Published:Updated:

தண்ணீர்..தண்ணீர்...

ஆர். குமரேசன் படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

நீர் மேலாண்மை

என் பாட்டன் தாகம் தணித்த கண்மாய்... என் அப்பன் ஆடு, மாடு குளிப்பாட்டிய கண்மாய்... நான் குழந்தைப் பருவத்தில் குதித்து விளையாடிய கண்மாய்... இன்றைக்கு குப்பைக் கிடங்காகிக் கிடக்கிறது. அந்தத் தடாகத்தில் தண்ணீரை மட்டுமே பார்த்த கண்கள், இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து நீராதாரங்களுக்கும் இதுதான் நிலைமை.

காய்ந்து கிடக்கிறது காவிரி. பாழாகிக் கிடக்கிறது பாலாறு. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் உடுமலைப் பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணையில்கூட, ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருக்கின்றன. வரலாறு காணாத வறட்சியில் சிக்கியிருக்கிறது, வைகை அணை. 'இது இயற்கையின் கடைசி எச்சரிக்கை’ என்று எச்சரிக்கிறார்கள்... சூழலியலாளர்கள். ஆனால், அதை யாரும் லட்சியம் செய்யவே இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அரசு நடத்தும் சாராயக்கடையில் 'தண்ணி’யும், அதைக் கலந்து குடிக்க மலிவு விலையில் கிடைக்கும் 'அம்மா தண்ணி’யும் கிடைத்தால் போதும்'’ என்கிற மனநிலைதான் பெரும்பாலானோருக்கு. இந்த நிலை மாற வேண்டும். 'இந்த உலகம் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டது’ என்கிற எண்ணத்தில், எதிர்கால ஆபத்துகளை உணராமல்... இயற்கையை இஷ்டத்துக்குச் சீரழிக்கும் இழிச்செயல் விட்டொழிக்கப்பட வேண்டும். நிகழ்கால 'மாய’ சுகத்தை சுகிக்கும் மனநிலை மாறவேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் பேரழிவை சந்திக்கும்.

தண்ணீர்..தண்ணீர்...

'தனிமரம் தோப்பாகாது... என் ஒருவனால் எதை சாதித்து விட முடியும்’ என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்தாலே போதும்... மாற்றம் தானாக மலரும். ஒளியை ஏற்படுத்த பெரிய ஆயுதங்கள் தேவையில்லை. ஒரு சிறு தீக்குச்சி போதும். அப்படி ஒரு தீக்குச்சிதான், வினோத்ராஜ் சேஷன். சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் காண சகிக்காமல், தனியாளாகக் களத்தில் இறங்கிய போராளி. திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத், அவருக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத திருச்சியிலுள்ள மாவடி குளத்தைச் சீர்செய்ய நினைத்ததுதான் உண்மையான சமூக அக்கறை.

140 ஏக்கர் பரப்புள்ள மாவடி குளம் ஆக்கிரமிப்புகளால் 50 ஏக்கருக்குள் சுருங்கி... நீர்வரும் பாதை அடைக்கப்பட்டு வறண்ட நிலையில் இருந்தது. இதை சீர் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை எண்ணத்தை மட்டும் கைகொண்டு அந்த இளைஞன் களம் இறங்கியதன் விளைவு... ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீருடன் காட்சியளிக்கிறது, மாவடி குளம்!

மாவடி குளத்தின் கரையில் நடந்தபடி வினோத்திடம் பேசினேன். ''திருவண்ணாமலை பக்கத்து கிராமம்தான் என்னுடையது. திருச்சியில தனியார் மருத்துவமனையில நேத்து வரை வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம்னு எண்ணம் வந்ததால வேலைய ராஜினாமா செஞ்சுட்டேன். எனக்கு சுற்றுச்சூழல்ல அதிகப் பிடிப்பு. நம்மக்கிட்ட இருக்கற

தண்ணீர்..தண்ணீர்...

இயற்கை வளங்களோட உன்னதம் புரியாம சுயநலத்துக்காக அதை அழிக்கறதைப் பாக்கும்போது கோபம் கோபமா வரும். அதுவும் படிச்சவங்களே அதை செய்றதை நினைச்சாத்தான் ஆத்திரமா இருக்கும்.

இடையில நம்மாழ்வார் ஐயாவோட தொடர்பு ஏற்பட்டுச்சு. இத்தனை வயசுலயும் இயற்கை மேல அவர் வெச்சிருந்த காதலைப் பாக்கும்போது, ஆச்சர்யமா இருக்கும். 'நாமளும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்’னு யோசிச்சேன். 'நீராதாரங்களைச் சேமிப்பதுதான் நம்ம நாட்டோட தற்போதையத் தேவை’ங்கிறதால 'அதுல ஏதாவது பண்ணலாம்’னு யோசிச்சேன். திருச்சியில இருக்கற குளங்களோட பட்டியல், வரைபடம் எல்லாத்தையும் சேகரிச்சுப் பாத்ததுல திருச்சி மாநகருக்குள்ள 140 ஏக்கர் பரப்புல இருக்கற மாவடி குளம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். முதல்ல இங்க இருந்தே தொடங்குவோம்னு முடிவு பண்ணினேன்'' என்று குளத்தை நோக்கி கை நீட்டிய வினோத், தொடர்ந்தார்.  

''140 ஏக்கர்னு அரசாங்க ஆவணங்கள்ல இருந்தாலும், உண்மையில சில ஏக்கர்ல சுருங்கிப் போய் குட்டை மாதிரிதான் இருந்துச்சு, இந்தக் குளம். அதோட, முழுக்க நெய்வேலி காட்டாமணக்கு புதர் மாதிரி மண்டிக் கிடந்துச்சி. நீர்வரத்து வாய்க்காலை ஏர்போர்ட் பக்கத்துல ஆக்கிரமிப்புப் பண்ணி அடைச்சிட்டாங்க. 'இதையெல்லாம் எப்படி யாவது சரி செஞ்சுடணும்’னு தோணுச்சு. ஆனா, திருச்சியில நண்பர்கள் வட்டம் எனக்கு இல்லை. அதனால, 'மாவடி குளத்தைச் சுத்தப் படுத்தப் போறேன்... விருப்பம் இருக்கறவங்க வந்து கலந்துக்கலாம்’னு முகநூல்ல (ஃபேஸ்புக்) ஒரு பதிவைப் போட்டுட்டு நேரா, குளத்துக்குப் போய் நெய்வேலி காட்டாமணக்கைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சேன். முகநூலைப் பார்த்துட்டு நண்பர்களும் குளம் சுத்தம் செய்ய வந்தாங்க.

ஆனா, உள்ளூர்க்காரங்க யாரும் வரல. 'அது ஒரு அரசியல் புள்ளியோட ஆக்கிரமிப்புல இருக்கற இடம். 94-ம் வருஷத்துல இருந்து ஆக்கிரமிப்பை எடுக்க, பலர் போராடிப் பாத்துட்டு விட்டுட்டாங்க. உனக்கு ஏன் வீண்வேலை?’னு சிலர் சொன்னாங்க. ஆனா, நான் விடுற மாதிரி இல்லை. தொடர்ந்து வேலை செஞ்சேன். நண்பர்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சு. இது பத்திரிகைகள் மூலமா வெளிவரவும், மூணாவது வாரம் கலெக்டர், ஜெயஸ்ரீ முரளீதரன் மேடம் நேரடியா குளத்துக்கு வந்துட்டாங்க. நாங்க வேலை செய்றதைப் பாத்துட்டு, எங்களோட கொஞ்ச நேரம் வேலை செஞ்சதோட, ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அதிரடியா எடுக்க உத்தரவு போட்டாங்க. நெய்வேலி காட்டாமணக்கை அழிச்சு, ஆக்கிரமிப்பையும் ஒழிச்சதால... இப்ப ஏரி மாதிரி ஆயிடுச்சு. மாவடி குளம். குளத்துக்கு தண்ணி வர்ற வாய்க்காலையும் சீர்செஞ்சதால இப்ப இது முழுமையாகிடுச்சு. சிதிலமாகிப் போன கலிங்குகளை சரி செஞ்சு, கரையை உயர்த்தினா அதிகளவு தண்ணீர் தேக்கலாம்'' என்ற வினோத், நிறைவாக,

''நாங்க செஞ்ச வேலையோட விளைவு, இந்த கோடையிலயும் தண்ணி இருக்கு. இதை வெச்சு விவசாயமும் சிறப்பா நடக்குது. இது என் ஒருவனால் மட்டும் சாத்தியமாகல. பலரோட உழைப்பும் இருக்கு. அதுக்கு மேல நாமளும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய ணும்ங்கிற சிந்தனை இருக்கு. அடுத்தபடியா உய்யகொண்டான் குளத்தை சீரமைக்கிற நடவடிக்கையில இறங்கியிருக்கோம். என்னைப் பொறுத்தவரை இது நம்ம சொத்து, இதை முறையா பராமரிச்சு, பாது காக்கணும்ங்கிற எண்ணம் பொதுமக்களுக்கு வரணும். அப்படி வந்துட்டா, எல்லா நீர்நிலைகளையும் நிச்சயம் சீர்படுத்த முடியும்''

-வினோத்தின் வார்த்தைகளில் தெறித்த உறுதி... எனக்குள் நம்பிக்கையை விதைத்தது.