Published:Updated:

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

Published:Updated:

மாத்தி யோசி
ஓவியம்: ஹரன்

எந்தப் பருவத்துல என்ன சாப்பிடலாம்?

'பங்குனி மாசத்துல, சித்திரை மாசம் கணக்காக வெயில் காயுதே, இந்த வருஷம் மழை எப்படி இருக்கும்?’ வானத்தை தினமும், அண்ணாந்து பாக்கற விவசாயிங்க மனசுல எழற கேள்வி இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்ம பெரியவங்க, மழை வரும் அறிகுறியை பல வகையா சொல்லியிருக்காங்க. அந்த நுட்பத்துல ஒண்ணுதான், இப்போ நான் சொல்லப்போற விஷயமும். அதாவது, பங்குனி மாசம் 15-ம் தேதிக்கு மேல, அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெஞ்சா... அந்த வருஷம் நல்ல மழை பெய்யும்னு உறுதியா நம்பலாம். ஒருவேளை, அப்படி இல்லாமப் போனா... அந்த வருஷம் மழை சுமாராத்தான் இருக்குமாம்.

பங்குனி மாசம் மழை பெய்யுறதை, 'பங்குனிப் பழம் பழுத்திருச்சி’னு புதுக்கோட்டை மாவட்டம் பக்கம் சொல்றாங்க. பங்குனி மாசம் மழையைக் கண்ட, சந்தோஷத்துல விவசாயிங்க நனைஞ்சி நன்றி சொல்றதும் உண்டு.

மழை நீரைச் சேகரம் பண்றதுக்கு பண்ணைக்குட்டை அமைக்கற வேலை பரவலா நடக்குது. பண்ணைக்குட்டையில இருக்கற தண்ணி, சூரிய வெப்பத்தால சீக்கிரமா ஆவியாகிடும். இதைத் தடுக்க, குட்டையில அசோலா வளர்த்தா... நல்ல பலன் கிடைக்கும். அதோட, ஆடு, மாடுகளுக்கு நல்ல தீவனமும் கிடைச்சுடும். இந்த அசோலாவை மக்க வெச்சி உரமாவும் பயன்படுத்தலாம்.

மண்புழு மன்னாரு

கொண்டாட்டம்னாலே விதவிதமா விருந்து சாப்பிடுறதுதான். சந்தோஷமா சாப்பிடுறதை, கொண்டாட்டத்தோட உச்சகட்டம்னுகூட சொல்லலாம். அதனாலதான், விஷேசங்கள்ல சுவையான விருந்து போடறாங்க. எந்தப் பருவத்துல, என்ன வகையான உணவு சாப்பிடணும்னு ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னயே கண்டுபிடிச்சி வெச்சுருக்காங்க. அந்தப் பருவத்துல வரக்கூடிய விழா நேரத்துல, அதுக்கு தக்கப்படி சாப்பிட்டாங்க. உதாரணத்துக்கு சில சுவையான விஷயங்களைப் பார்ப்போம்.

சித்திரை மாசம் மாரியம்மன் கோயில்கள்ல கட்டாயம் கூழ் ஊத்துவாங்க. கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ்... மாதிரியான உணவுங்க, சித்திரை மாசத்து வெப்பத்தைத் தடுக்கும். கேழ் வரகு குளிர்ச்சியான சமாச்சாரம். அதேசமயம், கம்பு... சூட்டைக் கிளப்பிடும். இதேபோலத்தான் குதிரைவாலி, வரகு, சாமையெல்லாம். அதனால, மோர் சேர்த்து இதையெல்லாம் சாப்பிட்டா.. குளிர்ச்சிதான். வெல்லம், புளி போட்ட பானகமும் இந்தப் பருவத்துல தயாரிச்சு கொடுப்பாங்க. இதுவும் உடம்புக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

'புரட்டாசி மாசம் பகலானால் பொன்னுருகக் காயும், ராவானால் மண்ணுருகப் பெய்யும்’னு சொல்லுவாங்க. இதுமாதிரி நேரங்கள்ல மனுஷங்களுக்கு நிறையப் புரதச்சத்து தேவை. பருவ மழை பெய்ற நேரத்துல வயல்ல வேலையும் அதிகமா இருக்கும். சத்தான சுண்டல் வகையை சாப்பிட்டா, உடம்பு சோர்ந்து போகாது. அதுக்காகத்தான் நவராத்திரி கொண்டாடுற பழக்கம் வந்துச்சுனு சொல்றாங்க சிலர். அந்த ஒன்பது நாளும் விதம்விதமான சுண்டல்களை ருசி பார்க்கிற பழக்கமே இதுக்காகத்தானாம்.

ஐப்பசி மாசத்துல அடை மழை பெய்யுறப்ப, வீட்டுக்குள்ளயே அடைஞ்சிருக்கணும். சாப்பிட்ட சாப்பாடு செரிக்காது. அதனாலதான் தீபாவளி சமயத்துல நிறைய ஓமம், மிளகு சேர்த்த ஜீரண சக்தியைத் தூண்டுற பலகாரங்களைத் தயாரிச்சு, சாப்பிடற வழக்கம் ஆரம்பிச்சுதாம்.

கார்த்திகை மாசம், நிலத்துல பயிருங்க வளர்ற பருவத்துல இருக்கும். அதை ருசி பாக்க பூச்சிங்க கூட்டம் அலைமோதும். வயல்வெளியை ஒட்டி இருக்குற வீடுகளுக்கும் பூச்சிக வரும். அதுங்களைக் கவர்ந்து இழுக்கத்தான்... கார்த்திகை மாசம் முழுக்க வாசல்ல விளக்கு ஏத்தி வைச்சாங்க. கார்த்திகை மாசம் பொரியை சாமிக்குப் படைக்கற பழக்கமும் உண்டு. பொரி பொரிக்கும்போது வரும் புகை, பறந்து வர்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துமாம். கார்த்திகை தீபம் அன்னைக்கு, கோயில்ல சொக்கப்பானை கொளுத்துவாங்க. அப்போ, வயல்வெளியில இருக்கிற பூச்சிங்க எல்லாம், சொக்கப்பானையில வந்து விழுந்துடும்.

மார்கழி மாசம், முன்பனிக்காலம். அந்த சமயத்துல சீக்கிரம் செரிக்கக் கூடிய உணவு பொங்கல். அதுல இருக்குற மிளகும், சீரகமும் சளி பிடிக்காம தடுக்கும். அதனாலதான்... பஜனை பாடி, பொங்கலைச் சாப்பிடற பழக்கம் உருவாச்சு. இந்தக் காலத்துல பொங்கல்னு சொன்னாலே... 'அது மயக்க மருந்தாச்சே... செரிக்காதே'னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா, மிளகு, சீரகம் இதையெல்லாம் சரியான விகிதத்துல சேர்த்து, கொஞ்சம்போல நெய் ஊத்தி தயாரிச்சா... பிரச்னையே இருக்காது. ஹோட்டல்கள்ல வனஸ்பதியை ஊத்தி ஊத்தி பொங்கல் செய்றாங்க... அதனாலதான் அது மயக்க மருந்தாவே மாறிடுது.

தை மாசம், பின்பனிக்காலம். பொங்கல் திருநாள் சமயத்துல சர்க்கரைப் பொங்கல் செய்வாங்க. அதுல சேர்க்கப்படுற நெய், குளிர்னால வர்ற வயித்து வறட்சியைப் போக்கிடும். இந்தக் கால கட்டத்துல சாப்பாட்டுல நிறைய காய்கறிகளையும் சேப்பாங்க. ஏன்னா, அடுத்து வரக்கூடிய கோடை காலத்துல உடம்பு பலமா இருக்கணுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism