பிரீமியம் ஸ்டோரி

 மாத்தி யோசி

இயற்கை விவசாயத்தைப் பத்தி, பாலபாடம் கத்துக்கணும்னு ஆசைப்படறவங்களுக்கு இந்த சேதி. முதல்ல, நாட்டுக்கோழி, நாட்டு மாடு, ஆடுங்கள வளர்த்துப் பாருங்க. இந்த 'மூணு இயற்கை விஞ்ஞானி’களும், அடுத்த மூணு வருஷத்துல இயற்கை விவசாயத்தைப் பத்தி, மத்தவங்களுக்கு நீங்க பாடம் சொல்லிக் கொடுக்கற அளவுக்கு உங்களைத் தயார் செஞ்சிவாடுங்க.

மண்புழு மன்னாரு

முதல் விஞ்ஞானி... கோழி! இது தினமும் என்ன செய்யுதுனு கவனிச்சிப் பாருங்க. பல்கலைக்கழகத்துலகூட, இதுங்க அளவுக்குப் பாடம் கத்துத்தர முடியாது. காலையில எழுந்த உடனே வயல்வெளிக்கு ஓடும். செடிங்க மேல பூச்சி, பொட்டு இருந்தா, புடிச்சி தின்னும். அதை வெச்சே, பயிர்ல பூச்சித் தாக்குதல் அதிகம்னு உணரலாம். வயல்ல, களைச் செடிங்களோட ஆதிக்கம் அதிகம் இருந்தா... அதைக் கொத்தி எடுக்கும். நாள் முழுக்க இப்படி ஏதாவது ஒரு வேலையை செய்துகிட்டே இருக்கும் கோழிங்க.

அடுத்த விஞ்ஞானி... நாட்டுமாடு. இது பால் குறைச்சலா கொடுக்கும். ஆனா, சாணமும், சிறுநீரும் வாரி வழங்கும். நாட்டுமாட்டை,  மினி உரத் தொழிற்சாலைனுகூட சொல்லலாம். நாட்டுமாட்டுச் சாணத்துல அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியானு மண்ணை வளமாக்குற நுண்ணுயிரிங்க ஏராளமா இருக்குது. பயிர்ல, பூச்சி, நோய்த் தாக்குதல் வந்தா, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரோட... பத்து லிட்டர் தண்ணியைக் கலந்து, தெளிச்சிவிடுங்க. பூச்சிங்க தலைதெறிக்க ஓடிப்போயிடும். நோய்த் தாக்குதலும் குறைஞ்சிடும், பயிருங்களும் பசுமைக் கட்டி வளரும்.

மூணாவது விஞ்ஞானி... ஆடு. தோட்டத்துல ஆட்டை மேய்ச்சலுக்கு விடுங்க. அது கடிக்காத இலை, தழைங்க எதெல்லாம்னு கவனிச்சிப் பாருங்க. அந்த இலை, தழைங்களுக்கு பயிர்ல வர பூச்சி, நோய்களை விரட்டற சக்தி அதிகம்.

மண்புழு மன்னாரு

ஆடு, மாடுங்களுக்கு உண்ணித் தொல்லை இருந்தா, காசு கொடுத்து மருந்து வாங்க வேண்டாம். கோழியே வந்து, உண்ணியைக் கொத்தி சாப்பிடும். இன்னும், எத்தனை, எத்தனையோ வேலைகளை அந்த மூணு விஞ்ஞானிகளும் செய்றாங்க. அவங்ககிட்ட பாடம் படிக்க, நீங்க தயாரா?

சொர்க்க மரம்னு (Paradise Tree) ஒரு மரத்துக்குப் பேரு உண்டு. இதை விஞ்ஞானிங்க 'சைமரூபா’னு சொல்றாங்க. கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்துல இந்த மரம் நிறைய நிக்குது. ஆனா, இதோட பலன் மட்டும் இன்னும் விவசாயிங்களுக்கு வந்து சேர்ந்த மாதிரி தெரியல. இந்த மரத்துக்கு ஏன் 'சொர்க்க மரம்'னு பேரு வந்துச்சி அப்படிங்கறத பிரான்சு நாட்டுல கதையா சொல்றாங்க.

மாவீரன் நெப்போலியன், ரஷ்யா மேல படை எடுத்த நேரம் அது. ரஷ்யா நாட்டு எல்லையை மிதிச்சவுடனே, 'ஐயோ, அம்மா, வயித்த வலிக்குதே, உயிர் போகுற மாதிரி இருக்குதே...’னு நெப்போலியனோட படை வீரருங்க சுருண்டு, சுருண்டு விழுந்தாங்களாம். இதைப் பார்த்த உள்ளூர் விவசாயி ஒருத்தர், பக்கத்துல நின்ன, மரத்து இலையைப் பறிச்சி, சாறு எடுத்து கொடுத்தாராம். அதைக் குடிச்ச கால் மணி நேரத்துல, படை வீரருங்க, 'ஆஹா, வயித்து வலி போயிடுச்சி, நரகத்துல இருந்து சொர்க்கத்துக்கு வந்த மாதிரி இருக்கு’னு சொல்லி அந்த மரத்தைத் தொட்டு கும்பிட்டு இருக்காங்க. அதுக்கு பிறகுதான், இந்த மரத்துக்கு 'சொர்க்க மரம்’னு பேரும் வந்துச்சாம்.

நிழல் கொடுக்க, எப்பவும் பசுமையா இருக்கற மரத்தைத்தான் வைக்கணும். அதுக்கு இந்த சொர்க்க மரத்துக்கு முதலிடம் தரலாம். எந்த காலத்துலயும், இலை கொட்டாம, பச்சைக் குடைப்பிடிச்சி நிக்கும். வாய்க்கால் வரப்புல, இந்த மரத்தை வளர்க்கலாம். இதோட இலைங்க, அருமையான இயற்கை உரம். இதோட இலைங்கள, மண்புழுங்க சர்க்கரைக் கட்டி மாதிரி தின்னும்.

இந்த மரத்து பழம் சுவையா இருக்கும். இதோட கொட்டையிலிருந்து கிடைக்குற எண்ணெயை... சோப்பு, ஷாம்பு தயாரிக்க பயன்படுத்துறாங்க. இந்த மரத்துல, ஆண், பெண் ரெண்டு வகை உண்டு. பெண் மரம் மட்டும்தான் காய்ப்புக்கு வரும். ரெண்டு வகை மரமும் மரச்சாமான் செய்ய அருமையானது. எண்ணெய்த் தன்மை இருக்கறதால, இந்த மரத்தை பூச்சிங்க தாக்குறதில்ல. அதனால, விதவிதமான பொம்மைங்க, கைவினைப் பொருளுங்க தயாரிக்கப் பயன்படுத்தலாம். இந்த மரக்கன்னுங்க, தமிழ்நாட்டுல இருக்கிற வனவிரி வாக்க மையத்துல தாராளமா கிடைக்குது. இது மானாவாரியில நல்லா வளர்ந்து நிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு