Published:Updated:

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

ஜி. பழனிச்சாமி, இ. கார்த்திகேயன் படங்கள்: க. தனசேகரன் வீ. சிவக்குமார் தி. ஹரிகரன்

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

ஜி. பழனிச்சாமி, இ. கார்த்திகேயன் படங்கள்: க. தனசேகரன் வீ. சிவக்குமார் தி. ஹரிகரன்

Published:Updated:
'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இருந்த 'அறுபதாம் குறுவை’ ரகம், தீவிர தேடலுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டு, இன்று ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. என்றும் நமது நினைவில் வாழும் நம்மாழ்வார், இந்த முயற்சியைப் பாராட்டி தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்ததன் விளைவாக, பூங்கார், ஒற்றடையான் உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளை அறிமுகப்படுத்தியது, பசுமை விகடன். இத்தகைய முயற்சியால், வீரிய விதைகளுக்கு இணையாக... பாரம்பரிய ரகங்களின் சாகுபடிப் பரப்பும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மண்ணுக்கேற்ற பாரம்பரிய ரகங்களில் குறிப்பிடத்தக்க ரகம், 'மாப்பிள்ளைச் சம்பா’. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயற்கை முறையில் சிறப்பாக வளரும் இந்த ரகத்தைப் பயிரிட்டுள்ள சில விவசாயிகளின் அனுபவங்கள் இங்கு இடம் பிடிக்கின்றன.

சேலம் மாவட்டம், ஓமலூர், பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி. பெரியண்ணன். இவர், மாப்பிள்ளைச் சம்பா ரகத்தை சாகுபடி செய்து வருகிறார். அவரது வயலுக்குச் சென்றபோது... தகதகவென மின்னிய நெற்கதிர்களை, அறுத்துக் கட்டி களத்துமேட்டில் அம்பாரம் போட்டுக் கொண்டிருந்தனர்... பெரியண்ணன், அவருடைய மகன் நாச்சிமுத்து, மருமகள் சத்யா ஆகியோர். நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் ஆளுயரத்துக்கு அதிகமாகவே இருந்தன. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டி போரடித்த’ நெல் மாப்பிள்ளைச் சம்பாவைத்தான் சொல்லியிருப் பார்களோ என்றுகூட தோன்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

'ஆள் பத்தாக்குறை... குடும்பமா சேர்ந்து ஆளுக்கொரு வேலையாப் பார்த்தாத்தான் பண்ணையம் பண்ண முடியுது...’ என்று வேலையைத் தொடர்ந்து கொண்டே பேச ஆரம்பித்தார், பெரியண்ணன்.

''கிணத்துப் பாசனத்துல பத்து ஏக்கர் நிலம் இருக்கு. மரவள்ளி, கரும்பு, கடலை, நெல்லுனு மாத்தி மாத்தி வெள்ளாமை வைப்பேன். எங்களுக்கு மொத்தம் மூணு பிள்ளைங்க. மூத்தப் பையன் அட்வகேட். ரெண்டாவது பொண்ணு. அது, காலேஜ் புரஃபசர். இவங்க ரெண்டு பேரும் சேலம் டவுன்ல இருக்கறாங்க. கடைக்குட்டிதான் நாச்சிமுத்து. இவர் எம்.பி.ஏ படிச்சுருக்கார். ஆனாலும், இவரும் மருமகள் சத்யாவும் எங்களுக்கு ஒத்தாசையா கிராமத்துலேயே தங்கி, விவசாயத்தைப் பாத்துட்டு இருக்காங்க. பசுமை விகடன் படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்ன நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுட்டு இருந்தேன். நம்மாழ்வார், பாலேக்கர் தொழில்நுட்பங்களையெல்லாம் முழுசா படிச்சு தெரிஞ்சுக்கிட்ட பிறகு, முழு இயற்கைக்கு மாறிட்டோம்'' என்று முன்னுரை கொடுத்த பெரியண்ணன், தொடர்ந்தார்.

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

நம்மாழ்வாருக்கு நன்றிக் கடன்!

''பசுமை விகடன் மூலமாத்தான் மாப்பிள்ளைச் சம்பாவைத் தெரிஞ்சுக்கிட்டேன். நம்மாழ்வார் ஐயா அடிக்கடி, 'அடி காட்டுல... நடு மாட்டுல... நுனி வீட்டுல...’ங்கிற விடுகதைய சொல்வார். அதை சரியா செய்யப்போறேன். அறுவடை முடிஞ்சதுக்கப்பறம் வயல்ல இருக்கற அடிக்கட்டைய மட்க வெச்சு உழவு செய்யப் போறேன். அடுத்த போக வெள்ளாமைக்கு அது நல்ல உரமாகிடும். வைக்கோலை, மாடுகளுக்கு தீனியா கொடுக்கப் போறேன். நுனியில கிடைச்ச நெல்லு குடும்பத்துக்கு சோறாகிடும். இந்த ரக அரிசியில நோய் எதிர்ப்பு சக்தியும், மாவுச்சத்தும் அதிகம். வளர்ற குழந்தைகளுக்கு ஊட்டமான உணவு. வீட்டுத்தேவைக்குப் போக மீதமிருக்கற நெல்லை, தேவைப்படுற விவசாயிகளுக்கு குறைஞ்ச விலையில விதைநெல்லா கொடுக்கப் போறேன். இதுதான் நம்மாழ்வார் ஐயாவுக்கு நான் செலுத்துற நன்றிக் காணிக்கை'' என்றார், கண்களில் ஈரத்துடன்.

பாரம்பரியத்தைக் காத்த பசுமை விகடன்!

அடுத்து நாம் சந்தித்தது, திருப்பூர் மாவட்டம், கொழுமம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும் மூலிகை ஆராய்ச்சியாளருமான பிறைசூடிப்பித்தன். இவர், மூன்று ஏக்கரில் மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்திருக்கிறார்.

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

''காடைச் சம்பா, ஒட்டன் சம்பா, வெற்றிலைச் சம்பா, டொப்பிச் சம்பா...னு பாரம்பரிய நெல் விவசாயம் சக்கைப்போடு போட்ட ஊருங்க. ஆனா, இன்னிக்கு மழை இல்லாம போனதாலும், அணை தண்ணீர் கிடைக்காததாலும் நிறைய பேர், வீரிய ரகத்துக்கு மாறிட்டாங்க. நானும், ஐ.ஆர்-20, ஆடுதுறை...னு புதிய ரகத்துக்கு மாறியிருந்த சமயத்துலதான், பசுமை விகடன் கைக்குக் கிடைச்சது. மூலிகை ஆராய்ச்சியாளன்ற முறையில அதில வர்ற கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. பசுமை விகடன் கொடுத்த தெம்புலதான் இயற்கை விவசாயத் துக்கு மாறினேன். அது மூலமா, பாரம்பரிய விதைகளை வெச்சுருக்குற விவசாயிகள் தொடர்பு கிடைச்சது. நம்மாழ்வார் ஐயாவோட களப்பயிற்சி, கருத்தரங்குகள்ல கலந்து கிட்டதுலயும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிட்டேன்'' என்ற பிறைசூடிப்பித்தன் தொடர்ந்தார்.

''20 ஏக்கர்ல தென்னை, மா, சப்போட்டா, பந்தல் காய்கறி, மூலிகைச் செடிகள்னு இருக்கு. 3 கிணறு இருக்கறதால பிரச்னையில்லாம விவசாயம் போயிட்டுருக்கு. இதில்லாம தனியா, ஆத்துப்பாசனத்தை நம்பி, 7 ஏக்கர் வயல் இருக்கு. அதுல, போகம் தவறாமல் நெல் சாகுபடி பண்ணிடுவேன். இப்போ வீரிய ரகங்களையெல்லாம் விட்டுட்டு பாரம்பரிய ரகங்களைத்தான் சாகுபடி பண்ணிட்டு இருக்கேன்.

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

'கட்டிமேடு’ ஜெயராமன்கிட்ட இருந்து விதைநெல்லை வாங்கிட்டு வந்து, மூணரை ஏக்கர்ல சீரகச் சம்பாவும், மூணு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பாவையும் சாகுபடி பண்ணி, அறுவடை பண்ணிட்டேன். மாப்பிள்ளைச் சம்பாவுல... ஏக்கருக்கு சராசரியா 14 மூட்டை நெல்லும், 400 கட்டு வைக்கோலும் கிடைச்சுது. ஏக்கருக்கு 20 மூட்டை கிடைச்சுருக்கணும். ஆனா, அணையில இருந்து தண்ணி கிடைக்கறதுல கொஞ்சம் சிக்கல். அதனால, விளைச்சல் குறைஞ்சுடுச்சு.

சில சித்த மருந்துகளோட மாப்பிள்ளைச் சம்பா அரிசிக்கஞ்சியைத் தொடர்ந்து

45 நாட்கள் சாப்பிட்டா ஆண், பெண் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். அந்தளவுக்கு வீரியம் கொடுக்கக் கூடிய ரகம் இது. அதனால, இதை பெரும்பாலும் மருத்துவ உபயோகத்துக்குத்தான் பயன் படுத்தப் போறேன்'' என்ற பிறைசூடிப்பித்தன்,

''மூலிகைகளின் தேடல்ல இருந்த எனக்கு மருத்துவ குணம் வாய்ந்த வாசனைச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா நாட்டுரக நெல்லைப் பத்தித் தெரிய வெச்சு, என்னோட மருத்துவத் தொழிலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துருக்கு, பசுமை விகடன். அதுக்கு கோடான கோடி நன்றிகள்'' என்றார், நெகிழ்வுடன்

25 சென்ட்.. 500 கிலோ!

'வீரிய'த்தை விஞ்சும் 'பாரம்பரியம்'... மகத்தான மகசூல் தரும் மாப்பிள்ளைச் சம்பா!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள தாருகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி பாண்டியன், மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்து வருகிறார்.

''இந்து சமய அறநிலையத்துறையில திருக்கோயில் நிர்வாக அதிகாரியாக 31 வருஷம் வேலை பாத்தேன். ஆரம்பத்துலேயே எனக்கு இயற்கை விவசாயம் மேல ஆர்வம். கோயில் குத்தகை நிலங்களுக்கான வரி வசூல் செய்யப் போறப்போ... வயல்ல உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் கொட்டுறவங்கள பாக்கும்போது ஆத்திரமா வரும். ஏழு வருஷத்துக்கு முன்ன பசுமை விகடன் அறிமுகமான பிறகு, அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல வெளிவந்த இயற்கை விவசாய முறைகள் பத்தின செய்திகள், பாலேக்கர், நம்மாழ்வார் தொழில்நுட்பங்களைப் படிக்கப் படிக்க எனக்கும் விவசாயம் மேல ஆர்வம் வந்துடுச்சு. கிட்டத்தட்ட எனக்கு 'விவசாய குரு’ பசுமை விகடன்தான். ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம், விவசாயத்துல இறங்கிட்டேன். குறைவான தண்ணீர்ல விளையுற பாரம்பரிய ரக நெல்லைத்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு செஞ்சேன்.

25 சென்ட்ல (கால் ஏக்கர்) ஒற்றை நாற்று முறையில மாப்பிள்ளைச் சம்பா நெல்லை சாகுபடி செஞ்சேன். வழக்கமா 25 சென்டி மீட்டர் இடைவெளி விடுவாங்க. நான் 50 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு நடவு போட்டேன். 25 சென்ட்ல 500 கிலோ நெல் மகசூல் கிடைச்சுது. அரிசியா மாத்துனப்போ, 265 கிலோ கிடைச்சுருக்கு. இதை இயற்கை விவசாயக் கடைகள்ல, கிலோ 85 ரூபாய்னு வித்தா, 22 ஆயிரத்து 525 ரூபாய் கிடைக்கும். ஆறாயிரம் ரூபாய் செலவு போக, 16 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம். ஏக்கருக்கு கணக்குப் போட்டா... 2,000 கிலோனு வெச்சுக்கலாம். 70 கிலோ மூட்டையில 28 மூட்டை வரும். முதல் தடவைங்கிறதால இவ்வளவுதான் கிடைச் சுருக்கு. அடுத்த போகத்துல 25 சென்ட்டுலயே 8 குவிண்டால் எடுத்துடுவேன்... அதாவது ஏக்கருக்கு 45 மூட்டை'' என்ற பாண்டியன்,

''விவசாயத்துல கிடைக்கிற நிம்மதியைப் பாக்குறப்போ, 'ரொம்ப நாளை விரயம் பண்ணிட்டோமே’னு தோணுது. 'ரிட்டையர்டு ஆகற வரை காத்திருக்காம முன்னயே விவசாயத்துல இறங்காம விட்டுட்டோமே’னு வருத்தமா இருக்கு. ஹெச்.சி.எல். கம்பெனில டிசைனிங் இன்ஜினீயரா இருக்கற என் மகன் மோகனுக்கும் இயற்கை விவசாயம் மேல ஆசை. ரொம்ப தூரங்கள்ல நடக்குற இயற்கை விவசாயக் கூட்டங்களுக்கு அவன்தான் போயிட்டு வந்து எனக்கு விஷயத்தை சொல்வான். அடுத்த வருஷம் வேலையை ராஜினாமா பண்ணிட்டு... அவனும் எங்கூட விவசாயத்துக்கு வரப்போறான்'' என்று பெருமித உணர்வோடு சொன்னார்!

 தொடர்புக்கு,
பெரியண்ணன், செல்போன்: 99444-80255
பிறைசூடிப்பித்தன், செல்போன்: 94431-71955
பாண்டியன், செல்போன்: 94431-03344
 

இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

 பாண்டியன், பிறைசூடிப்பித்தன், பெரியண்ணன் ஆகியோர் கடைபிடித்து வரும் இயற்கை சாகுபடி முறை இங்கே பாடமாக விரிகிறது.

மாப்பிள்ளைச் சம்பாவின் வயது 160 நாட்கள். ஏக்கருக்கு 3 கிலோ விதைநெல் (4 கிலோ விதைநெல்லை விதைத்தால், ஏதாவது காரணங்களால், நடவு நேரத்தில் ஏற்படும் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்). வடிகால் வசதியுள்ள 2 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து, 25 கிலோ சலித்த மண்புழு உரத்தைத் தூவி, தண்ணீர்விட வேண்டும். தண்ணீர் சுண்டிய பிறகு, விதைநெல்லைத் தூவ வேண்டும். களைகள் முளைத்து வந்தால், அகற்ற வேண்டும். 9-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீரில், 500 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். இது நாற்றுகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும். 16-ம் நாளில் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம். பறித்த அரை மணி நேரத்துக்குள் சேற்று வயலில் நடவு செய்துவிட வேண்டும்.

பசுந்தாள் உரம் விதைத்து மடக்கி உழவு செய்யப்பட்ட நடவு வயலில், 10 லோடு தொழுவுரம் இட்டு சேற்று வயல் அடித்து சமன்படுத்தி... 25 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

10 நாட்களுக்கு ஒரு முறை கோனோ வீடர் மூலமாக களைகளை அழுத்தி விடவேண்டும். 30-ம் நாளில் இருந்து மாதத்துக்கு ஒரு முறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும். இது, பயிர்கள் பச்சைக்கட்டி வளர துணை புரியும். வேறு மேலுரங்கள் எதுவும் தேவையில்லை.

வேம்புத்தூள் கரைசல்..! சுக்கு நீர்க் கரைசல்!

வேர் அழுகல் நோயைத் தடுக்க...

10 கிலோ காய்ந்த வேப்பங்கொட்டையைப் பொடியாக்கி சுத்தமான கோணிப்பையில் இட்டு, மூட்டையாகக் கட்டி, மடைவாசலில் மூழ்கும்படி வைத்துவிட வேண்டும்.

மூட்டைக்குள் இருக்கும் துகள்கள், வயலுக்குள் செல்லும் பாசன நீருடன் கலந்து போவதால் அழுகல் நோய் உள்ளிட்ட நோய்களையும், தண்ணீர் வழியே பரவும் பூச்சிகளையும் தடுக்கலாம்.

இளங்கதிர் பருவத்தில் நெற்பயிர்களைத் தாக்கும் இன்னொரு நோய் பூஞ்சணத் தொற்று. இதைக் கட்டுப்படுத்த... 200 கிராம் சுக்குத்தூளை 2 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி ஆறிய பிறகு, 5 லிட்டர் பசும்பாலைக் கலந்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மாலை வேளைகளில் தெளித்தால், பூஞ்சணத் தொற்று வராது. தவிர, பூச்சிகளும் கட்டுப்படும்.

கதிர் நாவாய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்த... வேம்பு எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, காதி சோப் கரைசல் 10% எனக் கலந்து வைத்துக்கொண்டு, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் வீதம் கலந்து தெளிக்கலாம். 150 நாட்களுக்கு மேல், கதிர் முற்றிய பிறகு பாசனத்தை நிறுத்தி, அறுவடை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism