Published:Updated:

மீத்தேன் எமன்

விளைநிலங்களில் வெடிகுண்டு... விவசாயிகளின் தலையில் துண்டு! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன் ஓவியம்: செந்தில்

'எத்தனை நாளைக்குத்தான் குறுநில மன்னனாகவே இருப்பது? உடனே பேரரசனாக மாற வேண்டும்’ என ஆசைப்பட்டான் ஒரு குறுநில மன்னன். ஆனால், ஆசை இருக்கும் அளவுக்கு அவனிடம் வீரமில்லை. படை வீரர்களும்  கோழைகளாகவே இருந்தார்கள்.

'இவர்களை வைத்துக் கொண்டு, எப்படி பேரரசனாவது?’ என யோசித்த மன்னன், சாமியாரிடம் யோசனை கேட்டான். 'நீயும், சிப்பாய்களும் 108 நாட்களுக்கு தினமும் மூன்றுவேளை புலிப்பால் அருந்தி தவம் இருந்தால், வீரம் வந்து சேரும். மற்ற மன்னர்களை எளிதில் வீழ்த்திவிடலாம்’ என்றார், சாமியார்.

உடனடியாக, காட்டுவாசிகளிடமிருந்து ஏராளமான புலிகள் விலைக்கு வாங்கப்பட்டன. அவற்றை அரண்மனையில் வைத்துக்கொள்ள பயந்த மன்னன், 'வீட்டுக்கொரு புலி வளர்க்க வேண்டும்’ என்றான். தினமும் பால் கறந்து அரண்மனைக்கு அனுப்புங்கள்’ என தன் குடிமக்களுக்கு உத்தரவும் போட்டான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'விதியே’ என புலியை வீடுகளில் வளர்த்த மக்களுக்கு, அதன் உறுமல் சத்தம்தான் குலை நடுங்க வைத்தது. அச்சம் விலகாமல், அரசனிடம் முறையிட்டார்கள். 'பழகப் பழக சரியாகிவிடும்’ என்றான், மன்னன். அடுத்தடுத்த நாட்களில் உறுமல் அதிகமானதால், மக்கள் அரண்மனைக்கு ஓடி வந்தனர். 'கூண்டுக்குள் இருந்தால், உறுமத்தான் செய்யும். திறந்துவிடுங்கள். அமைதியாகி விடும்’ என்றான், மன்னன். கூண்டுகள் திறக்கப்பட, வெறியோடு வெளியில் வந்த புலிகள், அகப்பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறின. மன்னனும், சிப்பாய்களும் அரண்மனைக்குள் பாதுகாப்பாக இருந்தனர்.

மீத்தேன் எமன்

இக்கதையில் சொல்லப்படுவது போல்... அரசு கொண்டு வரும் (ஆபத்தான) திட்டங்களால், ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை. பாதிக்கப்படப் போவது அப்பாவி குடிமக்கள்தான். மீத்தேன், நிலக்கரி போன்ற திட்டங்களால் பேராபத்துகள் நிகழும்போது, ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும்... சென்னை, டெல்லி, மும்பை என்று பெருநகரங்களிலோ... அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று வெளிநாடுகளிலோ... செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த தைரியத்தில்தான், 'மக்கள் இத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தந்தாக வேண்டும்’ என மனசாட்சியே இல்லாமல் உபதேசம் செய்கிறார்கள். கேட்டால்... 'வளர்ச்சி... வளர்ச்சி' என்று கூப்பாடு போடுகிறார்கள். மெத்தப் படித்த மேதாவிகளாகக் காட்டிக்கொள்ளும் ஒரு வர்க்கம், இதற்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா கிராமங்களில் மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோல்-கேஸ் எடுப்பதால், இங்குள்ள மக்கள் சந்திக்கும் பாதிப்புகளின் பட்டியல் நீள்கிறது. இங்குள்ள விளைநிலங்களில் நிகழ்த்தப்படும் வெடிகுண்டு சோதனைகள், விவசாயிகளைக் கடுமையாகக் காயப்படுத்தி உள்ளன.

''என்னோட ஒரு ஏக்கர் நிலத்துல, நிறைய எரு அடிச்சி, பக்குவமா உழவு ஓட்டி, விதை தெளிச்சி வெச்சிருந்தேன். செழிப்பா முளைச்சிருந்த சமயத்துல, என்னோட அனுமதி இல்லாமலே வயல்ல பல இடங்கள்ல 150 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, வெடிகுண்டு வெடிச்சி நாசப்படுத்திட்டாங்க. வெடிக்கும்போது வெளியேறுற எண்ணெய் கலந்த தண்ணீரைத் தேக்கி வைக்க, அங்கங்க பெரிய பெரிய பள்ளம் தோண்டுனதால, ஒட்டுமொத்த நிலமும் பாழாகிடுச்சு'' என என்னிடம் வேதனைப்பட்ட திருவாரூர் மாவட்டம், திருபுஞ்சை, லூர்துசாமியின் சோகத்தை... சொல்லில் அடக்கிவிட முடியாது.

''வயல்ல பயிர் இருக்கும்போதே, கொஞ்சமும் மனசாட்சி இல்லாம வெடிகுண்டு சோதனை நடத்துறாங்க. 250 ஹெச்.பி. அளவுக்குப் பெரிய போர்வெல் மெஷினை வயலுக்குள்ள ஓட்டிக்கிட்டு வர்றதால, அழுத்தம் தாங்கமுடியாம, பயிர் மட்டுமில்லாம, நிலத்தோட மண் கண்டமும் பாதிச்சுடுது. மண்ணு இறுகிப் போயி, காத்தோட்டமே இல்லாமப் போயிடுது. ஒரு ஏக்கர்ல 10 இடம் வரைக்கும் வெடிகுண்டு சோதனை செய்றாங்க. இதுக்கு மூணு லாரி, ஒரு ஜே.சி.பி.னு நிலத்துக்குள்ள கொண்டு வருவாங்க. அதிகாரிகளோட கார், ஜீப் எல்லாமும் வயல்லதான் நிக்கும். இத்தனை வண்டி வந்தா... பயிர் என்னாகுறது?

மீத்தேன் எமன்

என் வயல்ல, ஒன்பது மாச கரும்பு நிக்கறப்ப, 7 இடங்கள்ல துளைபோட்டு வெடிகுண்டு சோதனை நடத்தினாங்க. இதுல சிக்கி, பாதிக்கு மேல கரும்புகள் காலி. கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம். ஆனா, ஒரு துளைக்கு 150 ரூபாய்னு கணக்குப் போட்டு, 1,050 ரூபாய் இழப்பீடு கொடுத்து முடிச்சிட்டாங்க'' என ஆதங்கப்பட்டார், கருப்பூர், கார்த்திகேயன்.

கமலாபுரம் ஊராட்சித் தலைவர் செல்வகணபதி சொன்ன புள்ளிவிவரத் தகவலைக் கேட்டால், என்னைப் போலவே உங்களுக்கும் தலைச்சுற்றும்.

''கமலாபுரம் பஞ்சாயத்துல 425 ஏக்கர் விளைநிலம் இருக்கு. ஒரே மாசத்துல, இங்க 4 ஆயிரத்து 600 வெடிகுண்டு சோதனை பண்ணியிருக்காங்க. அதாவது 150 அடி ஆழத்துல 4 ஆயிரத்து 600 துளைகள் தோண்டியிருக்காங்க. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாம, நிலத்தடி நீர் மட்டம் பல மடங்கு கீழ போயிடுச்சு.  

வெடிகுண்டு சோதனைகள் நடத்துறதுக்கு முன்ன இந்த பகுதிகள்ல 20 அடியில இருந்து 25 அடி ஆழத்துல தண்ணீர் கிடைச்சிக்கிட்டு இருந்துச்சி. இப்ப 90 அடி ஆழத்துக்குப் போயிடுச்சி. இங்கவுள்ள பெரும்பாலான அடிபம்புகள்ல தண்ணியே வர்றதில்லை. இதுக்கெல்லாம் எப்பதான் விமோசனம் கிடைக்குமோ?'' என மனம் உடைந்து சொன்னார், செல்வகணபதி.

- பாசக்கயிறு நீளும்...

பல ஏக்கர் நிலங்கள் பாதிப்பு!

விளைநிலங்களில் ஏற்படும் கச்சா எண்ணெய்க் கசிவு குறித்து, என்னிடம் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட கரூப்பூர், கார்த்திகேயன், ''கசிவினால், ஏற்படும் பாதிப்புகளை ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் முழுமையாகப் பதிவு செய்வதில்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளில் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கருப்பூரில் மட்டுமே 6 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. கமலாபுரத்தில், 7 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தபட்சம் 250 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்பட்டிருக்கும்'' என்றார் சோகத்துடன்.