Published:Updated:

'தொடங்கப்படாத தூர்வாரும் பணிகள்... பொறுப்பற்ற பொதுப்பணித்துறை...'

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

 பிரச்னை

காவிரி டெல்டா... என்றாலே, ரத்தநாளங்களாக விரிந்துகிடக்கும் காவிரியின் கிளைஆறுகளும்... கால்வாய்களும்தான் நினைவுக்கு வரும். இவையெல்லாம் உயிர்ப்போடு இருந்தால்தான், டெல்டாவே மூச்சுவிடும். இதையறிந்துதான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே... ஆண்டுதோறும் காவிரியைச் சீரமைத்து, பாசனத்தை உறுதிப்படுத்தும் வேலையைச் செய்து வந்தார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், சில, பல ஆண்டுகளாக காவிரிப் பாசனக் கட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பது... விவசாயிகளைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதைவிடக் கொடுமை... தேர்தலைக் காரணமாகக் காட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படும் தூர்வாரும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள், இதுவரையிலும் தொடங்கப்படவில்லை என்பதுதான்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வெண்டாங்கோட்டைப் படுகை அணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன், ''இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக இருப்பது, எங்களை வேதனைடையச் செய்துள்ளது. ஆறுகளிலும், கிளை வாய்க்கால்களிலும் காட்டாமணக்கு, காட்டுக்கருவை மண்டிக் கிடக்கின்றன. தண்ணீர் நகர்ந்து செல்லமுடியாதபடி மரம், செடி, கொடிகள் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இவற்றை தூர் வாருவதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள்கூட துவக்கப்படவில்லை.

'தொடங்கப்படாத தூர்வாரும் பணிகள்... பொறுப்பற்ற பொதுப்பணித்துறை...'

ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான எந்த ஒரு முகாந்திரமும் தற்போது தெரியவில்லை. நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் தாமதம் செய்துகொண்டே போனால், இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை 5% கூட செய்து முடிக்க முடியாது. திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஏப்ரல் 31-ம் தேதிக்குள் டெண்டர் விட்டு முடித்திருக்க வேண்டும். இன்னும் திட்ட மதிப்பீடே முடிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள்'' என்றார், வேதனையுடன்.

திருவையாறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாறன் பேசும்போது, ''இந்த ஆண்டு தேர்தலைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், ஆண்டுதோறும் இதே கதைதான் நடக்கிறது. பணிகளை மிகமிக தாமதமாக, அதாவது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் தொடங்கினால்தான், அடுத்த சில நாட்களிலேயே ஆற்றில் தண்ணீர் வரும்போது பொய்க்கணக்கு காட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்பதுதான் காரணமே. அதாவது, தண்ணீர் வந்துவிட்டால், தூர் வாரப்பட்டதா... இல்லையா என்பதைக் கண்டறிவது கடினம். அதனால், தூர் வாரியதாக கணக்கெழுதி பொதுப்பணித்துறை அதிகாரிகளும், காண்ட்ராக்டர்களும் பெரிய அளவில் கொள்ளை அடிக்க முடியும்'' என்று சாடியவர்,

'தொடங்கப்படாத தூர்வாரும் பணிகள்... பொறுப்பற்ற பொதுப்பணித்துறை...'

''இந்தக் கூட்டுக்கொள்ளை இனிவரும் காலங்களிலும் தொடராமலிருக்க... அந்தந்தப் பகுதிகளில் உள்ள நிஜமான விவசாயிகளின் அதிகாரப்பூர்வமான பங்களிப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடுகளோடு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று சொன்னார்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூரைச் சேர்ந்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பி.ஆர். பாண்டியன், ''கடந்த 20 ஆண்டுகளில் ஒரு முறைகூட, தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவே இல்லை. தமிழக அரசு, தூர்வாரும் பணிக்கென நிரந்தர அரசாணை பிறப்பித்தால்தான், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இயல்பாக நிதி ஒதுக்கப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக, 'சிறப்பு நிதி ஒதுக்கீடு’ என்ற அடிப்படையில்கூட நிதி ஒதுக்கவில்லை. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

மதகுகள், கதவணைகள் உள்ளிட்ட கட்டுமானங்களைப் பராமரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் இருந்துதான், கடந்த மூன்று ஆண்டுகளாக தூர்வாரும் பணிக்கு நிதி எடுக்கப்படுகிறது. இதனால்தான், மதகு உள்ளிட்ட கட்டுமானங்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கட்டுமானங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதைவிட, தூர்வாரும் பணிகளுக்கு செலவு செய்வதில்தான் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், கட்டுமானங்களில் முழுமையாக ஊழல் செய்ய முடியாது. தூர்வாரும் பணிகளில் மிக எளிதாகச் செய்யலாம். ஊழலை நிரூபிக்க முடியாது'' என்றார் வேதனைக் குரலில்!

'தொடங்கப்படாத தூர்வாரும் பணிகள்... பொறுப்பற்ற பொதுப்பணித்துறை...'

இதுகுறித்து, காவிரி வடிநில கோட்டத் தலைமைப் பொறியாளர் பைந்தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது, ''திட்டமதிப்பீடும், இதற்கான நிதியும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்களுக்கு வந்ததும், டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும்'' என்று சொன்னார்.

கண்டுகொள்ளப்படாத கல்லணைக் கால்வாய்!

கால்வாய் சீரமைப்புப் பணிகள் பற்றி வருத்தம் பொங்கச் சொன்ன வீரசேனன், ''மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, மணல்மேல்குடி, நாகுடி உள்ளிட்ட பகுதிகள் எல்லாமே கடைமடைப் பகுதிகள். இங்குள்ள வயல்களுக்கு ஒழுங்காக பாசனத் தண்ணீர் வருவதே இல்லை. கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்பு செய்யப்பட்டால்தான், இங்குள்ள 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தப்பிப் பிழைக்கும்.

திருச்சி-தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்டங்கள் சந்திக்கக்கூடிய செம்பட்டு, வல்லம், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யக்கூடிய மழை காரணமாக பெருக்கெடுக்கும் நீர்... அக்னி ஆறு, அம்புலி ஆறு, நரி ஆறு, மகாராஜ சமுத்திரம், கண்ணன் ஆறு, பாட்டவனாச்சி ஆறு உள்ளிட்ட காட்டாறுகளின் வழியாக, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவற்றில் எல்லாம் தடுப்பணைகளைக் கட்டி, கடைமடைப்பகுதி விவசாயிகளின் பாசனத்துக்கு தண்ணீரைத் திருப்பி விடலாம். இதையும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை'' என்று சொன்னார்.

இதைப்பற்றி கேட்டபோது, ''உலக வங்கி யிடம் இருந்து நிதிபெற்று, கல்லணைக் கால்வாயை மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்று சொன்னார், காவிரி வடிநில கோட்டத் தலைமைப் பொறியாளர் பைந்தமிழ்ச் செல்வன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு