Published:Updated:

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

வெட்டுக்கூலி குறைகிறது... லாபம் கூடுகிறது..! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

வெட்டுக்கூலி குறைகிறது... லாபம் கூடுகிறது..! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:

முயற்சி

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை, இன்றைக்கு அழியும் நிலையில் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும்... முக்கியமான காரணம், பனையேறிகள் குறைந்து போனதுதான். அதைத் தொடர்ந்து, தென்னை மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருவதால்... ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கீழே நின்றுகொண்டே நீளமான கொடுவாள் மூலமாக தேங்காய் பறித்து வருகிறார்கள்.

'இது, அறுவடைக்கு சரி. மரம் பராமரிப்பு, இடுபொருள் தெளிப்பு ஆகியவற்றுக்கு என்ன வழி?’ என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில்... 'தென்னை நண்பர்கள்’ என்கிற பெயரில், கிராமத்து இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினரை மரமேறிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது, மத்திய தென்னை வளர்ச்சி வாரியம். விவசாயிகளே அவர்களது மரங்களில் ஏறி, தேங்காய் அறுவடை, மரம் பராமரிப்பு, பூச்சிவிரட்டித் தெளித்தல் போன்ற பணிகளைச் செய்யப் பயிற்சி அளித்து... மரம் ஏறும் கருவி ஒன்றையும் இலவசமாக வழங்குகிறது, இந்த வாரியம்.

'தென்னை நண்பர்கள்’ திட்டத்தின்கீழ் பயிற்சிபெற்று, தற்போது தேங்காய் அறு வடையில் ஈடுபட்டிருக்கும் திண்டுக்கல் மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி குழுவினரைச் சந்தித்தோம்.

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

மரத்துக்குக் கூலி 10 ரூபாய், 10 காய்.. படிக்காசு 100 ரூபாய்!

ஓங்குதாங்காக வளர்ந்துள்ள தென்னையில், கருவியின் உதவியுடன் ஆளுக்கு ஒரு மரமாக அறுவடையில் ஈடுபட்டிருக்க, நமக்கு இளநீரை சீவிக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார், ராமசாமி.

''நாங்க பத்து பேரும் தென்னை விவசாயிங்கதான். எங்க ஒவ்வொருத்தருக்கும் 500 மரத்துக்கு மேல இருக்கு. இதுக்கு முன்ன ஆளுங்கள வெச்சுதான் காய் வெட்டுவோம். மூணு வருஷமா மழையில்லாம மரங்களெல்லாம் வாடிக்கிடக்கு. சரியா காய்ப்பு இல்ல. ஆனா, காய் வெட்ட வர்றவங்க அதைப்பத்தியெல்லாம் கவலைப்படறதில்லை. மரத்துக்கு பத்து ரூபாய், பத்து தேங்காய் அவங்களுக்குக் கூலியா கொடுக்கணும். இதில்லாம டீ, வடை சாப்பாடு, படிக்காசுனு 100 ரூபாய் தனியா கொடுக்கணும். இவ்வளவு கொடுத்தாலும் ஒரு நாளைக்கு 40 மரத்துக்கு மேல வெட்ட மாட்டாங்க. இதனால, தேங்காய் பொறுக்குற சித்தாள் செலவு, டிராக்டர் வாடகை எல்லாம் கூடிடும்.

காய்க்கு நல்ல விலை கிடைக்கும்போது வெட்டுறதுக்கு ஆள் கிடைக்கமாட்டாங்க. இப்படி பல இம்சைகளுக்கு இடையிலதான் தென்னை விவசாயம் செஞ்சுட்டுருக்கோம்'' என்று வேதனையைப் பகிர்ந்தவர், தொடர்ந்தார்.

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

வழிகாட்டிய வேளாண் விற்பனை மையம்!

''வழக்கமா காய் வெட்டுற ஒரு ஆளு, ஆரம்பத்துல சைக்கிள்ல வந்துக்கிட்டு இருந்தாரு. அப்பறம் மொபெட்ல வந்ததாரு. அடுத்து புது பைக்ல வந்தவரு, 'அடுத்து கார்தான்’னு எங்ககிட்டயே பெருமையா சொன்னார். இந்த பஞ்ச காலத்துலயும் படாதபாடுபட்டு, பெத்த பிள்ளையைப் பாதுகாக்கற மாதிரி, இருக்கற கொஞ்ச நஞ்ச தண்ணியைக் கொடுத்து மரத்தைக் காப்பாத்திட்டு வர்ற எங்களால, பொருளாதார ரீதியா முன்னுக்கு வரமுடியல. ஆனா, காய் வெட்டுறவங்க ரொம்ப வேகமா முன்னேறிட்டு இருக்காங்க. அந்த சமயத்துலதான், வேளாண் விற்பனை துறையில இருந்து வந்து, 'தென்னை மரம் ஏற பயிற்சி தர்றோம் கத்துக்குறீங்களா?’னு கேட்டாங்க. நாங்க பத்து பேர் உடனே 'சரி’னு சொன்னோம்.

காந்திகிராமம் கே.வி.கே. (வேளாண் அறிவியல் நிலையம்) மூலமா எங்களுக்கு இந்தக் கருவியை இலவசமா கொடுத்து... அதை மாட்டுற விதம், பேலன்ஸ் செஞ்சு மரம் ஏறுற விதம்னு ஆறு நாள் பயிற்சி கொடுத்தாங்க. மரம் ஏறுறது, காய்களை இளநி, நெத்துனு அடையாளம் கண்டு பிடிக்கிறது, எந்த மாதிரி பூச்சி, நோய்களுக்கு என்ன மாதிரி மருந்து அடிக்கறதுனு மத்த பல விஷயங்களையும் தெளிவா பயிற்சியில சொல்லிக் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு, ஒரு குழுவா இணைஞ்சு, தேங்காய் இறக்கிட்டு இருக்கோம். இந்தக் கருவியை வெச்சு மரம் ஏறுறது ரொம்ப சுலபமா இருக்கு. ஒரு நாளைக்கு 80 மரத்துல இருந்து, 110 மரம் வரைக்கும் ஏறமுடியுது. எங்க தோப்புகள்ல இப்ப காய் வெட்டறதுக்கு ஆளுங்கள கூப்பிடறதில்ல. நாங்களே வெட்டிக்குறோம்'' என்ற ராமசாமி,

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

ஆண்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் மிச்சம்!

''எங்களோட தோப்புகளுக்கு நாங்க பத்து பேருமே குழுவா போய் காய் வெட்டிக்குவோம். நாங்களே மரம் ஏறுறதால மரத்துல பாலை, பன்னாடைகளைக் கழிச்சு, மரத்தையும் சுத்தமா பராமரிக்க முடியுது. உதாரணமா, 500 மரத்துல காய் இறக்கறதுக்கு 7 ஆயிரம் ரூபா பக்கம் செலவாகும். வருஷத்துக்கு ஆறு வெட்டு வெட்டுனாலும், 42 ஆயிரம் ரூபாய் தேவை. இப்ப அந்தப் பணம் எங்களுக்கு மிச்சம். எங்க தோப்புல வேலை இல்லாதப்போ, மத்த விவசாயிங்க தோப்புகள்லயும் காய் வெட்ட போறோம். மரத்துக்கு பத்து ரூபாய் மட்டும்தான் கூலியா வாங்குறோம். காய், படிக்காசு இதையெல்லாம் வாங்கறதில்ல. அதனால விவசாயிகளுக்கும் லாபம். எங்களுக்கும் ஒரு வருமானம்.

இப்போ, மத்தவங்களுக்கு பயிற்சி கொடுக்குற பயிற்றுநராவும் என்னைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. பயிற்சி கொடுக்கப் போனா, ஒரு நாளைக்கு 750 ரூபாய் சம்பளம் கொடுக்கறாங்க. வேலையில்லாம, தென்னையில வருமானமும் இல்லாம இருந்த எங்களுக்கு பயிற்சி கொடுத்து, கருவியையும் இலவசமா கொடுத்த தென்னை வளர்ச்சி வாரியத்துக்கும், கே.வி.கே. அமைப்புக்கும் நன்றி சொல்லணும்'' என்றார், நெகிழ்ச்சியுடன்.

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

சங்கமா இணைஞ்சா சாதிக்கலாம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் கே.வி.கே. மற்றும் நிலக்கோட்டை பள்ளப்பட்டியைச் சேர்ந்த 'டாபா’, (தமிழ்நாடு பீப்பிள் வெல்ஃபேர் அசோசியேஷன்) தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் மூலமாக, 'தென்னை நண்பர்கள்’ பயிற்சியை அளித்து வருகிறது, தென்னை வளர்ச்சி வாரியம். இதில், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சியை வழங்கி வரும் 'டாபா' நிறுவனத்தின் செயலாளர் பாண்டிச்செல்வியிடம் பேசினோம்.

''தென்னை வளர்ச்சி வாரியத்தோட நிதியுதவியில், எங்க அமைப்பு மூலமா... தென்னை விவசாயிகள், மகளிர் குழு பெண்கள், படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள், இளம்பெண்கள்...னு

120 பேருக்கு இதுவரை பயிற்சி கொடுத்திருக்கோம். ஒரு குழுவுக்கு இருபது பேர்னு மொத்தம் ஆறு குழுக்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கோம். முழுக்க முழுக்க தென்னை பத்தின இந்த ஆறு நாள் பயிற்சியையும், மரம் ஏற உதவுற கருவியையும் இலவசமாவே கொடுக்குது, தென்னை வளர்ச்சி வாரியம். தொழில்நுட்பப் பயிற்சியாளர்கள் காந்தி கிராமம் கே.வி.கே-ல இருந்து வர்றாங்க. பயிற்சி எடுத்துக்கிற வேலை இல்லாத இளைஞர்களுக்கு இது அருமையான தொழில்வாய்ப்பு. இப்படி பயிற்சி எடுத்துக்கிட்டவங்க 50 பேர் சங்கமா சேர்ந்து செயல்பட்டா, 50 சதவிகித மானியத்துல வேளாண் கருவிகள், வங்கிக்கடனுதவினு பல உதவிகள் கிடைக்கும்'' என்றார், பாண்டிச்செல்வி.

மரம் ஏறும் மங்கைகள்..!

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

பயிற்சி எடுத்து மரம் ஏறிவரும் பள்ளப்பட்டி, ராஜலட்சுமி, ''ஆரம்பத்துல, 'தென்னை மரத்துல ஏறுறதா?’னு பயமாத்தான் இருந்துச்சு. ஒரு விதமான பதட்டத்தோடதான் பயிற்சியில கலந்துக்கிட்டேன். ஆனா, பயிற்சி கொடுத்தவங்க, இந்தக் கருவியை வெச்சு, 'மளமள’னு ஏறுறதப் பாத்து கொஞ்சம் தைரியம் வந்துச்சு. அதோட, மரத்தோட நம்மை இணைச்சு கட்டுற பெல்ட் இருக்கறதால, 'கீழ விழுந்துடமாட்டோம்’ங்கிற தைரியம் வந்துச்சு. ரெண்டாவது நாள்லயே பயம் போயி, ஆர்வம் வந்துடுச்சு. இப்ப, இருபது நிமிஷத்துல ஒரு மரத்துல ஏறி காய் வெட்டிட்டு இறங்கிடுவேன்.

இங்க பயிற்சி எடுத்துக்கிட்ட ஏழு பெண்கள் ஒரு குழுவா செயல்படுறோம். எங்க தோப்புகள்ல மட்டுமில்லாம அக்கம்பக்கத்து தோப்புகள்லயும் காய் இறக்கப் போறோம். நாங்க ஏழு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு சராசரியா 500 மரம் ஏறிடுறோம். இதுமூலமா, கிடைக்கிற 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஏழு பேரும் பிரிச்சுக்குவோம். இப்ப உள்ளூர்ல மட்டும் வேலைக்குப் போறதால, தினமும் வேலை இருக்கறதில்லை. மாசத்துல 10 நாள்நான் இருக்கும். ஆனா, இதுவே எங்களுக்குப் போதுமானதா இருக்கு. 'பொம்பளைபிள்ளைங்க ராக்கெட்லகூட போனாலும், தென்னை மரத்துல ஆம்பளைங்க மட்டும்தான் ஏறமுடியும்’னு நினைச்சுக்கிட்டு இருந்த எங்க ஊருக்காரங்க, இப்ப நாங்க மரம் ஏறுறதை ஆச்சரியத்தோட பாக்கறாங்க'' என்றார், மகிழ்ச்சியுடன்.

வேலையில்லா கிராமப்புற இளைஞர்களுக்காக..!

பஞ்சத்தில் கைகொடுக்கும் தென்னை நண்பர்கள்...

இப்பயிற்சியை அளித்து வரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த துணை இயக்குநர் 'ஹேமச்சந்திரா’விடம் பேசினோம். ''கிராமப்புறங்களிலுள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அவர்கள் நகரங்களை நோக்கி நகர்வதைத் தடுக்கவும், அதேநேரத்தில் தென்னை விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கவும்தான் 'தென்னை நண்பர்கள்’ எனும் இந்தத் திட்டம். 18 வயதிலிருந்து 41 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆண், பெண் இருபாலரும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இப்பயிற்சி எடுத்துக் கொண்டவர் கள் தினமும் குறைந்தது 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இங்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பலர் கேரளாவுக்குச் சென்று மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் 1,520 நபர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள கே.வி.கே., எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையங்கள், முன்னோடித் தொண்டு நிறுவனங் கள், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். பயிற்சி முடித்தவர்களின் புகைப் படம், தொடர்பு எண் ஆகியவற்றை தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் வெளியிடு வதால், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவில் எங்கு தேவை இருக்கிறதோ அந்தப் பகுதியில் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

தேங்காய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலமாக எங்களை அணுகும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளும், ஆலோசனைகள் வழங்குகிறோம். இதுபோன்ற கூட்டமைப்பு ஏற்படுத்த குறைந்தது ஒரு லட்சம் தென்னை மரங்கள் இருக்க வேண்டும்'' என்றவர்,

''தென்னை விவசாயிகளுக்காக இதுபோல பல்வேறு திட்டங்களை, தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தி வருகிறது. அவற்றை தென்னை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்.

 தொடர்புக்கு,
ராமசாமி, செல்போன்: 96882-16058. 
பாண்டிச்செல்வி,
செல்போன்: 99655-66950
தென்னை வளர்ச்சி வாரியம், சென்னை. மண்டல அலுவலகம்,
தொலைபேசி: 044-26164048.