Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'ஆழ்வார்கிட்ட பாடம் படிச்சவங்க,நாடு முழுக்க பரவணும்!'கொழிஞ்சியில் விளைந்த 30 பேர்!த.செல்லதுரை ஓவியம்: ஹரன்

வரலாறு

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மையோடு சேர்த்து, தன் வாழ்க்கைக் கதையையும் எழுதி வந்தார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார். 39 அத்தியாயங்களை முடித்துக் கொடுத்ததோடு, மண்ணில் விதையாகி விட்டார். அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாசர்களுக்குத் தொகுத்துத் தரும் வகையில், அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, முடிந்தவரை அனைத்தையும் சேகரித்துத் தர தீர்மானித்துள்ளோம். அந்த வகையில், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், இதழ்தோறும் பேசுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இதழுக்காக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் உள்ள ஒடுகம்பட்டியில் செயல்பட்டு வரும் 'கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை’க்குச் சென்றோம். இந்தப் பண்ணையில்தான், ஏழு ஆண்டுகள் 'இயற்கை வேளாண்மை’ தவத்தை மேற்கொண்டார், நம்மாழ்வார்.

சுற்றுப்புற வயல்வெளிகள் எல்லாம் வறண்டு கிடந்தாலும், கொழிஞ்சிப் பண்ணை யில் மட்டும் வெப்பம் தணிந்துதான் இருக்கிறது. ஓங்கி உயர்ந்த மரங்கள்தான் குளுமைக்கு காரணம்.

நுழைவாயிலில், 'குடும்பம் அமைத்துள்ள புறச்சூழல் பண்ணையும், பயிற்சி மையமும் 1.1.90-ம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. மானாவாரிப் பகுதியில் மக்களுக்கும், மண்ணுக்கும் பயனுள்ள விவசாய முறைகளை மேற்கொண்டுள்ள, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இப்பண்ணை அர்ப்பணம்’ - என்கிற கல்வெட்டு நம்மை வரவேற்கிறது. ஒரு காலத்தில் கரடு முரடான நிலமாகக் கிடந்த இடத்தில் பசுமையை உருவாக்க, இரவு, பகல் பாராது நம்மாழ்வாரும் அவரது நண்பர்களும் உழைத்த உழைப்புதான், பயிற்சிப் பண்ணையாக உருமாறியுள்ளது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

''புதுக்கோட்டையில் எனது அனுபவம் முக்கியமானது. எதையெல்லாம் வீண் என்று சொல்கிறார்களோ... அதையெல்லாம் பயனுள்ளதாக ஆக்குவதே, என் பணியாக இருந்தது. படிப்பைப் பாதியில் விட்டவர்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். அவர்கள், இப்பொழுது அந்தப் பண்ணையை நிர்வகித்து வருகிறார்கள். கொழிஞ்சியை ஒரு முறை பயிரிட்டுவிட்டால் அது அழிவதே இல்லை. அதனால்தான், அந்தப் பண்ணைக்கு 'கொழிஞ்சி’ என்று  பெயரிட்டோம்''

- கொழிஞ்சிப் பண்ணையைப் பற்றி நம்மாழ்வார் ஒரு முறை இப்படிச் சொன்னார்.  

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நம்மாழ்வாருடன் பல ஆண்டுகள், கொழிஞ்சிப் பண்ணையில் தங்கி இயற்கை வேளாண்மைப் பாடம் படித்த செல்லதுரை பேசுவதைக் கேட்போம்.

''கொழிஞ்சிப் பண்ணைக்கு ஆரம்பத்துல என்னையும் சேர்த்து நாற்பது பசங்க பாடம் கத்துக்க வந்தோம். அதுல பத்து பேரு பாதியிலேயே போயிட்டாங்க. நாங்க முப்பது பேரு மட்டும் பல வருஷம் பண்ணையில தங்கிட்டோம். எங்க முப்பது பேருக்குமே 16 வயசுக்கு கீழதான். நான் பத்தாவது ஃபெயில், இன்னும் சில பேரு பள்ளிக்கூடம் பக்கமே தலைகாட்டாத ஆளுங்க. ஆனா, எங்க அண்ணாச்சி (நம்மாழ்வார்) படிப்பைவிட அறிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தாரு. எப்பவும், விளையாட்டும், வேடிக்கையுமாத் தான் இருக்கும். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடுவோம். அதுக்கு முன்னயே அண்ணாச்சி எழுந்து, செடி, கொடிகளுக்கு தண்ணி ஊத்திக்கிட்டு இருப் பாரு.

ஒரு முறை அண்ணாச்சியைத் தேடி, வேளாண்மைத் துறையில இருந்து அதிகாரிங்க வந்தாங்க. அவங்க 'நம்மாழ்வார் எங்க இருக்காரு?’னு பசங்ககிட்ட, கேட்டாங்க. 'அதோ அந்த மரத்தடியில இருப்பாரு, பாருங்க’னு பசங்க சொல்லி அனுப்பினாங்க. போன வேகத்துல, அதிகாரிங்க திரும்பி வந்துட்டாங்க. 'அங்க யாரோ ஒருத்தர், வேலை செய்துகிட்டு இருக்காரு. நம்மாழ் வாரைக் காணோமே?’னு கேட்டாங்க. ஏன்னா, அரைக்கால் டவுசர், அழுக்கான சட்டையோடத்தான் அண்ணாச்சியைப் பண்ணையில பார்க்க முடியும். அப்புறம் அவருதான் நம்மாழ்வார் அண்ணாச்சினு சொல்லி கூட்டிக்கிட்டுப் போனோம்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

காலையில, பெரும்பாலும் வாழைப்பழமும், தேங்காயும்தான் சாப்பிடுவோம். மதியானம், கம்பங்கூழ், கேழ்வரகுக்கூழ் குடிப்போம். ராத்திரி, பொட்டுக்கடலையும், வெல்லமும் கலந்து சாப்பிடுவோம். 'இதுதான் உடம்புக்கு சத்து’னு, விளக்கமா சொல்லுவாரு. ஆனாலும், இந்த சாப்பாடு ஒத்து வராம பசங்க வீட்டுக்கு ஓடிப்போயிடுவாங்க. அதுக் காக யாரையும் அண்ணாச்சி அதட்டி பேச மாட்டாங்க.

'கரடு முரடா கிடந்த இந்த நிலத்துல மரம் வைச்சாத்தான் நிலம் வளமாகும். அதுவும் பல வகை மரத்தையும், பழ வகை மரங் களையும் நடணும்’னு சொல்வாரு. அதைத்தான் கொழிஞ்சிப் பண்ணையில செய்திருக்கோம். 'இந்தப்பகுதி மானாவாரி பகுதி, பருவ மழை தொடங்குற நேரத்துல, மரக்கன்னு நடவு செய்யணும். ஒரு விவசாயி நிலத்துல தேக்கு இருக்கணும், மா இருக்கணும், மாதுளை வேணும், எலுமிச்சை வளர்க்கணும். நாம முகம் கழுவுற தண்ணியும், கை கழுவுற தண்ணியும் செடிக்கிட்ட போற மாதிரி அமைக்கணும்’னு சொல்லுவாரு. தான் தங்கி இருந்த 'தாடிக் குடில்’ பக்கத்துல மரங்களை நட்டு, செய்முறை விளக்கமாவே இதையெல் லாம் செய்து காட்டினார். எப்பவுமே வெறும் வார்த்தையால பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டாரு. எல்லாம் நேரடி விளக்கம்தான்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சில வருஷம் கழிச்சி, கொழிஞ்சியில கத்துக்கிட்டதை, உங்க நிலத்துல செய்யுங்கனு சொன்னாரு. எப்படியோ, வீட்டுல அடம் பிடிச்சி ஒரு ஏக்கர் நிலத்துல, அண்ணாச்சி சொன்ன மாதிரி, மரங்களை வளர்த்தோம். முப்பது பேரும், ஒவ்வொருத்தர் வீட்டு நிலத்துல, ஒரு நாளைக்கு வேலை செய்வோம். மீதி நேரம் கொழிஞ்சிப் பண்ணையிலதான் இருப்போம்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஒரு கட்டத்துல, 'உங்களுக்குப் பாடம் முடிஞ்சிப் போச்சி, அவங்க, அவங்க தனியா போய் வேலை செய்யுங்க’னு சொன்னாரு. 'அண்ணாச்சி நாங்க போக மாட்டோம்’னு அடம் புடிச்சோம். 'ஆழ்வார்கிட்ட பாடம் படிச்சவங்க, நாடு முழுக்க இயற்கை விவசாயத்தைக் கத்துக் கொடுக்கணும். அது தான், எனக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை’னு சொல்லிக் கட்டி அணைச்சி அனுப்பி வைச்சாரு. இன்னிக்கு அந்த முப்பது பேரும், இயற்கை விவசாயத்துல வழிகாட்டக் கூடிய ஆட்களா உருவாகியிருக் கோம்...''  என்றார் செல்லதுரை, நெகிழ்ச்சியுடன்.

 பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்

 வீடுகள்தோறும் சாப்பாடு!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிள்ளுக் கோட்டை கிராமத்தில் குத்தகை நிலத்தில் மரம் வளர்ப்புப் பணியை குடும்பம் அமைப்பு தொடங்கிய நேரம் அது. குடும்பம் தொண்டு நிறுவனத்துக்கு வெளியில் இருந்து நிதி உதவி எதுவும் வரவில்லை. அதனால், நம்மாழ்வார், ஆஸி... போன்றவர்கள் கிள்ளுக்கோட்டை கிராமத்தில், நான்கு ஆண்டுகள் தினமும் ஒரு வீட்டில் சாப்பிட்டுள்ளார்கள். நம்மாழ்வார் உணவு அருந்திய வீடுகளுக்கு நாம் சென்றோம்.

''அண்ணாச்சி மாதிரியான ஆட்களைப் பார்க்கவே முடியாது. அப்போ, நாங்க குடிசை வீட்டுலதான் இருந்தோம். கூழ், பழைய சோறுனு எதைக் கொடுத்தாலும் அமிர்தம் மாதிரி சாப்பிடுவாரு. எங்க நிலத்துல, இயற்கை விவசாயம் எப்படி செய்யறது, மரம் வளர்க்கிறது?னு சொல்லிக் கொடுப்பாரு.

ஒரு முறை எனக்கு சரியான காய்ச்சல், உடனே, வேம்பு ஈர்க்கை ஒரு லிட்டர் தண்ணில போட்டு, அதை அரை லிட்டரா சுண்ட காய்ச்சிக் கொடுத்தாரு. உடனே காய்ச்சல் குணமாயிடுச்சி. இன்னிவரைக்கும், காய்ச்சல் வந்தால், அண்ணாச்சி சொன்ன வைத்தியத்தைத்தான் செஞ்சுக்குவேன்'' என்கிறார், அற்புதமேரி.