுறாங்க.

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

அதனால சத்துகளோட அளவு துல்லியமா தெரியறதில்ல. அதுலயே லிட்டருக்கு 2, 3 ரூபாய் குறைஞ்சுடுது. பால் கொள்முதல் செய்யுறவங்களுக்கும் முறையா சம்பளம் கொடுக்கிறதில்ல. விவசாயிகளுக்கு முன்பணமும் கிடையாது. சரியான பட்டுவாடாவும் கிடையாது. இப்படிப்பட்ட பிரச்னைகளால... மாவட்டத்துல இருந்த 885 பால் கூட்டுறவு சங்கங்கள்ல, 400 சங்கங்கள் இப்ப இல்ல. இருக்கிற சங்கங்களும் பெயரளவுலதான் நடந்துட்டிருக்கு'' என்று வேதனை பொங்கினார் ராமு கவுண்டர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மோடிகுப்பம், முனுசாமி பேசும்போது, ''தனியார் பண்ணைகள்ல ஒவ்வொருத் தரோட பாலையும் தனித்தனியா அளந்து... கொழுப்புச்சத்து 4.2 அளவும், இதரச் சத்துக்கள் 8.4 அளவுலயும் இருந்தா, ஒரு லிட்டருக்கு 29 ரூபாய் விலை கொடுக்கறாங்க. நான் மூணு கறவை மாடு வெச்சுருக்கேன். ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் கறந்து, 20 லிட்டரை தனியாருக்கும், 20 லிட்டரை ஆவினுக்கும் ஊத்தறேன். தனியார் பண்ணையில சராசரியா லிட்டருக்கு 24 ரூபாய் கிடைக்குது. ஆவின்ல 21 ரூபாய்தான் கிடைக்குது.

தனியார் பண்ணையில, நம்ம பால்ல என்ன சத்து எவ்வளவு இருந்துச்சு, எத்தனை லிட்டர், எவ்வளவு பணம்னு பில்லாவே அச்சடிச்சு கொடுத்துடறாங்க. பத்து நாளைக்கு ஒரு தடவை பணத்தையும் கொடுத்துடறாங்க. ஆவின்ல பணப்பட்டுவாடாவுல ஒழுங்கு கிடையாது. இருபது வருஷமா ஆவினுக்கு பால் ஊத்துறேன். இதுவரை ஊக்கத்தொகை, போனஸ்...னு எதுவுமே கிடைக்கல'' என்றார். இதே கருத்தையே ஆமோதிக்கிறார்கள் நாயக்கனூரைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட பலரும்!

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே பால் கொடுத்துவரும் ராமசாமி, ''நாலு மாடு வெச்சுருக்கேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, கூட்டுறவு சங்கம் மூலமா மானியத்தில ரெண்டு மூட்டை கலப்புத் தீவனம் கொடுக்கறாங்க. ஆனா, 15 நாளைக்கு நாலு மூட்டை தீவனம் தேவை. அரசாங்கம் என்ன கணக்குல கொடுக்கிறாங்கனே தெரியல. ஒழுங்கான விலை கொடுக்காட்டியும் பரவாயில்ல.. தேவைப்படுற அளவுக்கு தீவனத்தையாவது மானியத்துல கொடுத்தா, உதவியா இருக்கும்'' என்றார் கெஞ்சலாக.

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

இதுபற்றி, அந்த கிராமத்தின் கூட்டுறவு சங்க நேரடி கொள்முதல் செயலாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது... ''தினமும் 350 லிட்டர்ல இருந்து 400 லிட்டர் வரை பால் ஏத்திட்டிருந்தோம். இப்போ 60 லிட்டர் பால்தான் வருது. சரியா பட்டுவாடா இல்லைங்கற தால தனியாருக்கு ஊத்த போயிட் டாங்க. இப்போ 11 பேர் மட்டும்தான் இங்க பால் ஊத்தறாங்க. இவங்களுக்கே கை காசைப் போட்டுதான் பணம் கொடுத்துட்டு வர்றேன்'' என்றார், பரிதாபமாக.

கிருஷ்ணகிரி-தருமபுரி மாவட்ட ஒன்றிய பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் இதைப் பற்றி கேட்டபோது, பெயரை வெளியிட விரும்பாதவராக நம்மிடம் பேசிய ஒருவர், ''ஒரு லிட்டர் பால் 23 ரூபாய். அதுல ஒன்றியத்துக்கு 10 பைசா, கொள்முதல் செய்றவங்களுக்கு 50 காசு போக, 22 ரூபா 40 பைசானு விலை நிர்ணயிக்கிறோம். கொழுப்பு, இதரச் சத்து அளவிடறதுல, பழைய முறையை மாத்தச் சொல்லிக் கேட்டிருக்கோம். மானியத்துல வழங்குற தீவனங்கள கொடுத்துட்டுதான் இருக்கோம்'' என்று மட்டும் சொன்னார்.                

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றபோது, ''பால் விலையை லிட்டருக்கு மூணு ரூபாய் உயர்த்தி சமீபத்துலதான் முதல்வர் அறிவிச்சுருக்கிறார். அதுக்கே மாசத்துக்கு 22 கோடி ரூபாய் நஷ்டம் ஆகுது. டேங்கர் லாரி வாடகை,

தாராள தனியார்...தடுமாறும் அரசு...

தொழிலாளர் கூலி, விற்பனை கமிஷன்னு பல செலவுகள் இருக்கு. தனியாரோட போட்டியைச் சமாளிக்க உடனடியா, அதேமாதிரி அரசும் இறங்கிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் செயல்பட முடியும். கிருஷ்ணகிரி-தருமபுரி கூட்டுறவு ஒன்றியத்துல பால், பால் பொருட்கள் சரியா விற்பனையாகாம இருக்குங்கறது உண்மை. அதனாலதான், பணம் பட்டுவாடா செய்யுறதுலயும் தாமதம். இப்போ, அந்தப் பொருட்களையெல்லாம் கேரளாவுக்கு அனுப்பறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டிருக்கோம். அதன் பிறகு பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு'' என்று சொன்னார்.

அம்மா தண்ணீர், அம்மா ஸ்மால் பஸ், அம்மா உணவகம், அரசு டாஸ்மாக் பார்... என தனியாருக்குப் போட்டியாக, பல தொழில்களிலும் மிரட்டும் அரசாங்கம், ஏற்கெனவே இருக்கும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் 'ஆவின்' தொழிலில் மட்டும் சறுக்கிக் கொண்டிருப்பது ஏன்? ஒருவேளை, இது விவசாயிகள் சம்பந்தபட்ட விஷயம் என்பதால், பாராமுகமா... அல்லது, தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக காட்டும் சலுகையா?