மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?

படம்: வீ. ராஜேஷ்

 புறா பாண்டி

''அதிகம் பால் கொடுக்கும் ஆட்டு இனம் எது... எங்கு கிடைக்கும்?''

-என். கந்தசாமி, உடையகுளத்துப்பட்டி.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். குமாரவேல் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலுக்காக இதுவரை யாரும் ஆட்டுப்பண்ணை வைக்கவில்லை. வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாலுக்காக ஆடுகளை வளர்க்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஆட்டு இனங்களில் நன்றாக பால் கொடுக்கும் திறன் கொண்ட ஒரே ரகம்... ஜமுனாபாரி. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்கும். மாட்டுப்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ஆட்டுப்பால்தான் சிறந்த உணவு. முற்றிய நிலையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஆட்டுப்பாலைக் கொடுத்து குணப்படுத்தும் வழக்கம் நாட்டு வைத்தியத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அல்சர் நோய்க்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, பாலாடைக் கட்டி தயாரித்தல் போன்றவற்றுக்கும் இது பயன்படுகிறது. மேலும் ஜமுனாபாரி ஆட்டில் பால் நிறைய கிடைப்பதால், அதைக் குடித்துவிட்டு குட்டிகளும் வேகமாக வளரும்.

நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?
நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?

நன்றாக வளர்ந்த ஜமுனாபாரி ஆடு, 9-ம் மாதம் சினைக்கு வந்துவிடும். இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகள் போடும். பால் என்ற விஷயத்தை மனதில் வைத்து, ஜமுனாபாரி ஆடு வளர்ப்பை நம் விவசாயிகள் கையில் எடுக்கலாம். மற்றபடி கறிக்காக இந்த ரகத்தைத் தேர்வு செய்ய வேண்டாம்.

இதற்கு அடுத்தபடியாக தலைச்சேரி என்ற கேரள மாநில ஆடு தினமும் 800 மில்லி வரை பால் கொடுக்கும். இதைப் பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கலாம். கேரளாவின் காசர்கோடு பகுதியில் ஆட்டுப்பாலில் காபி, டீ தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் ஜமுனாபாரி மற்றும் தலை சேரி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. தேவைப்படுபவர்கள்... முன்பதிவு செய்ய வேண்டும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

''நிலத்தில் மருதாணிச் செடியை உயிர்வேலியாக வளர்க்க விரும்புகிறேன். இது வறட்சியைத் தாங்கி வளருமா... கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

-எம். சுப்பையா, கத்தார்.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியில் மருதாணி சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயி ராஜகோபால் பதில் சொல்கிறார்.

''ஆரம்பத்தில் உயிர் வேலிக்காகத்தான் மருதாணிச் செடியை நடவு செய்தேன். அருமையாக வளர்ந்தது. அதன் மூலம் வருமானமும் கிடைத்தது. ஆகையால்தான் தனிப்பயிராக சாகுபடி செய்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் கடுமையான வறட்சி. ஆனாலும், மருதாணிச் செடிகள் இலைகளை மட்டும் உதிர்த்துவிட்டு, உயிருடன் உள்ளன. அடுத்து, ஒரு மழை பெய்துவிட்டால், பசுமை கட்டி வளரும். அதுதான், மருதாணியின் சிறப்பு. மருதாணியில் இரண்டு ரகங்கள் உள்ளன. அதில் முள் உள்ள ரகத்தை வேலிக்காக வளர்க்கலாம். முள் இல்லாத ரகம் தனிப்பயிராக சாகுபடி செய்ய ஏற்றது.

நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?

மருதாணி நாற்றுகள் வியாபார ரீதியாக விற்பனை செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே, சாகுபடி செய்துள்ளவர்களிடம் இருந்து குச்சிகளைப் பெற்று நீங்களே நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். நன்கு வளர்ந்த மருதாணிச் செடியில் பென்சில் அளவு உள்ள குச்சிகளை 9 அங்குல நீளத்துக்கு வெட்டி வைத்துக் கொண்டு... தொழுவுரம், மண் நிரப்பிய பாலிதீன் நாற்றுப் பைகளில் நட்டு, நிழலில் வைத்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். மூன்று மாதங்கள் வளர்ந்த பிறகு, வேலிகளில் நடவு செய்யலாம். இப்போது, நாற்றுகளை உற்பத்தி செய்தால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம். அப்போது, தென்மேற்குப் பருவ மழைக் காலம் என்பதால், கன்றுகள் வேர் பிடித்து வளர ஏதுவாக இருக்கும்.

வேலிப்பயிர் என்றாலும், நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என... இருபது வருடங்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்தால், ஒரு ஏக்கரில் ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். செலவுகள் போக, ஆண்டுக்குக் குறைந்தபட்சம்

80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அழகு சாதனப் பொருட்கள், இயற்கைச் சாயம், மருந்துப் பொருட்கள்... எனப் பலவற்றுக்கும் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அதனால், விற்பனைக்குப் பிரச்னை இல்லை. வறட்சியான நிலங்களில் தாக்குப்பிடித்து நிற்கும் பயிர்களில் மருதாணிக்குத் தனியிடம் உண்டு.''

தொடர்புக்கு,  செல்போன்: 98421-75940.

''கறிவேப்பிலை சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுப்பது எப்படி... அதில் ஊடுபயிராக புதினா பயிரிடலாமா?''

-என். ரேனியஸ், நத்தம்.

கோயம்புத்தூர் மாவட்ட முன்னோடி கறிவேப்பிலை விவசாயி, சுப்பையன் பதில் சொல்கிறார்.

''கறிவேப்பிலையைப் பொறுத்தவரை, இயற்கை இடு பொருட்களைக் கொடுத்து பயிர் செய்வதே நல்லது. ரசாயன உரம் மூலம் விளைந்த கறிவேப்பிலைக்கும், இயற்கையில் விளைந்த கறிவேப்பிலைக் கும் உள்ள வித்தியாசத்தை எளிதாக உணர முடியும். ரசாயன உரங்களைக் கொடுத்து வளர்த்தால், அறுவடை செய்யப்பட்ட கறிவேப்பிலை சீக்கிரமே வாடிவிடும். இயற்கை உரத்தில் விளைந்த இலை, சீக்கிரமாக வாடாது. அத்துடன் மகசூலும் அதிகமாக இருக்கும்.

நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?

ஏக்கருக்கு அடியுரமாக 10 லோடு தொழுவுரம் போட்டு, நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்து, 3 அடி அளவு பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் இரண்டு அடி இடைவெளி விட வேண்டும். கறிவேப்பிலை செடிகளை, இரண்டரை அடி இடைவெளியில்,  நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் பிடிக்கும்). தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி னால் போதுமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை களைகளை அகற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றரை டன் மண்புழு உரம் இட வேண்டும்.

8-ம் மாதத்தில் இருந்து இலை ஒடிக்கலாம். முதல் ஒடிப்பின்போது சுமார் 300 கிலோ வரை கிடைக்கும். தொடர்ந்து மகசூல் கூடும். நன்றாக வளர்ந்த பிறகு, ஆண்டுக்கு மூன்று அறுவடை வீதம் ஒவ்வொரு அறுவடைக்கும் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது ஒரு கிலோ கறிவேப்பிலை 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இது, வறட்சியை விரும்பும் பயிர். இதற்கு காய்ச்சலும், பாய்ச்சலுமாகத்தான் பாசனம் செய்ய வேண்டும். ஆனால், சிலர் ஊடுபயிராக புதினாவை சாகுபடி செய்கிறார்கள். புதினா செடிகள் நன்றாக நீர்ப்பாசனம் செய்தால்த£ன் விளைச்சல் நல்லபடியாக இருக்கும். கறிவேப்பிலையுடன், புதினாவை சாகுபடி செய்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்விட வேண்டும். இப்படி தண்ணீர் விடுவதால், கறிவேப்பிலை இலைகள் பழுத்து விடும். அதனால், கறிவேப்பிலைக்கும், புதினாவுக்கும் பொருத்தமில்லை. ''

தொடர்புக்கு, செல்போன்: 93632-28039.

நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது ?