Published:Updated:

புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...

கை கொடுக்கும் வேளாண் அறிவியல் மையங்கள் கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர. அருண்பாண்டியன்

பயிற்சிகள்

 வழக்கமான விவசாயத்தைத் தாண்டி, 'புதிய முயற்சிகள் எடுக்கலாமா?’ என சிந்திக்கும் விவசாயிகள் பலர், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். 'புதிய பயிர் நமக்கு சாத்தியமா?’, 'சாதக பாதகங்கள் என்ன?’, 'தொழில்நுட்பங்களை எப்படி அறிந்து கொள்வது?’ என ஏராளமான கேள்விகள் எழும்போது, குழம்பிப்போய், தனியார் நிறுவனங்கள் சிலவற்றிடம் சிக்கி, பணத்தை இழந்து தடுமாறுபவர்கள் பலர் உண்டு. இப்படி ஏமாறாமல் இருக்க... சரியான வழிகாட்டுதல் மற்றும் தொழிநுட்பங்களைச் சொல்லித்தரும் உற்றத்தோழன்தான், வேளாண் அறிவியல் நிலையம்.

பல விதமான பயிற்சிகள்!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன், இந்தியாவில் 634 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 31 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகளின் நலன் கருதி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு நிலையம் என்ற அடிப்படையில், இவை அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்படக்கூடிய வேளாண்மை அறிவியல் நிலையங்களில்... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையமும் ஒன்று. இதன் தலைவர் மற்றும் பேராசிரியருமான டாக்டர் சோழனிடம் பேசினோம்.

புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...

''ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. புறக்கடை முறையில் ஜப்பான் காடை மற்றும் வான்கோழி வளர்த்தல்; பரண் மேல் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகள் வளர்த்தல்; மிதவைக்கூடுகளில் மீன் வளர்த்தல்; மூலிகைப் பயிர்கள் சாகுபடி; காளான் வளர்ப்பு; தேனி வளர்ப்பு; கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு; அசோலா மற்றும் மண்புழு உற்பத்தி செய்தல்; மாடித்தோட்டம் அமைத்தல்; துல்லியப் பண்ணையம் மூலம் காய்கறி சாகுபடி; வெள்ளம் மற்றும் வறட்சிக் காலங்களுக்கு ஏற்ற வகையிலான மாற்றுப்பயிர்கள் சாகுபடி; தென்னையில் கோகோ சாகுபடி; தீவன வங்கி அமைத்தல்; நிழல் வலையகத்தில் காய்கறி சாகுபடி; நெல், பயறு, உளுந்து, தீவனப்பயிர்களின் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்; காளான், காய்கறிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரித்தல்... எனப் பல பயிற்சிகளை இங்கு அளித்து வருகிறோம்.

கட்டணமும் இல்லை!

புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...

ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ஒரே தலைப்பில் மட்டும் பயிற்சி அளிப்போம். ஒரு பயிற்சி வகுப்பில் 25 முதல் 30 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் விவசாயிகள் மிகத் தெளிவாக, நிதானமாகத் தெரிந்து கொள்ள முடியும். மதிய உணவு, டீ, பிஸ்கட் போன்றவையும் கட்டணம் இல்லாமல் தரப்படும். தவிர, விரிவாகக் கற்றுக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்காக ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் இலவசத் தொடர் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சிக்கு வருகிற விவசாயிகளை, வெற்றிகரமான அனுபவ விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி தருகிறோம். இரவு நேரங்களில் எங்களுடைய வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கிக் கொள்ளலாம். விவசாயிகள், தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை, பயிற்சி வகுப்புகள் இல்லாத நாட்களிலும்கூட வந்து விஞ்ஞானிகளை அணுகி, தீர்த்துக் கொள்ளலாம்'' என்ற சோழன் நிறைவாக,

கருவிகளுக்கும் பயிற்சி!

''விவசாயிகளுக்கு அனைத்து வகைகளிலும் பயனளிக்கக்கூடிய நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி, அவற்றை இயக்கவும் நேரடியாகப் பயிற்சி அளிக்கிறோம். லேசர் உதவியுடன் நிலம் சமப்படுத்தும் கருவி, நேரடி நெல் விதைக்கும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கடலை உரிப்புக் கருவி, தானியங்கள் பிரிக்கும் கருவி உள்ளிட்ட இன்னும் ஏராளமான புத்தம் புதிய கருவிகளை அறிமுகம் செய்து விவசாயிகளின் கையாலேயே இயக்க வைத்து பயிற்சிகள் அளிக்கிறோம். அசோலா, தீவனப் புல் கரணைகள், மீன் குஞ்சுகள், மண்புழு உரங்கள், விதைநெல் உள்ளிட்டவற்றை இங்கேயே உற்பத்தி செய்து, மிகவும் குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்'' என்று சொன்னார்.

புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...
புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...
புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...
புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...
புதிய முயற்சிகள்... பலவிதமான பயிற்சிகள்...
அடுத்த கட்டுரைக்கு