Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'இயற்கை விவசாயம் மட்டுமல்ல... இங்கிலீஸும்!' க. ரங்கராஜ் ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'இயற்கை விவசாயம் மட்டுமல்ல... இங்கிலீஸும்!' க. ரங்கராஜ் ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மையோடு சேர்த்து, தன் வாழ்க்கைக் கதையையும் எழுதி வந்தார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார். 39 அத்தியாயங்களை முடித்துக் கொடுத்ததோடு, மண்ணில் விதையாகி விட்டார். அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாசர்களுக்குத் தொகுத்துத் தரும் வகையில், அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, முடிந்தவரை அனைத்தையும் சேகரித்துத் தர தீர்மானித்துள்ளோம். அந்த வகையில், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், இதழ்தோறும் பேசுகிறார்கள்.

இந்த இதழில் பேசுபவர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுகம்பட்டி 'கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை’ மேலாளர் க. ரங்கராஜ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பண்ணையில்தான், ஏழு ஆண்டுகள் 'இயற்கை வேளாண்மை’ தவத்தை மேற்கொண்டார், நம்மாழ்வார். அந்த ஏழு ஆண்டுகளும் பண்ணை மேலாளர் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க தேசாந்திரியாக மாறியபோது, ரங்கராஜிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இனி, ரங்கராஜ் பேசுவதைக் கேட்போம்....

''அண்ணாச்சி (நம்மாழ்வார்), 'இதைச் செய், அதைச் செய்’னு யாரையும் எப்பவும் அதட்டிப் பேசமாட்டார். பண்ணையில என்ன வேலை செய்யணும்னு நாங்கதான் முடிவு செய்வோம். நாங்க செய்யுற வேலையைத் தள்ளி நின்னு வேடிக்கைப் பார்ப்பாரு. ஏதாவது, தப்பு நடந்தா கோவிச்சிக்கமாட்டாரு. 'நல்லதுய்யா, தப்பு பண்ணி, பண்ணித்தான் நிறைய கத்துக்க முடியும்’னு சொல்லி, திரும்பவும் அந்தத் தப்பு நடக்காம இருக்க என்ன செய்யணும்னு சொல்வாரு.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

பண்ணை வேலையோடு, சுற்று வட்டாரத்துல இருக்கிற 11 ஊர் கோயில் நிலத்துல மரங்கள் வளர்க்குற வேலையையும் செய்தோம். அண்ணாச்சி, அந்த 11 இடத்துக்கும் தினமும் வந்து பார்ப்பாரு. இயற்கையைப் பத்தி பேசுறோம். பாலைவனத்து எண்ணெயை வாங்கித்தான் வண்டி ஓட்டணுமானு சொல்லி, குதிரை வண்டியிலதான் வருவார். அவர் வந்தா, அந்த இடமே கலகலப்பா மாறிடும். கோயில் நிலத்துல காடு வளர்க்கும்போது, உள்ளூர் மக்களும் மரக்கன்னு வைக்கிற வேலையைச் செய்வாங்க. பாதிநேரம் வேலை, பாதிநேரம் பாடம்ங்கிறது அவரோட கொள்கை. 'ஊர் மக்களோட சேர்ந்து வேலை செய்யும்போது, நாம முதலாளி மாதிரி நடந்துக்கக் கூடாது. அதனால, அவங்கள உற்சாகப்படுத்தணும்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். இந்த வேலைய செஞ்சா, நமக்கு நல்லது நடக்கும்னு நம்பிக்கை வர வைக்கணும்னு’ சொல்வார்.

எப்பவும், அண்ணாச்சி மட்டுமே பேசமாட்டார். சுத்தி இருக்கறவங்களையும் பேச சொல்வார். அப்படி ஒரு முறை பேசும்போதுதான், ஒரு பொண்ணு 'அடிக்காட்டுல, நடுமாட்டுல, நுனி வீட்டுல..’னு விடுகதை சொல்லிச்சி. இதைத்தான் வாழ்நாள் முழுக்க, தான் போற இடங்கள்ல எல்லாம் சொல்லி வந்தாரு அண்ணாச்சி. 'ஊர், உலகமெல்லாம் சுத்துன ஆளு நான். ஆனா, புதுக்கோட்டை மாவட்டத்துப் பொண்ணு சொன்ன விஷயம்தான் இயற்கை விவசாயத்துல என்னை வேகம் எடுக்க வெச்சிது'னு எங்க மண்ணையும், மக்களையும் பெருமைப்படுத்துவார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம் மட்டுமில்லாம, ராத்திரி நேரத்துல முறைசாரா பள்ளியும் நடத்தினோம். அண்ணாச்சிதான் பயிற்சி தருவார். அவர் சொல்லிக் கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தினா... மூணு மாசத்துல தமிழை எழுதப் படிக்கத் தெரிஞ்சிக்கலாம். காடு வளர்ப்பு வேலை செய்யும்போது, வெளிநாட்டுல இருந்து, வெளிமாநிலத்துல இருந்தெல்லாம் ஆட்கள் வருவாங்க. அவங்க இங்கிலீஷ்லதான் பேசுவாங்க. பண்ணையில இருந்த ஆட்கள், அதிகபட்சம் பத்தாவதுதான் படிச்சிருக்கோம். அதனால, நமக்கு இங்கிலீஷ் தெரியலையேனு வருத்தப்பட்டோம். இதைக் கேள்விப்பட்ட அண்ணாச்சி, ' அய்யா, தமிழ் மொழி தெரிஞ்சவன், எந்த மொழியையும், சுலபமா கத்துக்கலாம். இன்னிக்கே, இங்கிலீஷ் பாடத்தை ஆரம்பிக்கலாம்’னு சொல்லி வட்டமா உட்கார வெச்சி பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டார். 'இலைனா... லீஃப், சம உயர வரப்புனா... பண்டிங்க், பண்ணைக் குட்டைனா... பாண்ட்...' இப்படி நாங்க அன்றாடம் பயன்படுத்துற தமிழ் வார்த்தை களை இங்கிலீஷ்ல பேசக் கத்துக் கொடுத்தாரு. அதுதான், இப்ப பண்ணைக்கு வர்ற வெளிமாநில, வெளிநாட்டு ஆட்களோட நான் பேசறதுக்கு உதவி செய்யுது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

என்னை ஒரு நாள் கூப்பிட்டு, 'உனக்கு கால் காணி நிலம் தரப்போறோம். அதுல என்ன செய்யலாம்னு சிலதைச் சொல்வேன். சில வேலைகளை நீயே முடிவு பண்ணி செய்யணும்'னு சொன்னார். கால் காணி நிலத்துல, உணவுப் பயிர், கால்நடைக்குத் தீவனம், பழ மரம், பலகை தர்ற மரம், ஆடு, மாடு வளர்ப்பு...

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

எல்லாம் செய்யச் சொன் னார். இத்தனைக்கும் அப்போ, இந்த இடம் பொட்டல் காடு. இலை, தழைகளைப் போட்டு, மண்ணை வளமாக்கி வேலையைத் தொடங்கினோம். கால் காணி நிலத்துல தட்டைப்பயறு, மொச்சை, காய்கறி, கீரைனு தளதளனு வளர்ந்திருச்சி.

ஒரு நாள் கால் காணி தோட்டத்துக்கு வந்த அண்ணாச்சி, ஒவ்வொரு பயிரா பார்த்தார். 'இதனால, என்ன நன்மை... இதை ஏன் இங்க நடவு செய்யணும்?'னு கேள்வி கேட்டுக்கிட்டே வந்தார். 'காய்கறியை வீட்டுத் தேவைக்குப் போக விலைக்குக் கொடுக்கலாம். மொச்சை, தட்டைப்பயறு வளரும்போது, காத்துல இருக்கிற தழைச் சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும், கோழி முட்டை போடும், வயல்ல இருக்கற பூச்சிகளைப் புடிச்சி தின்னும்'னு சொல்லிக் கிட்டே வந்தேன். அண்ணாச்சி, பட்டுனு கட்டிப்புடிச்சி, 'என்னோட வேலை இங்க முடிஞ்சிடுச்சிய்யா, இனி நீதான் கொழிஞ்சிப் பண்ணைக்கு மேலாளர்’னு சொன்னார்'' என்றபோது... ரங்கராஜின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism