பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நதிகளை இணைப்போம்''

-இந்தத் தேர்தலிலும் ஓங்கி ஒலித்த கோஷங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது.

ஏதோ... 'இலவச அரிசி தருகிறேன்' என்பதுபோல, 'நதி நீர் இணைப்பு' விஷயத்தையும் கையில் எடுத்து விடுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், இது எந்த அளவுக்கு சரியான விஷயம்... சாத்தியமாகக் கூடிய விஷயம்... என்பதையெல்லாம் இவர்கள் அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்ந்தார்களா என்பது கேள்விக்குறியே!

நதிகளை இணைப்பதைவிட, இன்றைக்கு அவசர மற்றும் அவசியமாக செய்யப்பட வேண்டியது... ஏரி, கண்மாய், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைக் காப்பாற்றுவதுதான். இதைப் பற்றி எந்த அரசியல்வாதியுமே பேசுவதில்லை என்பதுதான் வேதனை.

தமிழகத்தின் சராசரி மழை அளவு 950 மி.மீ. இதுவும் மாதம் மும்மாரியாகப் பெய்வதில்லை. சமயங்களில் ஐந்தே நாட்களில் ஒட்டுமொத்தமாகக் கொட்டித் தீர்ப்பதும் உண்டு. இதையெல்லாம் காலகாலமாக கணித்துதான்... ஏரி, கண்மாய் குளம் என்று மழை நீர் சேகரிப்பதை வாழ்க்கை முறையாகவே வைத்திருந்தார்கள் முன்னோர்கள். ஆனால், கையில் இருந்ததையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்துவிட்டு, அத்தனை எளிதில் சாத்தியப்படாத... நதி நீர் இணைப்பு பற்றியே, அதுவும் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசிக் கொண்டுள்ளனர் இந்த அரசியல்வாதிகள்.

எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைக் காப்பாற்றும் முயற்சிகள் முதலில் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படிக் காப்பாற்றி, அவற்றையெல்லாம் முறையாகப் பராமரித்தாலே, 'நதிகள் இணைப்பு' என்பதற்கு தேவையேகூட இல்லாமல் போகலாம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு