Published:Updated:

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

டெல்டாவில் விளையும் கேழ்வரகு! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கேழ்வரகு, கம்பு, தினை... போன்ற சிறுதானிய சாகுபடியைப் பார்ப்பது அரிதிலும் அரிதான காட்சியாகவே இருக்கிறது. இப்பகுதிகளில் கோடை சாகுபடியாகவும்கூட நெல்தான் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. 'நம்ம மண்ணுக்கு சிறுதானியம் சரிப்பட்டு வராது. அரியலூர், பெரம்பலூர், புதுக்  கோட்டை பகுதிகள்லதான் நல்லா விளையும்’ என்று பல காலமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பலர் எண்ணிக் கொண்டிருப்பதுதான் காரணம். இதை முறியடிக்கும் விதமாக... தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள பொய்யுண்டார்குடிகாடு கிராமத்தில் தங்கப்பாவின் நிலத்தில் வெற்றிகரமாக விளைந்து நிற்கிறது, கேழ்வரகு.

தங்கப்பா, 33 சென்ட் நிலத்தில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளார். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கனமழை கொட்டித் தீர்த்த போதிலும்கூட, பயிர்கள் கீழே சாயாமல், முற்றிய கதிர்களில் இருந்து தானியங்கள் உதிராமல் அப்படியே இருக்கின்றன. ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த நம்மிடம், ஆர்வத்தோடு பேசினார், தங்கப்பா.

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

நல்ல விலை கிடைக்குது!

''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, விவசாயம் பாத்துட்டு இருக்கேன். எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. முழுவதும் நெல் சாகுபடிதான். இது களியும் மணலும் கலந்த இருமண்பாடு. பள்ளக்கால் பகுதிங்கிறதால வடிகால் வசதி இருக்கு. பத்து வருஷத்துக்கு முன்ன கோடை சாகுபடியா கேழ்வரகு சாகுபடி செஞ்சிட்டு இருந்தோம். அதனால, எனக்கு கேழ்வரகு சாகுபடியில நல்ல அனுபவம் உண்டு. ஆனாலும், அந்த சமயத்துல லாபகரமான விலை கிடைக்காததால கோடையிலயும் நெல்லையே சாகுபடி பண்ண ஆரம்பிச்சிட்டோம். இப்ப நிலைமை மாறி, கேழ்வரகுக்கு நல்ல விலை கிடைக்குது. பட்டுக்கோட்டை, பாப்பாநாடு பகுதி வியாபாரிகள் தேடி வந்து வாங்கிக்கிறாங்க. கிலோ சராசரியா 30 ரூபாய்னு விற்பனை யாகுது. அதனாலதான், இந்த வருஷம் கோடை சாகுபடியில, 33 சென்ட்ல கேழ்வரகு பயிர் பண்ணியிருக்கேன்.

'வறட்சியான செம்மண் பூமியில மட்டும்தான் கேழ்வரகு சிறப்பா விளையும்’னு பெரும்பாலான விவசாயிகள் நினைக்கறாங்க. இது தவறான கருத்து. எல்லா மண்லயுமே கேழ்வரகு செழிப்பா விளையும். நான், அடியுரமா மாட்டு எரு மட்டும் போட்டு விதையைத் தெளிச்சேன், அவ்வளவுதான். வேற எந்தப் பராமரிப்புமே செய்யல. நல்லா விளைஞ்சி வந்திருக்கு'' என்ற தங்கப்பா சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

பூச்சி நோய் தாக்காது!

'வடிகால் வசதியுடைய பள்ளக்கால் பகுதியாக இருந்தால்... மாசிப் பட்டத்தில் கேழ்வரகு சாகுபடி செய்யலாம். மேட்டு நிலமாக இருந்தால், ஆடிப்பட்டம் சிறப்பானது. 33 சென்ட் நிலத்துக்கு ஒரு டன் மாட்டு எருவை அடியுரமாக இட்டு... நான்கு சால் உழவு ஓட்டி, நிலத்தை சமப்படுத்த வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப,

30 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து... 250 கிராம் விதையை நிலம் முழுவதும் பரவலாகத் தூவி, தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாக, பாசனம் செய்ய வேண்டும். விதைப்பிலிருந்து 5-ம் நாள் முளைப்பு வரும். 12-ம் நாளுக்கு மேல், வேகமாக பயிர் வளரத் தொடங்கும். 15 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். கேழ்வரகை பூச்சிகளோ, நோய்களோ தாக்குவதில்லை. வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 80-ம் நாள் கதிர் முற்றி, 90 முதல் 100 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த பிறகு, கிடைக்கும் கேழ்வரகுத் தட்டைகள், மாடுகளுக்கு சத்தான தீவனமாகும்'

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

நெல்லைவிட ஒத்தாசையானது!

சாகுபடிப் பாடம் முடித்த தங்கப்பா, மகசூல் மற்றும் வரு மானம் பற்றி சொன்னார். ''எல்லா செடிகள்லயும் நல்லா கதிர் பிடிச்சிருக்கு. அறுவடை பண்றப்போ 33 சென்ட்லயும் சேர்த்து, 200 கிலோ மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்றப்போ, 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எங்ககிட்டயே மாடு இருக்கறதுனால, எருச்செலவு கிடையாது. நானே உழவு ஓட்டி, பாத்தி கட்டி, விதைச்சிட்டேன். அறுவடையும் நானே பண்ணி, மூட்டம் போட்டு, தானியத்தைப் பிரிச்சி சுத்தம் பண்ணிடுவேன். இந்த வேலைகளை எல்லாம் ஆட்கள் வச்சு செஞ்சா 1,500 ரூபாய் செலவாகும். 4 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும். நானே செய்றதால... மொத்தமும் லாபம். நெல் சாகுபடியோடு ஒப்பிடறப்போ 33 சென்ட்ல... ரொம்ப ஒத்தாசையானதுதான் இந்த லாபம். ஏன்னா, நெல் சாகுபடியில நோய், பூச்சி, பராமரிப்புனு நிறைய சவால்கள் இருக்கே!'' என்று புன்னகையுடன் விடைகொடுத்தார்.

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

சூழலை அழிக்கும் மின் நிலையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 'இதனால், விவசாயம், நீர் ஆதாரங்கள் அழிவதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்’ என்று தொடர்ந்து எதிர்ப்புக் காட்டப்படுகிறது.

எரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..!

இதைக் கையில் எடுத்துள்ள 'பாம்பே இயற்கை வரலாறு சங்கம்’, 'மெட்ராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கம்’ ஆகியவை சமீபத்தில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தன. அப்போது பேசிய 'பாம்பே இயற்கை வரலாறு சங்க’ நிர்வாக இயக்குநர் ரவி செல்லம், ''இந்த அனல் மின் நிலைய திட்டப் பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஓதியூர் கழுவேலி உள்ளது. இந்த நீர்நிலைக்கு ஆண்டுதோறும், 77 வகையான நீர்ப்பறவை இனங்கள் வருகின்றன. நன்னீர் ஆதாரம், முகத்துவாரம், சதுப்புநிலக் காடு, கடல் புல்வெளி, மணல் திட்டுகள், மணல் குன்றுகள் என்று இங்கே இருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டு, திட்டத்தைச் செயல்படுத்தப் பார்க்கிறார்கள்

துறைமுகத்திலிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை எடுத்துச் செல்வதற்காக, அமைக்கப்படும் பாதைக்காக... பல ஏக்கர் செழிப்பான நிலங்களும், நீர் ஆதாரங்களும் அழிக்கப்பட உள்ளன' என்று குற்றம்சாட்டினார்.

- ரெ.சு. வெங்கடேஷ், படம்: க. பாலாஜி

 தொடர்புக்கு,
தங்கப்பா, செல்போன்: 84895-79897
ஆதிநாராயணன், செல்போன்: 98656-13616
சோழன், செல்போன்: 94438-47067

கோடைக் குறிப்புகள்...

கோடை காலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், நான்கடி அகலத்துக்கு மேட்டுப்பாத்தி அமைத்து சாகுபடி செய்தால், தண்ணீரின் தேவையைக் குறைக்கலாம். அதிகமாக மழை பெய்தால், வடித்து விடுவதற்கும் இது வசதியாக இருக்கும்.

டிராக்டர், கதிர் அறுவடை இயந்திரங்களை நிலத்தில் பயன்படுத்துவதால் மண் இறுகி இருந்தால்... கோடையில் உளிக்கலப்பையைக் கொண்டு 40 முதல் 50 சென்டி மீட்டர் ஆழத்துக்கு உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக மாற்ற வேண்டும். இதன் மூலமாக மண்ணுக்குக் காற்றோட்டம் ஏற்படுவதுடன், மழை பெய்யும்போது தண்ணீரையும் பிடித்து வைத்துக்கொள்ளும்.

கடலை சாகுபடி செய்பவர்கள், ஆமணக்கு அல்லது தட்டைப்பயறும், சோளம் சாகுபடி செய்பவர்கள், பச்சைப்பயறு அல்லது உளுந்தும் ஊடுபயிராக சாகுபடி செய்தால், ஒன்று பழுதானாலும் மற்றொன்று வருமானம் கொடுத்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு