Published:Updated:

தி ஈஸ்ட் !

சுற்றுச்சூழல் பேசும் ஒரு திரைப்படம்! வி. நாகப்பன்

பிரீமியம் ஸ்டோரி

பார்வை

 இந்த உலகை ஆள்வது யார்?

உலகை வழிநடத்துவதும்... கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் யார்?

தி ஈஸ்ட் !

இதுபோன்ற கேள்விகளை முன் வைத்தால்... 'அமெரிக்கா’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ஆனால், இது, முழுக்க உண்மையல்ல. உலகை ஆள்பவர்கள் வல்லரசுகள் அல்ல; அவர்களையும் சேர்த்து ஆள்வது, பன்னாட்டு நிறுவனங்கள்தான். உலகின் பொருளாதாரத்தையும் அதன் தலைவிதியையும் மாற்றி எழுதும் வல்லமையுள்ளவர்கள், நாடுகளின் எல்லை கடந்து பரவியிருக்கும் இந்த கார்ப்ரேட் நிறுவனங்கள்தான்.

எந்த ஒரு நாட்டின் சட்ட, திட்டங்களுக்கும் கட்டுப்படாத, தேவைப்பட்டால் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்து, மாற்றி எழுதும் வல்லமையும் கொண்டிருக்கும் இவர்களைக் கண்டுதான், முதலில் நாம் அஞ்ச வேண்டும்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான மிசிஸிபி... கரிய படிமம் கலந்து, நிரந்தர பாதிப்பில் சிக்கியது. ஆற்றங்கரை, அதையடுத்துள்ள கடற்கரை என அனைத்தும் முற்றிலும் மாசுபட்டன.

தி ஈஸ்ட் !

1930-ம் ஆண்டு துவங்கி, இந்த எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சியால், சுமார் 2 ஆயிரம் சதுர மைல் அளவுக்கு விவசாய நிலங்கள் பாழ் பட்டன. விவசாயிகள், அவற்றை முற்றிலும் இழக்க நேரிட்டது. கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதால், அவற்றை நம்பி இருக்கும் மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டன. நிலைமையைச் சீர்செய்ய போராட்டக் குழுக்கள் பலவும் களத்தில் குதித்தன. ஆனால், அவ்வப்போது ஏதாவது செய்வதாக போக்குக் காட்டினார்களே தவிர, இவர்களும் பெரிதாக எதையும் செய்யவில்லை. அரசும் கண்டுகொள்ள வில்லை.

இது ஓர் உதாரணம்தான். உலகம் முழுக்கவே இப்படிப்பட்ட அநியாயங்களைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, லாபத்தை மட்டுமே வெறித்தனமான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள். இவைதான் இவ்வுலகை ஆள்கின்றன; நம் விதியை நிர்ணயிக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவர்களின் பைகளில்தான்.

தி ஈஸ்ட் !

இந்தக் கொடுமைகளைத் தோலுரிக்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் அநியாயங்களை, சுற்றுச்சூழலுக்கு எதிராக அவர்கள் செய்துவரும் பஞ்சமாபாதகங்களையெல்லாம் அம்பலப்படுத்தவும்... சிறுசிறு குழுக்கள், உலகம் முழுக்கவே வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இதை வெகுஜனத்தின் மனதில் விரைவாக பதிக்கும் வேலையைச் செய்திருக்கிறது... 'தி ஈஸ்ட்' (The East) எனும் ஆங்கிலப்படம்.

சினிமா என்று சொன்னாலே... இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காதல் என்பதைத் தாண்டி சிந்திப்பது மிகமிக அரிது. அப்படியே சிந்தித்தாலும், அதிலும்கூட காதலைச் செருகாமல் படமாக்குவதில்லை. ஆனால், ஆங்கிலப் படங்களில் பல, எடுத்துக் கொண்ட கருவை மையமாக வைத்தே முழுக்க முழுக்க எடுத்து முடிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தி ஈஸ்ட். இது, கடந்த ஆண்டு வெளியாகியிருந்தாலும், இயற்கையை நேசிக்கும் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதற்காகவே அதைப் பற்றி இப்போது எழுதுகிறேன்.

'சொந்த லாபத்துக்காக, சாமான்யனின் பையில் இருக்கும் சொற்ப பணத்தையும் பறித்து, அவனைக் கடனாளியாக்கும் வேலையைத்தான் இந்த நிறுவனங்கள் செய்துவருகின்றன. இவர்கள் பரப்பிவரும் அதீத நுகர்வுக் கலாசாரத்துக்கு எதிராகப் போராட, மிக எளிமையான வழிகள் போதும். முறையான நுகர்வு மட்டுமே மனிதர்களின் வாழ்க்கைக்குப் போதுமானது. இதைக் கடைப்பிடித்தால்... மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளும் சுகமாக வாழலாம்... சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்கலாம்’ எனும் அற்புதமான கருத்துக்களை முன்வைக்கிறது இந்தத் திரைப்படம்.

நள்ளிரவு. கடுமையான இருட்டு. அந்த பெரிய வீட்டைச் சுற்றி வளைக்கிறது, சிறு கும்பல் ஒன்று. வீட்டைச் சுற்றி கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகளை ஊற்றுகிறார்கள். வீட்டினுள் படுத்திருப்பவர் சத்தம் கேட்டு, லேசாகப் புரண்டு படுக்கிறார். சற்றுநேரத்தில் வீடு 'குபீர்’ என்று தீ பிடித்து எரிகிறது. பிரமாண்டமாக வெடித்துச் சிதறுகிறது.

'சில நாட்களுக்கு முன்பு கடலில் பெட்ரோலிய எண்ணெய் கலந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக பல பறவைகளும் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்தது நமக்குத் தெரியும்.

தி ஈஸ்ட் !

இதற்குக் காரணமான நிறுவனத்தின் தலைவர் வீடு, நேற்று இரவு வெடித்துச் சிதறியது’ என அலறுகிறது, தொலைக்காட்சி. 'ஈஸ்ட்' என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்பது தெரிந்து நாடே அதிர்கிறது!

கதையின் நாயகி 'ஜேன்’, 'ஹில்லர் ப்ரூட்’ எனும் தனியார் உளவு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அதன் தலைவி, ஷரோன். கார்ப்ரேட் சாம்ராஜ்யங்களுக்கு ஊழியம் செய்பவர். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் 'ஈஸ்ட்’ அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிப்பதற்கான பொறுப்பு, 'ஜேன்’ வசம் வருகிறது. கடும்முயற்சிக்குப் பிறகு, 'சாரா' எனும் புதுப்பெயருடன், 'ஈஸ்ட்' குழுவுக்குள் ஊடுருவுகிறார், ஜேன். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, குழுவில் சேர்க்கப்படும் ஜேன், அதன் தலைவன் 'பெஞ்சி’ மற்றும் குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறாள். ஒரு சமயம், அவள் காயம்பட, அதற்கு வைத்தியம் பார்க்கிறார், குழுவிலிருக்கும்  டாக்டர். அப்போது டாக்டரின் கை அவ்வப்போது நடுங்குவதைப் பார்க்கிறாள்.  அவர் சொன்ன விவரத்திலிருந்து இக்குழுவிலுள்ள ஒவ்வொருவரும், பெரும்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் அநியாய நடவடிக்கைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்கள், என்பதை அறிகிறாள்.

அடுத்தத் தாக்குதல்... ஈஸ்ட் குழுவினர் ஒரு டின்னருக்குச் செல்கிறார்கள். அது, மிகப்பெரிய பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் தனது புதிய மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் கொண்டாட்ட விழா. அங்கே வழங்கப்படவிருக்கும் ஷாம்பெயின் மதுபானத்தில், யாருக்கும் தெரியாமல் எதையோ கலந்துவிடுகிறார் ஈஸ்ட் குழுவின் டாக்டர். இதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள், ஜேன். விருந்து முடிந்து திரும்ப வரும் வழியில், 'எப்படி இவ்வளவு உயிர்களைக் கொல்லலாம்?’ என டாக்டருடன் வாதிடுகிறாள். தான் கலந்தது விஷம் அல்ல; அதே நிறுவனம் தயாரிக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து. சந்தையில் விற்கப்படும் அந்த மருந்து, முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டதல்ல. அதன் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் நான். அதனால்தான் அவ்வப்போது எனக்கு வலிப்பு வருகிறது’ என்கிறார், டாக்டர்.

மறுநாள், இந்த விஷயம் வெளியில் பெரிதாகப் பேசப்பட... 'பாருங்கள் நாங்களே இந்த மருந்தை பயன்படுத்துகிறோம். எங்களை ஒன்றும் செய்யவில்லை’ என பேட்டி அளிக்கிறாள், நிறுவனத்தின் தலைவி. ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவளையும் பக்கவாதம் தாக்குகிறது. நரம்புத் தளர்ச்சியுடன் தொலைக்காட்சியில் தோன்றி உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறாள்.

ஈஸ்ட் அமைப்புக்கு மற்றுமொரு வெற்றி ஈஸ்ட்டின் அடுத்தத் தாக்குதல்... பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மீது என முடிவாகிறது. அந்த ஊரின் முக்கிய நீர் நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கழிவுகளைக் கலக்கிறது, அந்நிறுவனம். மாசுபட்ட நீரால், அவ்வூர் மக்கள் பல்வேறு அவஸ்தைக்குள்ளாகிறார்கள். நோய் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. ஈஸ்ட்டின் முக்கிய உறுப்பினரான 'இஸ்ஸி’யின் தந்தைதான் அந்நிறுவனத்தின் தலைவர். இஸ்ஸி மூலமாக நைச்சியமாகப் பேசி, அவள் தந்தையை அந்த நீர் நிலைக்கு அழைத்து வரச் செய்து அவரையும் அதன் இன்னொரு தலைவியையும் அந்த விஷ நீரில் குளிக்குமாறு துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்துகின்றனர். அதற்குள் பாதுகாவலர்கள் துரத்த, நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் இஸ்ஸி காயத்துடன் தப்பிக்கிறாள்.

தி ஈஸ்ட் !

மீண்டும் காட்டுக்குள் பதுங்குகிறார்கள். ஏற்கெனவே சாப்பிட்ட மருந்தின் கடுமையான பக்கவிளைவால், டாக்டரின் நடுக்கம் அதிகமானதால் குண்டடிப்பட்ட இஸ்ஸிக்கு ஆப்பரேஷன் செய்து குண்டை வெளியே எடுக்கமுடியாமல் போக, இஸ்ஸி இறக்கிறாள். இதையடுத்து, 'கடைசியாக ஒரே ஒரு தாக்குதலைச் செய்துவிட்டு பிரிந்துவிடலாம்’ என முடிவெடுக்கிறார்கள்.

'நீ ஒரு உளவாளி என்று எனக்குத் தெரியும்' என்று சொல்லும் பெஞ்சி, 'கார்ப்ரேட்டுகளுக்கு உளவு வேலை பார்ப்பவர்களின் பட்டியலை எப்படியாவது கொண்டு வரவேண்டும்’ எனக் கேட்கிறான். முதலில் மறுக்கும் ஜேன், தன் அலுவலகத்துக்குள் நுழைந்து கம்ப்யூட்டரில் இருக்கும் உளவாளிகளின் முழுத்தகவலையும் செல்போன் சிப்பில் பதிவு செய்கிறாள். இது தெரிந்து, லிஃப்டில் இறங்கி அலுவலகத்தை விட்டு அவள் வெளியேறும்போது, அவளு டைய செல்போன் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, ஈஸ்ட் குழு பற்றி, தங்கள் கைவசமுள்ள தகவல்களை எஃப்.பி.ஐ. அமைப்பிடம் உளவு நிறுவன தலைவி கொடுக்க... காட்டுக்குள் சென்று ஈஸ்ட் குழுவின் மறைவிடத்தைத் தகர்க்கிறார்கள். சிலர் மட்டும் தப்பிக்க, டாக்டர் மாட்டிக் கொள்கிறார். இதுதெரிந்து, ஆத்திரமாகும் பெஞ்சி, ஜேன் கொண்டுவரும் தகவலில் உள்ள உளவாளிகளைப் பழி வாங்க முடிவெடுக்கிறான்.

உளவாளிகள் பற்றிய தகவல் அடங்கிய சிப்பை, சிறிய நூலில் கட்டி, விழுங்கிவிடும் ஜேன், பிறகு அதை வெளியில் எடுக்கிறாள். ஆனால், அதிலிருக்கும் தகவல்கள் பெஞ்சியின் கைகளுக்குக் கிடைத்தால்... அனைவரின் உயிருக்கும் ஆபத்து என்று தெரிந்து, 'தகவல்கள் எதையும் கொண்டு வரவில்லை' என்று பொய் சொல்லி, பெஞ்சியை அனுப்பிவிடுகிறாள்.

இப்போது... உலகம் முழுவதும் உள்ள ரகசிய உளவாளிகளின் தகவல்கள் தன் கையில். என்ன செய்வாள் ஜேன்?

இந்த இடத்தில்தான் சுவாரஸ்யமான ட்விஸ்ட் வைக்கிறார், இயக்குனர். பெஞ்சி கடைபிடிக்கும் தீவிரவாத முறைகளோடு கருத்து வேறுபாடு இருந்தாலும்... ஈஸ்ட்டின் கொள்கைகளில் ஈடுபாடு கொள்கிறாள், ஜேன். எனவே, ஒவ்வொரு உளவாளியாக நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்கள் செய்யும் வேலையின் அநீதியையும், சமூகத்தின் மீதும், சுற்றுச்சூழல் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எடுத்துச் சொல்கிறாள். பெரும்பாலானோரை மனம் மாற்றி சுற்றுச்சூழல் போராளிகளாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள். இதைத் தொடர்ந்து, ஈஸ்ட்டின் தீவிரவாதம், நியாயமான போராட்டமாக பரிணமிக்கிறது.

'தீவிரவாதிகள், சட்டத்துக்குட்பட்ட போராளிகளாக மாறுவார்கள்’ எனும் கருத் தோடு கதை முடிகிறது.

நிஜத்தில் இதெல்லாம் முடியுமா என்றுதான் தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு