Published:Updated:

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி...

இனி, இந்தியர்களின் தலைவிதி? அறச்சலூர் செல்வம்

பிரீமியம் ஸ்டோரி

 பிரச்னை

மரபணு மாற்றுப் பயிர்கள் உலக அளவில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வந்தாலும்... இந்தியாவின் ஆதரவைப் பெறுவதைத்தான் முக்கியமான விஷயமாக அமெரிக்காவின் மான்சான்டோ உள்ளிட்ட மரபணு மாற்றுப் பயிர் தயாரிப்பு நிறுவனங்கள் கருதுகின்றன. மன்மோகன்சிங் அரசின் பதவி காலத்துக்குள் தங்களுக்குச் சாதகமான சில முக்கிய வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன, இத்தகைய நிறுவனங்கள். மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளுக்கு அனுமதி வாங்கியது, அத்தகைய முக்கிய வேலைகளில் ஒன்று.

மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கிய இறுதி அறிக்கைகளை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், பத்தாண்டுகால தடை என்பதை மாற்றி... 'உயிரிச் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும்’ என அறிவித்தது. இந்த அறிக்கை வெளியானதும், மரபணு மாற்றுப் பயிர்களுக்காக வக்காலத்து வாங்கும் வகையில்... 'வேளாண்துறையும் சுற்றுச்சூழல்துறையும் இணைந்து, ஒரே பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என பிரதமர் அலு வலகம் முடிவு செய்தது. ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், அதற்கு உடன்படவில்லை. உடனடியாக அவரைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, தமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வீரப்ப மொய்லியை சுற்றுச்சூழல் அமைச்சராக்கி, கூடவே மூன்று முக்கிய வேலைகளையும் கொடுத்தது, மத்திய அரசு.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி...

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், 'வளர்ச்சி’ என்ற பெயரில் அழிக்கப்படுவதைத் தடுக்க... 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை 'இயற்கைச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதிகள்’ (Ecologically Sensitive Areas) என அறிவிக்க, ஐ.நா. சபை அளவில் ஏற்பாடுகள் நடந்தன. இது நடந்தால், ஏகப்பட்ட கம்பெனிகளுக்கு பாதிப்பாகிவிடும் என்பதால், இந்த அறிக்கையை தடுத்து நிறுத்துவது முதல் வேலையாகத் தரப்பட்டது. போஸ்கோ உருக்கு ஆலைக்கான திட்டத்தில் போஸ்கோவுக்கு ஆதரவாக சில விதி முறைகளைத் தளர்த்துவது இரண்டா வது வேலை. மூன்றாவதாக... மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளிச் சோதனைக்கு அனுமதிப்பது. இந்த மூன்று 'முக்கியப் பணி'களையும் 'தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வருவதற்குள் நடத்தியாக வேண்டும்’ என்ற குறிக்கோளோடு, பிரதமரும், பிரதமர் அலுவலகத்தினரும் அவசர கதியில் இயக்க... வீரப்பமொய்லி மூன்று வேலைகளையும் கச்சிதமாக செய்து முடித்துவிட்டார்.

'உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும்... நீதிமன்றம், மரபணு மாற்றுப் பயிர்களின் வயல்வெளிச் சோதனைகளைத் தடை செய்யவில்லை. முந்தைய அமைச்சர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு அனுமதி வழங்காமல் இருந்தார்’ என்கிற 'அற்புதமான' விளக்கத்துடன், 'மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளியில் சோதிக்கலாம்’ என்று அறிவித்தார், மொய்லி. அந்த அறிவிப்பு வந்த அடுத்த சில நாட்களிலேயே மான்சான்டோ பங்குகளின் சந்தை மதிப்பு 3 மடங்கு அதிகரித்தது. தொடர்ந்து, மரபணு மாற்று அனுமதிக் குழுவும் வயல்வெளிச் சோதனைகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், ஏற்கெனவே 13 மாநிலங்கள், 'மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளியில் சோதிக்க அனுமதிக்க முடியாது’ என தெரிவித்துவிட்டன. பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி...

இந்நிலையில், பிரதமர் அலுவலகத் துக்கு ஜெயந்தி நடராஜன் ஏற்கெனவே எழுதிய கடித விவரத்தை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட, அந்த விவரமும் ஒரு மனுவானது. 'அதன் மீது அரசு தனது கருத்தைக் கூற வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது, நீதிமன்றம். வாதங்கள் தொடர்கின்றன. மே மாதம் 10-ம் தேதியன்றோ அல்லது ஜூலையிலோ மீண்டும் விசாரிக்கப்படலாம் என்பதே இப்போதுள்ள நிலை.

தேர்தல் நேரத்தில்...'அ.தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் புதிய அரசு அமைந்தால் மரபணு மாற்று பயர்களின் வயல்வெளிச் சோதனைகளைத் தடை செய்வோம்’ என ஜெயலலிதாவும்; 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை எதிர்க்கிறோம்’ என்று பா.ம.க.வும்; 'மரபணு மாற்றுப் பயிர்கள், நீண்ட கால சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிப்பில்லாதவை என்று அறியப்பட்ட பிறகுதான் அவற்றுக்கான அனுமதி வழங்கப்படும்’ என பா.ஜ.க.வும் அறிவித்திருக்கின்றன.

மொத்தத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும், அடுத்து அமையப் போகும் ஆட்சியையும் பொறுத்துத்தான் மரபணு மாற்றுப் பயிர்கள் என்கிற கத்தி, இந்தியர்களின் தலைமீது விழுமா... அல்லது தவிடு பொடியாகுமா? என்பது தெரியும். ஒருவேளை புதிய அரசும்... பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகளால் நடத்தப்பட் டால்.... வழக்கம்போல நம் கதி அதோகதிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு