நீர் மேலாண்மை

மழை... இரண்டெழுத்து கவிதை இது. இயற்கையின் கொடைகளில் உயர்ந்த கொடை. அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை நீர் என்றால், அந்த நீருக்கு ஆதாரம், மழை. அதனால்தான் 'விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த் துளி’ என்றார்கள். மழை என்றதும், குழந்தைப் பருவத்து மழைக்காலங்கள்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். மழை ஓய்ந்தவுடன் ஓடும் நீரில் ஓடவிட்ட காகிதக் கப்பல்களும், மழையில் குளித்து நிற்கும் தாவரங்களின் கிளைகளை ஆட்டி, அதிலிருந்து சிதறும் நீர்த்துளிகளில் நனைந்து, சிலிர்ப்பதுமான நினைவுகள்... இன்னமும் ஈரமானதாகவே இருக்கின்றன.

வானில் இருந்து பூமியை நோக்கி வரும் உயிர்த் துளிகள், காய்ந்து கிடக்கும் பொட்டல், புழுதியைத் தொட்டவுடன் கிளர்ந்து எழும் மண்வாசனைக்கு ஈடு இணை ஏதுமில்லை. மழை பெய்யும்போது மண் மட்டுமல்ல... மனித மனங்களும் ஈரமாகின்றன. மழை, ஓர் அணுவைப் போன்றது. அதனால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். ஆனால், இயற்கையை நம் இஷ்டப்படி வளைத்ததன் விளைவு... வாரா மழையாகி விட்டது, வான்மழை! வயல்கள் வறண்டு கிடக்கின்றன... தாகத்தால் தொண்டைகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. நட்டு வைத்த நெடுங்குச்சிகளாக மொட்டையாக நிற்கின்றன தென்னைகள். இத்தனை விளைவுகளைப் பார்த்து அனுபவித்த பிறகும், மழைநீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், நம் மனதில் எழவே இல்லை! இந்த விஷயத்தில் தனி நபர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால், அரசாங்கத்தை எப்படி மன்னிப்பது? குடிநீருக்காக குடத்தைத் தூக்கிக் கொண்டு ஓடும் ஒவ்வொரு சாமான்யனின் துன்பத்துக்கும், அரசின் தொலைநோக்குப் பார்வையில்லாத திட்டங்கள்தானே காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீர்..தண்ணீர்...

சென்னைக்கான குடிநீர்த் திட்டம்!

ஒவ்வோர் ஆண்டும் பெய்யும் மழைநீரை முறையாகச் சேமிக்காமல், கடலில் கலக்கவிட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று கையேந்தி என்ன பயன்? டெல்டா மாவட்ட விவசாயம் மட்டுமல்ல... சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டையும் போக்கும் கதவணைகள் திட்டத்தைத் தொடர்ந்து பலர் வலியுறுத்தி வந்தாலும், அரசின் காதுகள்... ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்டது போல மூடியே கிடக்கின்றன. இத்திட்டத்தைப் பற்றி பொதுப் பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவிச் செயற்பொறியாளர் குணசேகரன் சில தகவல்களை என்னிடம் சொன்னார்.

'

தண்ணீர்..தண்ணீர்...

தலைநகரம் தாகத்தால் தவிச்சுக்கிட்டு இருக்கு. அடுத்து வரப்போற காலகட்டம் இன்னும் கொடுமையா இருக்கப் போகுது. அரசு உடனடியா சில திட்டங்களைச் செயல்படுத்தினா, அடுத்து வரப்போற பேராபத்தைத் தடுக்கலாம். 'தண்ணியில்ல... தண்ணியில்ல’னு சொல்ற நாம, ஒவ்வொரு வருஷமும் கொள்ளிடம், சேத்தியாதோப்பு அணைகள்ல இருந்து மட்டும் எவ்வளவு தண்ணியை வீணா கடலுக்கு அனுப்புறோம் தெரியுமா..? 2011-ம் வருஷம் 26.41 டி.எம்.சி., 2012-ம் வருஷம் 4.18 டி.எம்.சி., 2013-ம் வருஷம் 18.14 டி.எம்.சி.னு ஏகப்பட்ட தண்ணியை வீணாக்கியிருக்கோம். சென்னையோட ஓராண்டு குடிநீர்த் தேவை... 20 டி.எம்.சி-தான். ஒவ்வொரு வருஷமும் மழைக்காலத்துல கிடைக்கிற தண்ணியை தடுப்பணைகள் கட்டி முறையா சேமிச்சு, வீராணம் மூலமா சென்னைக்குக் கொண்டு போனா, தட்டுப்பாடுங்கிற வார்த்தையையே இல்லாம செஞ்சுடலாம்.

