Published:Updated:

நாட்டு நடப்பு

விதைகளைக் காக்க ஒரு விழா... 2,500 பாரம்பரிய விதைகளின் அணிவகுப்பு!

நாட்டு நடப்பு

விதைகளைக் காக்க ஒரு விழா... 2,500 பாரம்பரிய விதைகளின் அணிவகுப்பு!

Published:Updated:

 பசுமைக் குழு

நமது பாரம்பரிய விதைகளையும் நமது உயிரி பன்மயத்தையும் காக்கும் வகையில், நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் (ASHA) சார்பில்... கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை டில்லியில், விதைப் பாதுகாவலர்கள் சந்திப்பு மற்றும் விதைக் கண்காட்சி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான விதைப் பாதுகாவலர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.  

முதல் இரண்டு நாட்கள் விதைப் பாதுகாவலர்கள் கலந்துரையாடலும், கடைசி இரண்டு நாட்கள் கண்காட்சியும் நடைபெற்றது. சந்திப்பின் போது, 'பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக விவசாய சமுதாயம் பாதுகாத்து வரும் பாரம்பரிய விதைகளை, பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிக்குத் தாரை வார்க்க முடியாது. நமது அடுத்தத் தலைமுறைக்கு காத்து அளிக்க வேண்டிய சொத்தை காப்புரிமை மற்றும் வியாபார சூழ்ச்சிகளுக்கு பலி கொடுக்க முடியாது. பாரம்பரிய விதைகள் நமது பிறப்புரிமை, இவற்றை எப்படியேனும் காப்போம்' என்று பெரும் எழுச்சியுடன் முழங்கினர்.

அதோடு, 'எங்களது விதை உரிமையை யாரும் பறிக்க முடியாது, பறிக்க விடவும் மாட்டோம். பாரம்பரிய விதைகளையும் உயிரி பன்மயத்தையும் காப்போம். விதைகளை உரிமையுடன் விதைக்கவும், சேமிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் சீரிய முறை யில் விற்பனையை மேற்கொள்வோம்' என உறுதி எடுத்துக் கொண்டனர்.

நாட்டு நடப்பு

விதைக் கண்காட்சியில், இமயமலை-விஜய் ஜர்தாரி, ஒடிசா-நட்பர் சாரங்கி, பேராசிரியர் தேபல் தேப், மேற்கு வங்காளம்- வேளாண் உதவி இயக்குநர் டாக்டர். அனுபம் பால், கர்நாடகா- அப்துல் கனி, மகாராஷ்டிரா-கோப்ரா கடே, வாரணாசி- ஜெயபிரகாஷ் சிங், முசிறி-யோகநாதன், ஆதிரங்கம்-கிரியேட் அமைப்பு, ஆரோவில்- தீபிகா, புதுச்சேரி-முன்னோடி விவசாயி கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் கலந்துகொண்டு... பல்வேறு புதிய காய் வகைகள், மிகவும் அரிதான மலைப் பழங்கள் மற்றும் விதைகள், மலை வாழ் சமூகங்கள் உண்ணும் பல்வேறு கிழங்கு வகைகள் என 2,500 மேற்பட்ட பாரம்பரிய விதைகளைக் காட்சிக்கு வைத்திருந் தனர். கண்காட்சியில் நடந்த கிராமிய மற்றும் மலை வாழ் மக்களின் இசை, நடன நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்வித்தது.

- அனந்து

சிறுதானியம்... பெருமரியாதை!

நாட்டு நடப்பு

சென்னையில் தனியார், அரசு என ஆயிரக்கணக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலரும் உணவகங்களில் இருந்து வரவழைக்கப்படும் உணவைத்தான் மதியம் உண்பார்கள். இந்நிலையில், இதையே ஒரு அஸ்திரமாக கையில் எடுத்திருக்கும் சென்னையில் செயல்பட்டு வரும் 'கம்யூனிட்டி ஆர்கனைஸேஷன் ஃபார் ரூரல் டெவப்மெண்ட்’ என்ற தொண்டு நிறுவனம்... சிறுதானிய உணவுகளைச் சமைத்து, அலுவலகங்களில் மதிய உணவாக வழங்கி வருகிறது.

இதைப்பற்றி பேசிய அந்த அமைப்பைச் சேர்ந்த மீனாட்சி, ''கம்பு, சோளம், வரகு... போன்ற சிறுதானியங்கள்தான் எதிர்கால உணவு என்று பலரும் சொல்கிறார்கள். சிறுதானியங்களில் அதிக சத்துக்கள் இருப்பதோடு, பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுவதால்தான் அனைவரும் சிறுதானிய உணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள். இவற்றில் உள்ள சத்துக் களின் அளவு, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். இது பற்றிய விழிப்பு உணர்வு பெருகி வருவதால், சிறுதானிய உணவுகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதனால்தான், இந்த முயற்சியை நாங்கள் கையிலெடுத்தோம்.

சிறுதானியங்களை, விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்கிறோம். கம்பு, ராகி மாவுகள் கலந்து ரொட்டி, சாமை சாம்பார் சாதம், வரகு அரிசி தயிர் சாதம்... என்று விதம்விதமான உணவுகளை சுய உதவிக்குழுப் பெண்கள் சுவையாகத் தயாரிக்கிறார்கள். இந்த விற்பனை மூலமாகக் கிடைக்கும் லாபத்தை, அந்தப் பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோம். சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளவும் நாங்கள் தயார்'' என்று சொன்னார்!

தொடர்புக்கு,
மீனாட்சி, செல்போன்: 94442-74141.

பசுமைத் திருமணம்!

இயற்கை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் மக்களிடத்தில் விழிப்பு உணர்வை விதைக்க வேண்டும் என்று விரும்பும் பலர், தங்களின் இல்லத் திருமண விழாக்களில் மரக்கன்றுகளோடு, 'பசுமை விகடன்’ இதழையும் சேர்த்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற, இப்படி ஒரு திருமண நிகழ்வில் பசுமை விகடனையும் பங் கெடுக்க வைத்தார்... காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தெய்வசிகாமணி.

நாட்டு நடப்பு

மார்ச் 12-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெற்ற அவருடைய இல்லத் திருமண விழாவில், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள், அரசியல் இயக்கத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள்... என பல தரப்பினரும் கலந்துகொண்டு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், தமிழ் பற்றியெல்லாம் பேசினர்.

மணமக்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், பசுமை விகடன் இதழ்கள், திருக் குறள் வாசகங்கள் பதிக்கப்பட்ட பலகைகள், புத்தகங்கள் மற்றும் தனது தோட்டத்தில் விளைந்த தர்பூசணி என வழங்கி மகிழ்வித்தார், தெய்வசிகாமணி.