Published:Updated:

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

கால் ஆணி கரைந்து போகும்... மருக்கள் மறைந்து போகும்... ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி

தீர்வு

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இதழில் அம்மான் பச்சரிசி பற்றி அறிந்து கொள்வோம்...

'இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே!'

- கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளின்படி, வீதியெங்கும் விளைந்து கிடக்கும் விலையில்லா மருந்துகளான மூலிகைகளைப் புறக்கணித்ததன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்கள் மனிதகுலத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நோய்க்களுக்கான தீர்வைத் தேடுவதில்கூட சமுதாய அந்தஸ்து பார்க்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, சாதாரண காயங்களுக்குக்கூட, ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து விடுகின்றன, பல மருத்துவமனைகள். இத்தகைய மாயா மனநிலையை ஒதுக்கிவிட்டு, செலவில்லாத எளிய தீர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால், உங்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைக்க காத்திருக்கின்றன, விதவிதமான மூலிகைகள். அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளைநிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைதான், அம்மான் பச்சரிசி. இதில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்றுதான்.

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

சிறப்பு வாய்ந்த சித்திரபாலாடை..!

பெயரைத் தவிர, அரிசிக்கும் இந்தச் செடிக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இது ஓர் அற்புதமான மூலிகை. பூண்டு இனத்தைச் சேர்ந்த இது, குற்றுச் செடியாகவும், தரையில் படர்ந்து வளர்ந்து காணப்படும். சிவப்பு, பச்சை நிறத்தில் எதிரெதிராக அமைந்த சொரசொரப்பான ஈட்டி போன்ற முனைகளை உடைய இலைகளை உடையது. சிறு பூக்கள் தொகுப்பாக அமைந்திருக்கும். இதன் எந்தப் பகுதியைக் கிள்ளினாலும் பால் வரும் என்பதால், 'சித்திரபாலாடை' எனவும் அழைக்கிறார்கள், சித்தர்கள். இந்தப்பால் மருத்துவ குணம் வாய்ந்தது. இச்செடியில் விதைகள் மூலமாக இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

'காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

இதன் இலைச் சாறை உட்கொண்டால் மலச்சிக்கல், உடல் மெலிவு, படை, நமைச்சல் ஆகியவை தீரும், என்கிறது சித்தர் பாடல். இதன் பாலுக்கு நெருப்புப் புண், நகச்சுத்தி ஆகியவற்றை ஆற்றும் குணமுண்டு. இப்படி பல்வேறு நோய் தீர்க்கும் குணங்கள் இதில் இருந்தாலும், இதன் சில பயன்பாடுகள் அதிமுக்கியமானவை.

மகத்துவம் வாய்ந்த மரு அகற்றி!

இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னை மரு. உடம்பில் சிறு கட்டிகளைப் போல தொங்கிக் கொண்டிருக்கும் இந்த மருக்களை வேரோடு, உதிர வைக்கும் தன்மை அம்மான் பச்சரிசிப் பாலுக்கு உண்டு. இதன் தண்டைக் கிள்ளினால் வரும் பாலை, மருக்களின் மேல் வைக்க வேண்டும். மருவின் அளவைப் பொருத்து, மூன்று நாட்கள், ஏழு நாட்கள் என்று தொடர்ந்து அந்த பாலை வைத்துவர... ஏழு நாட்களில் மருக்கள் உதிரத் தொடங்கும். அதனால்தான், இதை 'மரு அகற்றி’ எனவும் அழைக்கிறார்கள்.

பயனுள்ள பால் பெருக்கி!

கலப்படமில்லாததும்... நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததுமான தாய்பால் இன்றைக்கு பல குழந்தைகளுக்குக் கிடைப்பதேயில்லை. மாறிப்போன உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களாலும் பல பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில்லை. அதனால், புட்டிப்பாலுக்கு மாறி விடுகிறார்கள். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி அற்றவர்களாக, சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனையை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

வளரும் தலைமுறையை ஆரோக்கியமில்லாத தலைமுறையாக வளர்க்கிறோமே என்ற ஆதங்கம் இருந்தாலும், 'பால் சுரக்காதபோது என்ன செய்ய?’ என்கிற விரக்தியை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. இப்பிரச்னைக்கு இயற்கை அளித்துள்ள எளிய தீர்வு, அம்மான் பச்சரிசி. இதன் பூக்களை சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலில் கலந்து காலை, மாலை என தினமும் இருவேளை பருகி வந்தால், பால் சுரக்கும்.

சொந்தக் காசில் சூன்யம் வைத்த கதையாக, பணத்தைக் கொடுத்து, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புட்டிப்பாலை வழியனுப்பி விட்டு, அம்மான் பச்சரிக்கு வரவேற்பு வளையம் வையுங்கள். உங்கள் வாரிசுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழும் வாய்ப்பைக் கொடுங்கள்.

ஆணியே பிடுங்க வேண்டாம்...

அதுவா விழுந்திடும்..!

கால்களில் ஆணி வருவது ஒரு முக்கியமான பிரச்னை. அதை அகற்றுவதற்காக, ஆணி வந்த இடத்தைச் சுற்றி கத்தியால் அறுப்பார்கள்... அறுவை சிகிச்சைகூட செய்கிறார்கள். வேதனை நிறைந்த இந்த சிகிச்சை தேவையே இல்லை. வலி இல்லாமல் ஆணியை அகற்றும் வித்தை அம்மான் பச்சரியிடம் உள்ளது. ஒரு செடியை சிறிது சிறிதாக உடைத்து அதில் வரும் பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், வலி குறைவதோடு, சில நாட்களில் ஆணி மறைந்துவிடும். எந்த வலியும் இல்லாத சுகமான தீர்வை இயற்கை கொடுக்கும்போது, அறுவை சிகிச்சை எதற்கு நண்பர்களே?

வெள்ளி பஸ்பம்..!

வெள்ளைப்படுதல் பெண்களுக்கான முக்கிய பிரச்னைகளில் ஒன்று. 'அம்மான் பச்சரிசி இலைச்சாறை, மோருடன் கலந்து, காலைவேளையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் பருகி வர, வெள்ளைபடுதல் நின்று போகும்’ என்கிறது, சித்த மருத்துவம். அம்மான் பச்சரிசி இலையுடன் தூதுவளை (தூதுவேளை என்றும் சொல்வார்கள்) இலையை சம அளவு எடுத்து, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து கூட்டு செய்து, தேங்காய் துருவல், நெய் கலந்து உண்டு வந்தால்... உடம்பில் தாது பலப்படும். அதனால் இதை 'வெள்ளிப் பஸ்பம்’ எனவும் அழைக்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

ஆடு, மாடுகள் ஒன்றோடொன்று மோதி, இடறி விழும்போது ஏற்படும் காயங்களில், அம்மான் பச்சரிசி பாலைத் தடவினால், விரைவில் குணமாகும்.

மந்திர மூலிகை!

அம்மான் பச்சரி பால் பயன்படுத்தி, காகிதத்தில் ஏதாவது எழுதினால், சிறிது நேரத்தில் மறைந்துவிடும். பிறகு அக்காகிதத்தை நெருப்பில் வாட்டினால்... மறைந்த எழுத்துக்கள் தெரியும். அந்தக் காலத்தில் பல ரகசியக் குறிப்புகளை இப்படி எழுதியிருக்கிறார்கள், என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார் கள்.

- வலம் வருவோம்...

 டெங்குவை குணப்படுத்த ஆராய்ச்சி!

மூலிகை வனம் - அம்மான் பச்சரிசி...

இந்தியாவை தாயகமாகக் கொண்ட அம்மான் பச்சரிசி யின் தாவரவியல் பெயர், இப்ஃபோர்பியா ஹிர்டா (Euphorbia hirta). இதன் மருத் துவ குணங்களைப் பற்றி பேசினார், ரூமி ஹெர்பல்ஸ் இயக்குநரும், மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவருமான, திருஞானசம்பந்தம். ''புண்கள், சூடுகட்டி, சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு, நமைச்சல், எரி புண் போன்றவற்றுக்கும் அம்மான் பச்சரிசி சிறந்த நிவாரணி. இந்தச் செடியை உலர்த்தி பொடி செய்து, ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சமஅளவு கற்கண்டு சேர்த்து தினம் ஓரிரு வேளை அருந்தி, பால் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.

உதடு, நாக்கு போன்ற இடங்களில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்தும் தன்மை அம்மான் பச்சரிசி பாலுக்கு உண்டு. இதன் காயை துவையல் அரைத்து உண்டால், நாள்பட்ட மலச்சிக்கல் தீரும். பிலிப்பைன்ஸ் நாட்டில் அம்மான் பச்சரிசி மூலமாக, டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன'' என்றார்.

தொடர்புக்கு,
செல்போன்: 95000-29890