கொள்ளிடத்துல அணைக்கரைக்கு கீழே ஆறாவது மைல்ல ஒரு கதவணை, வல்லம் படுகை பக்கத்துல ஒரு கதவணை, வெள்ளாறுல ஓரத்தூர் பக்கத்துல ஒரு கதவணை, புவனகிரி பக்கத்துல ஒரு கதவணைனு நாலு கதவணைகளைக் கட்டணும். அணைக்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர்ல கதவணை கட்டுனா, 2.5 டி.எம்.சி. தண்ணியை சேமிக்க முடியும். அதை, அணையோட பின்புற வழியா வட வாறுக்கும், வீராணத்துக்கும் கொண்டு வரலாம். இது மூலமா, வடவாறு, வீராணம் பாசனமும் சிறப்பா நடக்கும். சென்னைக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.

அணைக்கரையும், சேத்தியாத்தோப்பும் கடற்கரைப் பகுதிக்கு பக்கத்துல இருக்கறதால, வருஷத்துக்கு 1,400 மில்லி மீட்டர் மழை கிடைக்குது. இங்க தண்ணீர் தேவையும் குறைவா இருக்கறதால, அதிகப்படியான நீரை சேமிக்க முடியும்.

போதுமான தண்ணீரை சேமிக்க, வடிகால் பகுதியில் இடம் இருக்கறதால, சேமிக்கற தண்ணியை சென்னைக்கு எடுத்துட்டுப் போறதுல எந்த சிக்கலும் இருக்காது. சென்னையோட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்றதுக்கு இதைவிட அருமையான திட்டம் இருக்க முடியாது. இந்தப் பகுதியில தண்ணியைத் தேக்கினா... ரெண்டு பக்கமும் உப்புநீர் உள்ள வர்ற வாய்ப்பும் குறைவு. அதோட, இந்தப் பகுதி முழுக்க நீர் செறிவூட்டம் நடந்து, நிலத்தடி நீர் பெருகும். இதுதொடர்பா, நானும் அரசாங்கத்துக்கு பல முறை கடிதம் எழுதியிருக்கேன். ஆனா, ஒண்ணும் நடக்கல. காலம் போன கடைசியிலயாவது இதைச் செய்யலைனா, பிறகு வருத்தப்படுறதுக்குகூட வாய்ப்பு இருக்காது’ என்றார், குணசேகரன்.

தண்ணீர்..தண்ணீர்...

இதுபோன்ற பெரிய திட்டங்களை அரசாங்கமும், நீர்நிலைகள் பாதுகாப்பை பொதுமக்களும் கையில் எடுத்தால்தான் வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும். 'ஒரு கை தட்டியா ஓசை எழப்போகுது... நீர்நிலைகளைக் காப்பாத்தணும்னு நான் மட்டும் நினைச்சா போதுமா?’ என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான்.

ஆனால், 'இது எனது நீர்நிலை... ஆண்டாண்டு காலமாக எங்கள் பகுதி மக்களின் தாகத்தைத் தீர்த்ததற்கு நன்றிக்கடனாக, இதைப் பராமரிக்கும் பணியை தனியாளாகவாவது செய்தே தீருவேன்’ என்று உறுதி எடுத்துக்கொண்டு, செயலில் இறங்கினால் போதும். இப்படி ஒவ்வொருவரும் நினைக்கும் போது சிறுதுளி பெருவெள்ளமாகத்தானே செய்யும்.

தண்ணீர்..தண்ணீர்...

'இதெல்லாம் பேசுறதுக்குத்தான் நல்லா இருக்கும்’ என நினைப்பவர்களுக்கு, 'இல்லை...செயலிலும் முடியும்’ என நிரூபித்து வருகிறார்கள், ஏராளமான இளைஞர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வினோத்ராஜ் சேஷன். '125 ஏக்கர் பரப்பளவுள்ள திருச்சி மாவடி குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்' என்ற எண்ணம் இந்த தனிமனிதனுக்கு வந்தது. இதன் விளைவு... வறண்டு கிடந்த அந்தக் குளத்தில், இந்த கோடையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது?!

தண்ணீர்..தண்ணீர்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism