Published:Updated:

கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்!

நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்
பிரீமியம் ஸ்டோரி
News
நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன் ( நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன் )

ஆஸ்வால்டு குவிண்டால் ஓவியம்: ஹரன்

வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

''தர்மபுரி, அஞ்செட்டி மலையில், என்னுடன் ஆஸி (ஆஸ்வால்டு குவிண்டால்) பணியாற்றினார். ஆஸி, ஒரு பொறியாளர். இங்கே ஆஸியைப் பற்றி ஒரு சிறு குறிப்பைச் சொல்லியாக வேண்டும். கல்லூரிப் படிப்பு முடித்ததும், மதகுரு பணிக்குச் சென்ற ஆஸி, பாதியிலேயே அதைவிடுத்து, திரும்பி வந்துவிட்டார். பயிற்சிக் காலத்தில் கிராமப்புறச் சேவைக்காகச் சென்றபோது, ஒரு நாள் நல்லமழை பொழிந்திருக்கிறது. இவரும், உடன் சென்றவரும் கிராமத்து வீடு ஒன்றில் உணவருந்தி, அங்கேயே தங்கிவிட்டனர்.

பொழுது விடிந்து தேவாலயம் திரும்பியபோது, நிர்வாகப் பொறுப்பிலிருந்த சாமியார், 'இரண்டு பேரும் ஏன் இரவே திரும்பவில்லை. களவொழுக்கத்தில் ஈடுபட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். இவர்கள் கூறிய எந்த விளக்கத்தையும் கேட்க அவர் தயாராக இல்லாத நிலையில், 'இப்படிப்பட்ட அமைப்பில் சாமியாராக ஆக வேண்டாம்’ என்று வெளியே வந்தவர்தான், ஆஸி''

கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்!

-இது, ஆஸி என்றழைக்கப்படும் ஆஸ்வால்டு குவிண்டால் பற்றி நம்மாழ்வார், இந்தத் தொடரில் ஏற்கெனவே கொடுத்திருந்த அறிமுக வரிகள். தற்போது, திருச்சியில் உள்ள 'குடும்பம்' தொண்டு நிறுவனம், 'லீசா நெட்வொர்க்', புதுக்கோட்டை 'கொழுஞ்சிப் பண்ணை' போன்றவற்றைத் தலைமையேற்று நடத்தி வரும் ஆஸி, இங்கே நம்மாழ்வாருக்காகப் பேசுகிறார்...

1979-ம் ஆண்டு அஞ்செட்டி மலையில் அண்ணாச்சியைச் (நம்மாழ்வார்) சந்தித்தேன். அது 1996-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகள் அண்ணாச்சியுடன் இணைந்து பணியாற்றினேன். தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் விதைபோடும் பணியில், அவருடன் இணைந்து கொண்டேன்.

'ஆஸி, விவசாயம்ங்கிறது, ஒரு தலைமுறைக்கான வேலை இல்ல. நாம இப்போ, செய்ற வேலை, பல வருஷம் கழிச்சி நிச்சயம் பலன் கொடுக்கும். அதோட பலனை நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கிறது சுயநலம்’ என்று அஞ்செட்டியில் அவர் சொன்னது... பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிட்டது.

வனத்துறையினருக்கு லஞ்சம் கொடுப்பதில் எழுந்த பிரச்னையால் அஞ்செட்டி மலையில் இருந்து இறங்கி, தஞ்சாவூர் திரும்பியது; கொழுஞ்சிப் பண்ணையை அண்ணாச்சியின், அயராத உழைப்பு மூலம் வளர்த்தெடுத்தது வரை நீங்கள் அறிந்ததுதான்.

கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்!

அண்ணாச்சியிடம் இருந்த வாழ்வியல் அணுகுமுறை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்பு, அன்று நடந்த விஷயங்கள் பற்றி விவரிப்பார். அன்றைய தினம், தான் கற்றுக்கொண்ட புதிய விஷயத்தை சுவையாகச் சொல்வார். தேவைப்பட்டால், அதைக் குறிப்பெடுத்துக் கொள்வார். எங்களையும், இப்படி பகிர்ந்து கொள்ளும்படி சொல்வார்.

82-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி செய்து வந்தோம். கோடையைச் சமாளிப்பது எப்படி என்று விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு வந்தோம். காரணம், வானியல், விவசாய விஞ்ஞானிகளைவிட, விவசாயிகளின் அனுபவ அறிவுதான்

கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்!

நடைமுறைக்கு ஏற்றது என்பது எங்களின் நம்பிக்கை.

மாலை நேரத்தில் ஒரு கிராமத்துக் கோயிலில் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண், ''என் மாமியார், 'இந்த வருஷம் வறட்சியாக இருக்கும். அதனால, நெல்லு நட வேணாம். கனகாம்பரம் போடு. வீட்டுச் செலவுக்கு வருமானம் கொடுக்கும்’னு சொன்னாங்க. உடனே கனகாம்பரம் நட்டேன். கொஞ்சம் தண்ணியிலேயே நிறைய பூத்துக் குலுங்குது. பஞ்சம் இல்லாம, பணம் கிடைக்குது...'' என்றார்.

''அட, அற்புதம். இதுமாதிரித்தான் சூழ்நிலைக்குத் தக்கப்படி மாறிக்கணும்'' என்று அண்ணாச்சி பாராட்டினார்.

மூன்று நாட்கள் கழித்து, கனகாம்பரத் தோட்டப் பெண்ணைத் தேடிச் சென்றோம். உற்சாகமாக வரவேற்ற அந்தப் பெண்ணிடம், ''உங்க மாமியாரைப் பார்க்கணுமே...?'' என்றார் அண்ணாச்சி.

''மாமியாரா..? அவங்க இறந்து மூணு வருஷம் ஆவுது..!''

''பிறகெப்படி அவங்க, கனகாம்பரம் நடவு செய்யச் சொல்ல முடியும்?''

''அதுவா, என் கனவுல வந்து சொன்னாங்க...!'' என்று சொல்லி, கனகாம்பரம் பறிக்கத் தொடங்கினார்.

''சரிம்மா வரோம்'' என்று சொல்லி, வேகமாக என்னையும் அங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்த அண்ணாச்சியிடம், ''ஏன் அண்ணாச்சி அவசரமா இழுத்துக்கிட்டு வந்தீங்க..?'' என்றேன்.

கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்!

''அந்தப் பெண் கெட்டிக்காரி. அவளோட கனவுல மாமியார் வந்திருக்க மாட்டா. இவளே, இந்த வருஷம் தண்ணி குறைவா இருக்கு, கனகாம்பரம் போடலாம்னு முடிவு செய்துட்டா. புருஷன்கிட்ட சொன்னா, 'பொம்பளைக்கு என்ன தெரியும்?'னு விட்டிருப்பான். அதனால, மாமியர் கனவுல வந்து சொன்னாங்கனு சொன்னதுமே, அம்மா மேல இருக்கிற பாசத்துல கனகாம்பரம் சாகுபடி செய்திருக்கான். வேலை வாங்குற ராஜதந்திர வித்தைகள், நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட ஏராளமா இருக்கு. அதுல ஒண்ணுதான் இது'' என்று சொல்லி வயிறு குலுங்கச் சிரித்தார் அண்ணாச்சி.

புதுக்கோட்டையில் நாங்கள் உருவாக்கிய காடு பற்றியும்... கடைசி காலத்தில் பசுமை விகடன் பற்றி அண்ணாச்சி சொன்னவற்றையும் உங்களிடம் கட்டாயம் பகிர்ந்தே ஆகவேண்டும்.