Published:Updated:

கோடை உழவு... கோடி நன்மை!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன், எஸ்.சிவபாலன், ர. அருண்பாண்டியன்

கோடை உழவு... கோடி நன்மை!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன், எஸ்.சிவபாலன், ர. அருண்பாண்டியன்

Published:Updated:

ஆலோசனை

கோடை காலம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல... நிலங்களும் ஓய்வெடுக்கும் காலம். அதனால்தான், பெரும்பாலான கோயில்களில் திருவிழாக்களை கோடை காலங்களில் நடத்தும் வழக்கம், நடைமுறையில் இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் ஓய்வுக்கு இடையே, அடுத்த சாகுபடிக்கான முன்னேற்பாடுகளையும் விவசாயிகள் செய்து கொள்வர். அவற்றில், முக்கியமானது கோடை உழவு. குறிப்பாக, நெல் சாகுபடிக்கு கோடை உழவு பல வகைகளிலும் உறுதுணையாக அமைகிறது.

கூடுதல் மகசூல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடை உழவின் மகத்துவம் குறித்து சிலாகிப்போடு சொன்னார், தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி.

''சித்திரை மாசத்துல தொடர்ச்சியா அரை மணி நேரம் மழை பேஞ்சாலே, அடுத்த நாள் கோடை உழவு செஞ்சுடுவோம். ரெண்டு சால் புழுதி உழவு ஓட்ட 900 ரூபாய் செலவாகும். ஆனா, அதனால் கிடைக்கக்கூடிய பயன்களை கணக்குப் பார்த்தா, ரொம்ப அதிகம். கோடை உழவு செய்றப்போ... மண்ணுக்குள்ள மறைஞ்சு இருக்குற, கூட்டுப்புழுக்கள் எல்லாம் வெளியில வந்து, வெயில்ல செத்துப் போயிடும்.

கோடை உழவு... கோடி நன்மை!

சாகுபடி பண்ணுனப்போ நிலத்துல போட்ட எரு, உரம் எல்லாம் மண்ணுக்குள்ள நல்லா கலக்கும். அதனால, வெப்பத்தால உயிர்ப்புத் தன்மை அழிஞ்சுடாம இருக்கும். உழவுக்கு அப்பறம், மண் பொலபொலப்பாகறதால, மண்புழுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் மண்ணுக்குள்ள சுலபமா போய் பாதுகாப்பா இருந்துக்கும். ரெண்டு மூணு மாசம் கழிச்சு நெல் நடவுக்கு சேத்துழவு செய்றப்போ, உரச்சத்துக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம், பயிர்களோட வளர்ச்சிக்கு உறு துணையா இருக்கும். இதனால் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் தூர்கள் வெடிச்சு, மகசூல் கூடும்'' என்றார்.

பெரும்பாலும், திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்பவர்கள் கோடை உழவைத் தவிர்த்து விடுகிறார்கள். இதற்கு, ''கோடை காலத்துக்கும் குறுவை சாகுபடிக்கும் காலஇடைவெளி குறைவுன்றதால, குறுவைக்கு கோடை உழவு கைகொடுக்காது. கோடை உழவு செஞ்சு மூணு, நாலு மாசமாவது அப்படியே விட்டு வெச்சாதான் மண் பக்குவப்படும். அதனால, கோடை உழவு சம்பா, தாளடி சாகுபடிக்குத்தான் கைகொடுக்கும்' என்று காரணம் சொல்கிறார் திருவாரூர் மாவட்டம், வீரமங்கலம், மயில்வாகனன்.

கோடை உழவு... கோடி நன்மை!

குறுவைக்கும் கை கொடுக்கும்!

அதேசமயம், தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த ஆதிநாரயணனின் கருத்து வேறு மாதிரி யாக இருக்கிறது. ''நாங்க, ஆத்துப்பாசனத்துல குறுவை சாகுபடி செய்றோம். அதுக்கு, கோடை உழவு செஞ்சுதான், சாகுபடியை ஆரம்பிக்கிறோம். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்தா, ஜூலை 15-ம் தேதிக்கு மேலதான் காவிரித் தண்ணீர் வயல்களுக்கு வந்து சேரும். அப்போதான் குறுவை சாகுபடி தொடங்கும். மண் பக்குவப்படுறதுக்கு, இந்த இடைவெளி போதுமானதுதான். அதில்லாம, கோடை உழவு செய்றப்போ, ரெண்டு, மூணு சால் உழவு ஓட்டிட்டா, மண் கட்டிகள் உடைஞ்சுடும்'' என்று சொல்லும் ஆதிநாராயணன்,

கோடை உழவு... கோடி நன்மை!

''கிணறு, போர்வெல் மூலமா பாசனம் பண்ற விவசாயிகள், நிலத்துக்கு ஓய்வு கொடுக்காம முன்கூட்டியே குறுவை சாகு படியை ஆரம்பிப்பாங்க. அவங்க, நேரடியாக சேத்துழவுக்குப் போயிடறதால, 'கோடை உழவு, தேவையில்லாத செலவு’னு நினைக்கறாங்க. ஆனா, இது தவறான எண்ணம். கோடை உழவு செஞ்சு, ஒரு வாரத்துல சேத்துழவு செஞ்சாலும், மண் நல்லாகிடும். சேத்துழவுக்கான செலவு குறையும். அதில்லாம, கோடை உழவு செய்றப்போ மண்ணுக்குள்ள இருக்குற களைகள் வெளிய வந்து காய்ஞ்சு அழிஞ்சுடும். அதனால சாகுபடி சமயத்துல களைகள் அதிகமா வராது. இப்போ, களைக்கொல்லி பயன்படுத்துற பழக்கம் அதிகரிச்சுருக்கற தாலயும், கோடை உழவு செய்றதைத் தவிர்க்குறாங்க'' என்கிறார்.

மழைநீர்ச் சேமிப்பு.. மண் அரிப்புத் தடுப்பு..!

கோடை உழவு... கோடி நன்மை!

கோடை உழவின் அவசியம் குறித்து பேசிய திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வேளாண் அறிவியல் மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சோழன், ''நம்ம முன்னோருங்க... 'கோடை உழவு, கோடி நன்மை, 'சித்திரை மாத உழவு, பத்தரை மாற்றுத் தங்கம்’னு எல்லாம் சொல்லி வெச்சுருக்காங்க. குறுவை, சம்பா, தாளடி மூணு பட்டங்களுக் குமே, கோடை உழவு ரொம்ப உறுதுணையா இருக்கும். எப்படியும் கோடையில ஒரு மழையாவது பேய்ஞ்சிடும். அதுக்கடுத்து உழவு செஞ்சா... மழை நீர் நிலத்துக்குள்ள போறதுக்கு உறுதுணையா இருக்கும். அதனால் மண் இறுக்கம் குறையும். நீர்பிடிப்புத் திறன் அதிகரிக்கும். கோடை உழவு செய்யலைன்னா, மழை நீர் நிலத்தோட மேல் மண்ணை அடிச்சுட்டுப் போயிடும். அதனால, கோடை உழவு மண் அரிப்பையும் தடுத்துடுது. தீமை செய்ற பூச்சிகளுக்கு கோடை வாசஸ்தலம், நிலத்துல இருக்குற களைச்செடிகள்தான். கோடை உழவு செய்றப்போ, களைகளும் அழிஞ்சுடும், பூச்சி களும் அழிஞ்சுடும். இதனால, களையெடுக்குற செலவு குறையும். பயிர்ல... பூச்சி, நோய்த் தாக்குதல்கள் இல்லாம இருக்கும்.

கோடை உழவு செய்றது... சாகுபடி காலத்துல தண்ணீர் தேவையையும் குறைக்கும். வருஷா வருஷம், கோடை மழைக்குப் பிறகு, கொலுக்கலப்பையால் 15 சென்டி மீட்டர்ல இருந்து 20 சென்டி மீட்டர் ஆழத்துக்கு உழவு செய்யணும். மூணு வருஷத்துக்கு ஒரு முறை, உளிக்கலப்பையால் 2 அடியில இருந்து 3 அடி ஆழத்துக்கு உழவு செய்யணும். செலவு பாக்காம இப்படி செஞ்சுட்டா... பல செலவுகள் குறையுறதோட, மகசூலும் அதிகரிக்கும்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism