Published:Updated:

மீத்தேன் எமன்

கணக்கில்லாத நஷ்டம்... காணாத நஷ்டஈடு! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: எம். குணசீலன் ஓவியம்: செந்தில்

மீத்தேன் எமன்

கணக்கில்லாத நஷ்டம்... காணாத நஷ்டஈடு! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: எம். குணசீலன் ஓவியம்: செந்தில்

Published:Updated:

பாலைவனமாகும் பரிதாப டெல்டா

போராட்டம்

அய்யனாரு சிலையாட்டம் முறுக்கிவிட்ட மீசையோடு முரட்டுத்தனமா தெரிவாரு எங்க தாத்தா...
ஆனா ஆச்சர்யம்! அதிர்ந்துகூட பேசாத அப்பாவி மனுஷன்...
அவரா இப்படினு ஒட்டுமொத்த ஊரும் ஒரு நாள் மிரண்டு போச்சு...
செருப்பெடுத்துக்கிட்டு ஒருத்தனை விரட்டி விரட்டி அடிச்சாரு...
டவுன்ல இருந்து இவன் வந்திருக்கான்; வயலுக்குப் பக்கத்துலயே பட்டாசு பத்த வைக்க பார்க்குறான்!
பயிருக்கும் உயிர் உண்டுனு இந்தப் பரதேசிக்குத் தெரியாதா?னு கொந்தளிச்சாரு தாத்தா...
தாத்தா போலதான் எங்கப்பாவும் உயிருக்கு உயிரா நிலத்தை நேசிச்சாரு...
ஓர் அந்திவேளையில அரிவாளை எடுத்துக்கிட்டு ஒருத்தனை ஓடஓட துரத்தினாரு...
கட்டுக்கட்டா பணத்தைக் காட்டி, செங்கல்சூளைக்கு நிலம் கேக்குறான் இவன்!
மண்ணுக்கும் உணர்வு உண்டுனு இந்த மடையனுக்கு தெரியாதா?னு கொந்தளிச்சாரு எங்கப்பா...
இப்படி கண்ணியமா கட்டிக்காத்த எங்க நிலம், இப்ப களங்கப்பட்டு கிடக்குது!
அரசாங்கம் விதவிதமா அட்டூழியம் பண்ணுது... ஆனாலும் நான் கண்ணீர்விட்டு கைகட்டி நிக்கிறேன்...
எல்லா அதிகாரமும் படைச்ச அரசாங்கத்தை, எதைக் கொண்டு விரட்டி அடிக்க முடியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாற்கரச்சாலைகள், நவீனத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், பெட்ரோல், கேஸ், நிலக்கரி, மீத்தேன் எடுக்கும் திட்டங்கள்... என அரசாங்கம் மற்றும் தொழில்முதலைகளின் கோரப்பசிக்கு... தங்களின் விளைநிலங்களைப் பறிகொடுத்த விவசாயிகளின் வயிற்றெரிச்சலையும், ஆறாத ரணத்தையும் பதிவு செய்கின்றன, இந்தப் பாடல் வரிகள்.

தங்களின் உணர்வோடும், உயிர்மூச்சோடும், வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்து பின்னிப் பிணைந்த விளைநிலங்கள்... கண்முன்னே சிதைக்கப்படுவதைக் கண்டு, நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள், திருவாரூர் மாவட்டம், திருபுஞ்சை, வேளுக்குடி, ஒட்டநாச்சியார்குடி, சிங்களாஞ்சேரி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களுடைய விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதைத்துள்ள குழாய்களில் இருந்து கசியக்கூடிய கச்சா எண்ணெயின் தாக்குதலால், உயிருக்குப் போராடும் விளைநிலங்களின் பட்டியல் நீள்கிறது.

மீத்தேன் எமன்

ஒட்டநாச்சியார்குடியில் சிதைந்து கிடந்த விளைநிலத்தில் இருந்து ஒலித்த அவலக்குரலால் ஏற்கெனவே பதறிப் போய் இருந்தேன். அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன... மேலும் பல கண்ணீர் காட்சிகள்...

திருபுஞ்சை கிராமத்தில், பத்மநாபன் என்ற விவசாயியின் நிலம் முழுக்க கச்சா எண்ணெய் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. கருப்பூர் கிராமத்தில், கச்சா எண்ணெய் கசிவினால், சாரநாதன் என்ற விவசாயிக்குச் சொந்தமான, இரண்டரை ஏக்கர் கரும்பு முற்றிலுமாக கருகி அழிந்து, கட்டாந்தரையாகக் கிடக்கிறது.

''இந்த நிலத்துல உள்ள மண்ணை எடுத்துக்கிட்டுப் போயி, மண்ணியல் ஆராய்ச்சி நிலையத்துல கொடுத்து ஆய்வு செஞ்சு பார்த்தோம். 'இதுல இருந்த உயிர்ச்சத் துக்கள் எல்லாம் முற்றிலுமா அழிஞ்சு போயிடுச்சு. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த மண்ணுல எதுவுமே விளையாது’னு சொல்லிட்டாங்க'' என்று வேதனையில் விம்மினார்... கருப்பூர், கார்த்திகேயன்.

இந்தப் பகுதிகளில் அடிக்கடி நிகழும் எண்ணெய்க் கசிவுகள் காரணமாக... விவசாயி களுக்கு மிகப்பெரிய அளவில் இழப்புகள் உண்டாவது வாடிக்கையாகவே மாறிவிட்டது. காவிரியில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, எண்ணெய்க் கசிவு காரணமாக விவசாயி களுக்கு கண்ணீர் வருவது மட்டும் தொடர்கிறது.

இந்த பாதிப்புகளுக்கு நியாயமான இழப்பீடுகள் வழங்கப்படுகின்றனவா?  

மீத்தேன் எமன்

''குழாய் அமைக்கும்போது, அதன் அளவைப் பொறுத்து, ஒரு மீட்டருக்கு 60 ரூபாய் வீதம் தருகிறார்கள். உதாரணமாக, ஒரு விவசாயியின் விளைநிலத்தில் குழாய் அமைக்க, சுமார் 50 மீட்டர் அளவு இடம் பயன்படுத்தப்பட்டால், 3 ஆயிரம் ரூபாய் மட்டும் ஒரே தடவையாகக் கொடுப்பார்கள். அதன்பிறகு, வாடகை என்று சிறு தொகைகூட வழங்கப்படுவதில்லை. குழாய்களில் கசிவு ஏற்பட்டு, பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நிலத்தின் அளவு மற்றும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து, அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்படுகிறது. இதையும்கூட நியாயமாகத் தருவதில்லை. பாதிப்பின் தன்மையை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டு, மிகக்குறைந்தத் தொகையைத்தான் தருகிறார்கள். ஆனால், எண்ணெய்க் கசிவின் பின் விளைவுகள் மட்டும்.... ஆண்டுக்கணக்கில் தொடர் கிறது. வேறு பயிர்கள் செய்ய முடியாததால், நீண்டகாலமாக வருவாயை இழக்கிறோம். முதலில் எங்கள் நிலங்களில் படியும் கசிவுகள்... மெள்ள ஊடுருவி, படிப்படியாக அக்கம்பக்கத்திலிருக்கும் நிலங் களையும் கபளீகரம் செய் கின்றன. இந்த பாதிப்புகளுக் கெல்லாம்... யார் நஷ்டஈடு தருவார்கள்?'' என்று வேதனை பொங்கக் கேட்கும் விவசாயி கள் பலரும்,

மீத்தேன் எமன்

''எவ்வளவு இழப்பீட்டுத் தொகையை அள்ளிக் கொடுத் தாலும், அதையெல்லாம் வாங்க நாங்கள் தயாராக இல்லை. எங்கள் நிலத்தில் இருந்து குழாய்களை உடனடி யாக அப்புறப்படுத்தினாலே போதும்'' என்று ஒருமித்தக் குரலில் சொல்கிறார்கள்.

பூமிக்குள் எண்ணெய் இருக்கும் இடங் களைக் கண்டுபிடிக்க, கிராமங்களில் அடிக்கடி வெடிகுண்டு சோதனைகள் நடத்தப் படுகின்றன. இதைப்பற்றி மிரட்சி யுடன் விவரிக்கும் பகுதி மக்கள், ''ஒரே நேரத்துல, பல ஊர்கள்ல, நூத்தம்பது அடி ஆழம் வரைக்கும் தோண்டி, வரிசையா வெடிகுண்டு களை வெடிக்க வைக்கறாங்க. அந்த சமயத்துல ரெண்டு தென்னை மர உயரத்துக்கு, சேறும் எண்ணெயும் வாரி அடிக்கும். இதனால் பக்கத்துல உள்ள நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த எண்ணெய் விழுந்து, பயிர்கள் கருகறதோட... மண்ணோட வளமும் பாதிக்கப்படுது. வெடிகுண்டு பாதிப்பால... வீட்டு சுவர்கள்ல விரிசல் விழறது... சமைச்சு வெச்ச பாத்திரமெல்லாம் விழுந்து உருளுறதுனு ஏகப்பட்ட பாதிப்புகள்'' என்கிறார்கள் கண் களில் மிரட்சியுடன்!

அடுத்தடுத்து இப்படி அடுக்கப்படும் 'வெடிகுண்டு ஆய்வு அனுபவங்கள்' என்னை திகிலில் ஆழ்த்திவிட்டன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அநீதி, அத்துமீறல், அட்டூழியம் எல்லாம் இங்கே கட்டவிழ்த்துவிடப் பட்டிருக்கிறது என்பதே உண்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism