Published:Updated:

தொடரட்டும், இந்த சிறுதானியப் பணி!

சி. வையாபுரி

தொடரட்டும், இந்த சிறுதானியப் பணி!

சி. வையாபுரி

Published:Updated:

பாராட்டு

தொடரட்டும், இந்த சிறுதானியப் பணி!

முதல் இதழிலிருந்தே, இயற்கை சார்ந்த சூழல் நோக்கி வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளும் வகையில், மக்களை வழிநடத்தி வருகிறது 'பசுமை விகடன்’. எவ்வளவோ எழுதியிருந்தாலும், இன்று 'சிறுதானியங்கள் சிறப்பிதழை’யும் வெளியிட்டு, மக்களை மேலும் விழிப்படையச் செய்துள்ளது, பசுமை விகடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு முன்பே... பல சந்தர்ப்பங்களில் சிறுதானியம் பற்றிய விழிப்பு உணர்வை பசுமை விகடன் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'சிறுதானியங்களை மதிய உணவுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்... ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கப்பட வேண்டும்' என்றெல்லாம் அழுத்தம் கொடுத்து எழுதியிருக்கிறது பசுமை விகடன். தெலுங்கானாவின் மேடக் பகுதியின் கிராம மக்களை ஒன்றிணைத்து இயங்கி வரும் 'டி.டி.எஸ்' எனும் தொண்டு நிறுவனம், சிறுதானியங்களுக்காவே செயல்படுவதை, 'வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி' என்ற தலைப்பில் தொடராகவே பசுமை விகடன் கொண்டு வந்ததை... மறக்க முடியாது.

இதுபோன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களையும் அசைத்துப் பார்க்க... 'மதிய உணவுத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை வழங்க வேண்டும்' என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கமே யோசனை தெரிவித்தது. இது, என்ன காரணத்தாலோ நடைமுறைக்கு வரவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் புஞ்சை நிலங்களில் வரகு, சாமை, கேழ்வரகு, சோளம், பருப்பு, ஆமணக்கு, எள், நிலக்கடலை, பயறு வகைகள்... என விளைவித்தார்கள். நஞ்சையில் நெல் மட்டும்தான் விளைந்தது. அருகிலிருக்கும் நகரங்களில் நெல்லை விற்றுவிட்டு... 'கெட்டி தானியம்’ என்றழைக்கப்படும் சிறுதானிய உணவுகளைத்தான் அன்றாடம் உணவாக எடுத்துக் கொள்வோம். அதனால்தான், அன்று உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது.

அந்தக் காலங்களில், உழைப்பில்லாத பணக்காரர்களைத் தொற்றிய சர்க்கரை நோய், இன்று உழைக்கும் மக்களையும் தொற்றுவதற்குக் காரணம், சிறுதானிய உணவுகளைக் கைவிட்டதுதான். எம்.ஜி.ஆர், தனது ஆட்சிக் காலத்தில், அரசு விழாக்களில் விருந்துகளில் சிறுதானிய உணவு வகைகளைச் சேர்க்க வலியுறுத்தி வந்தார். காலப்போக்கில் இதுவும் கைவிடப்பட்டு விட்டது.

அந்தக் காலத்தில், பருவமழை தவறினாலும்... தாகம் தீர்க்க தண்ணீர் இருந்தது. அப்படி நிலத்தில் இருந்த நீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, சிறுதானியம் விளைந்த புஞ்சைக் காடுகளில், நெல், கரும்பு... என நஞ்சைப் பயிர்களை விளைவித்தனர். எந்திரங்களும் நுழைக்கப்பட்டன. உழவுக்கான எருதுகளின் உழைப்பை மறந்தனர். பசுந்தாள் பயிரிடுவதைத் தவிர்த்தனர். நிலங்களுக்கு ஊட்டம் தர, ரசாயன உரங்களைக் கொட்டத் தொடங்கினர். 'தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்’ என்று வேண்டிய பேராசைக்காரன், சோற்றில் கை வைத்ததும் பருக்கைகள் பொன்னாகி, பசியாற்ற முடியாமல் திணறிய கதையாகத்தான், பல விவசாயிகள் இன்று மயக்கத்தில் இருக்கின்றனர்.

இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மக்களை வழி நடத்திச் செல்லும் வேலையை அரசாங்கம் செய்ய வேண்டும். ஆனால், அதை பசுமை விகடன் கையில் எடுத்துச் செய்துகொண்டிருப்பது... பெரும் ஆறுதலாக இருக்கிறது. தொடரட்டும் இந்த சிறுதானியப் பணி!

சி. வையாபுரி, ஐக்கிய விவசாயிகள் சங்கம், ஆறகளூர், சேலம் மாவட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism