Published:Updated:

நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு, நம்மாழ்வார் சொன்ன தீர்வு!

எஸ்.கணபதி ஓவியம்: ஹரன்

நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு, நம்மாழ்வார் சொன்ன தீர்வு!

எஸ்.கணபதி ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

நம்மாழ்வார், புதுக்கோட்டை மாவட்டம், கொழிஞ்சிப் பண்ணையில் இருந்த காலகட்டத்தில், இரண்டு விவசாயிகள் அவரது வழிகாட்டுதல்படி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். அதில், வீரப்பட்டி கிராமத்திலிருக்கும் 'சக்திப் பண்ணை’யின் கணபதி இங்கே பேசுகிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புல்லு, பூண்டுகூட வாடி வதங்குற சித்திரை மாசம் அது. பக்கத்துப் பண்ணையில வனத்துறை மூலம் உற்பத்தி செஞ்ச மரக் கன்னுங்க தண்ணி இல்லாம செத்துக்கிட்டு இருந்திச்சு. சுற்று வட்டாரத்துல என்னோட கிணத்துல ஓரளவு தண்ணி இருந்துச்சு. இதைக் கேள்விப்பட்டு, 'செடிங்களுக்கு தண்ணி கொடுத்துக் காப்பாத்துங்க'னு வனத்துறை அதிகாரிங்க கெஞ்சாத குறையா கேட்டாங்க. என்னோட சொந்தச் செடிங்க மாதிரி தினமும், தண்ணிப் பாய்ச்சி, பாதுகாத்தேன். பருவ மழை தொடங்கின சமயத்துல, ஏழாயிரம் ரூபாயை தண்ணிக்கான பணமா வனத்துறைக்காரங்க கொண்டு வந்து கொடுத்தாங்க. 'இயற்கையா கிடைக்கிற தண்ணியைத்தானே கொடுத்தேன். இதுக்கு எதுக்காக பணம்?'னு கேட்டதும்... அவங்களால நம்ப முடியல. இருபது வருஷக்கு முன்ன ஏழாயிரம் ரூபாய்ங்கிறது பெரிய தொகை.

நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு,  நம்மாழ்வார் சொன்ன தீர்வு!

இந்த விஷயம், புதுக்கோட்டை வனத்துறை உயர்அதிகாரிக்குப் போகவும்... அவரு கிளம்பிவந்து என்னைப் பார்த்துட்டு, 'விவசாயம்ங்கிறது லாபம் தர்ற வேலை இல்லை. ஒருவிதமான சேவைனு உங்களைப் பார்த்தபிறகு புரிஞ்சிக்கிட்டேன்'னு நெகிழ்ந்ததோட... 'உங்கள மாதிரியே இயற்கையை நேசிக்கக் கூடிய ஆளுங்க, கிள்ளுக்கோட்டையில இருக்காங்க'னு சொல்லிட்டுப் போனாரு.

இதுக்குப் பிறகு, கிள்ளுக்கோட்டைக்குக் கிளம்பிப் போனேன். ஒரு மரத்தடியில டவுசர் போட்டுக்கிட்டு ஒருத்தர் உட்கார்ந் திருந்தாரு. விசாரிச்சப்போ, 'நம்மாழ் வார்'னு சொன்னாங்க. அவரைப்பத்தி எதுவும் கேள்விப்பட்டிராத நான், அவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். உடனே, ரொம்ப நாள் பழகினது மாதிரி பேச ஆரம்பிச்சாரு. மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருந்தோம். அந்த நொடியில இருந்தே என்னோட இயற்கை விவசாயத்துக்கு அண்ணாச்சிதான் (நம்மாழ்வார்) குரு.  

சொல்லாம, கொள்ளாம அடுத்த வாரமே, என்னோட பண்ணைக்கு வந்தாரு அண்ணாச்சி. அப்போ, எள்ளு வயல்ல களையெடுத்துக் கிட்டு இருந்தோம். உடனே, எங்களோட சேர்ந்து களையெடுக்க ஆரம்பச்சிட்டாரு. கூடவே, 'எள், சோளம் மாதிரியான பயிருங்க, நிலத்துல இருந்து அதிகமா சத்தை இழுக்கும். அதனால, அதுங்ககூட தட்டைப்பயிரையும் கலந்து விதைச்சி விடணும். இந்தத் தட்டைப்பயறு காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து நிலத்தை வளப்படுத்தும், பொறிவண்டு மாதிரியான நன்மை செய்யுற பூச்சிகள வயலுக்குக் கவர்ந்து இழுக்கும். இந்தப் பொறி வண்டு எள்ளுச் செடியை தாக்குற பூச்சியை தின்னுடும். தட்டைப்பயறு விளைஞ்சதும் நாம சாப்பிடலாம். தட்டைப் பயறு தோல் ஆடு, மாடுகளுக்கு நல்ல தீவனம் 'னு சொல்லி, வயல் வெளியையே பல்கலைக்கழகமாக்கி முதல் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தாரு.

இன்னிக்கு, கம்பு, சோளம், கேழ்வரகு.... சிறுதானிய உணவு சாப்பிடற பழக்கம் நகரத்துலகூட அதிகரிச்சிருக்கு. இந்த சிறுதானியங்க மறுபடியும் தழைச்சி வளர, அண்ணாச்சிதான் ஆணி வேரா வேலை செஞ்சாரு. இருபது வருசத்துக்கு முன்ன கிராமத்துலகூட சிறுதானியத்தைச் சாப்பிடறதை கேவலமா பார்த்தாங்க. கம்பு, கேழ்வரகு... மூலம் விவசாயிகளுக்கு என்ன நன்மை, அதை சாப்பிடறவங்களுக்கு என்ன நன்மைனு டீக்கடை, பஸ்னு எங்க தோணுதோ, அங்கெல்லாம் பேசுவாரு அண்ணாச்சி.

நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு,  நம்மாழ்வார் சொன்ன தீர்வு!

என்னோட நிலத்துல, இன்னிக்குவரைக்கும் கம்பு, சோளம்னு ஏதாவது ஒரு சிறுதானியத்தை விதைச்சிக்கிட்டே இருப்பேன். அதுக்கு காரணம் அண்ணாச்சிதான். 'கம்பு, சோளம்... மாதிரியான சிறுதானியங்களுக்கு தண்ணி தேவையில்லை. மழையிலேயே வளர்ந்து விளைச்சல் கொடுக்கும். அடுத்து, பூச்சி-நோய் தாக்காது. அதனால பூச்சிக்கொல்லி விஷத்தை வாங்க வேணாம். மாட்டு எருவை, மட்க வெச்சு போட்டா போதும். ரசாயன உப்பு உரத்தைக் கொட்ட வேணாம். ஆக, ஒரு விவசாயி தன்கிட்ட இருக்கிற விதையை, விதைச்சி.... பயிர் செய்தாபோதும். பண்ணைக்கு வெளியில இருந்து எந்தப் பொருளும் உள்ள வரக்கூடாது. பண்ணையில இருந்துதான் விளைபொருளுங்க சந்தைக்குப் போகணும்'னு சின்னப் பசங்களுக்குகூட புரியுற மாதிரி சொல்லுவாரு.

ஒருமுறை ஊர் முழுக்க, நிலக்கடலையில கம்புளிப் புழுத் தாக்குதல் இருந்துச்சி. டீ கடையில் நின்னுகிட்டு இருந்தப்ப, தெரிஞ்ச விவசாயி ஒருத்தர், 'ஊர் முழுக்க கம்பளிப் புழு விளைச்சலை வேட்டு வைக்குது. எல்லா விவசாயிகளும் சோர்ந்து போய் இருக்காங்களே'னு என்கிட்ட கேட்டாரு. உடனே, 'அண்ணாச்சி சொன்னபடி செய்தேன். என்னோட நிலத்துல மட்டும் கம்புளிப் புழு எட்டிக்கூட பார்க்கல'னு சொன்னேன். பக்கத்துல இருந்தவங்கள்லாம் 'அப்படி என்ன சொன்னார் அண்ணாச்சி?'னு ஆர்வமா கேட்டாங்க.

'நிலக்கடலை, பிலிப்பைன்ஸ் நாட்டுல இருக்கிற, மணிலாங்கிற இடத்துல இருந்து நம்ம ஊருக்கு வந்துச்சி. அதனாலதான், சில பகுதியில இந்தக் கடலையை, மணிலானு சொல்றாங்க. வெளிநாட்டுக் கடலையைப் போட்டு கம்பளிப் புழுத் தாக்குதலுக்கு ஆளாக வேணாம்'னு சொன்னாரு அண்ணாச்சி.

நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு,  நம்மாழ்வார் சொன்ன தீர்வு!

'நிலக்கடலை இல்லைனா எப்படி கொழம்பு தாளிக்கிறது. பலகாரம் செய்யறது?'னு கேட்டேன்.

'நிலக்கடலை நம்ம ஊருக்கு வந்து நூறு, இருநூறு வருஷம்தான் இருக்கும். ஆனா, அதுக்கு முன்ன தமிழ்நாட்டுல இருந்தவங்க, கொழம்பு வெச்சி சாப்பிட்டாங்கதானே. விதவிதமா பலகாரம் செஞ்சி, அறுசுவையை ருசி பார்த்தாங்கதானே?'னு கேள்வி கேட்டாரு.

'ஆமாம், அண்ணாச்சினு சொன்னேன். அப்படினா, இப்பவும் அதேமாதிரியே செய்வோம்'னு சொன்னாரு. ஆமணக்கு விதைச்சி விட்டா, அதுல கம்புளிப் புழுத் தாக்குதல் இருக்காது. அந்த எண்ணெயை எடுத்து, கொழம்பு தாளிக்கலாம். அதோட புண்ணாக்கு நல்ல இயற்கை உரம். பலகாரம் செய்ய, எள்ளை விதைச்சி விடுய்யா. பலகாரம் செய்யறதுக்கு எள்ளை ஆட்டினால், நல்லெண்ணெய் கிடைக்கும்.

இதுக்கு ஏன் நல்லெண்ணெய்னு பேரு வந்துச்சி தெரியுமா? இதை சாப்பிடறவங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது. அதனாலதான் அப்படி ஒரு நல்ல பேரு எடுத்திருக்குனு அண்ணாச்சி சொன்னாரு'னு சொல்லி முடிச்சேன்.

சுத்தி வட்டமா நின்ன விவசாயிங்க, 'அட இந்த சங்கதி தெரியாம நிலக்கடலையைப் போட்டு கம்பளிப் புழுக்கிட்ட ஏமாந்துட்டோம். அடுத்த முறை நாங்களும் ஆமணக்கும், எள்ளும் விதைக்கிறோம்'னு சொன்னாங்க. அண்ணாச்சி எதைச் சொல்லிக் கொடுத்தாலும், இப்படி மத்த விவசாயிங்களுக்கும் உடனே சொல்லிடுவேன்.

என்னோட தீவிரமான இயற்கை விவசாய ஆர்வத்தைப் பார்த்துட்டு, இந்த மூணு ஏக்கர் பண்ணைக்கு 'சக்தி பண்ணை'னு அண்ணாச்சி தான் பேரு வெச்சாரு. நான் ஒரு சாதாரண விவசாயி. ஒரு குக்கிராமத்துல இருக்கிற என்னைத் தேடி பல்கலைக்கழக விஞ்ஞானிங்க, மாணவர்கள், வெளிநாட்டு விவசாயிகள்னு இயற்கை நுட்பத்தைக் கத்துக்கிறதுக்கு வர்றாங்க. இந்த நிலைக்கு என்னை உயர வெச்சது அண்ணாச்சிதான். எனக்குக் கிடைச்ச எல்லா புகழும் அண்ணாச்சியையே சேரும்!''

கண்களில் பெருக்கெடுக்கும் நீரைத் துடைக் கிறார் கணபதி.

- பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism