Published:Updated:

'73 லட்சம் பேருக்கு குடிநீர்... 3 லட்சம் ஏக்கரில் இருபோக சாகுபடி...'

ஆர். குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி

தீர்ப்பு

'முல்லை-பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்’ என்கிற அதிரடி தீர்ப்பின் மூலம், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

முல்லை-பெரியாறு அணையின் தண்ணீர் உரிமை தொடர்பாக... தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கிடையே 79-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பிரச்னை நடந்து கொண்டி ருக்கிறது. 'அணை தங்களுக்குச் சொந்தமானது. அணை பலவீனமாக இருக்கிறது’ என்றெல்லாம் பற்பல காரணங்களைக் கூறி, நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததுடன், புதிய அணை கட்டப்போவதாகவும் தலைவலி கொடுத்து வந்தது, கேரளா. விஷயம் நீதிமன்றத்துக்குப் போக... 2006-ம் ஆண்டில், 'அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்’ என தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். இதையடுத்து, 'அணைகள் பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒன்றை இயற்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு தடை ஏற்படுத்தியது கேரளா.

'73 லட்சம் பேருக்கு குடிநீர்... 3 லட்சம் ஏக்கரில் இருபோக சாகுபடி...'

தமிழகம், மீண்டும் உச்ச நீதிமன்ற கதவைத் தட்ட.... நீண்ட விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மே 7 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. 'அணை பாதுகாப்பாகவே இருக்கிறது. எனவே, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்' என்று சொல்லியிருக்கும் நீதிபதிகள், 'கேரளா கொண்டு வந்த அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்றும் சாடியுள்ளனர். கூடவே, அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழுவை அமைக்கவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு குறித்துப் பேசிய, முல்லை-பெரியாறு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அப்பாஸ், ''இது, தமிழக மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருக்கும் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களின் இருபோக சாகுபடியையும்... 73 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையையும் உறுதி செய்துள்ளது இந்தத் தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவாக நிறைவேற்றப்பட்டால்... ஐந்து மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும்'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

இதற்கிடையே, கேரளாவில் முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு