Published:Updated:

மாம்பழம் விலையும்... விளைச்சலும்!

த. ஜெயகுமார் படங்கள்: வி. ராஜேஷ், எஸ்.பி. ஜெர்ரி ரினால்டு விமல்

மாம்பழம் விலையும்... விளைச்சலும்!

த. ஜெயகுமார் படங்கள்: வி. ராஜேஷ், எஸ்.பி. ஜெர்ரி ரினால்டு விமல்

Published:Updated:

விளைச்சல்

 தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மா சாகுபடியின் பரப்பளவு அதிகரித்து வருகிறது. ஆனால், விளைச்சலும், விலையும் எதிர்பார்த்தபடி இருக்கிறதா? அதிலும், இந்த ஆண்டும் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் சூழலில், விற்பனை எப்படி இருக்கிறது? என்பது பற்றியெல்லாம்... மா விவசாயிகள் மற்றும் கொள்முதலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவரும் திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த பாரதி, ''இந்த வருஷம் மழை குறைவுனாலும், விளைச்சல் நல்லாத்தான் இருக்கு. இயற்கை முறையில விளைவிக்கிறதால, தேவைப்படுறவங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிக்கிறாங்க. ஒரு முறை சாப்பிட்டுப் பழகினவங்க... நமக்கு வாடிக்கையாளர் ஆயிடறாங்க. சீசன் வரும்போது நேரடியா தோட்டத்துக்கு வந்து, சாப்பிட்டுப் பார்த்து வாங்கிட்டு போறாங்க. அதனால விற்பனையில எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை விவசாயம்கிறதால... காய்கள் திரட்சியாவும், வாசனையாவும் இருக்கறதோட, ரொம்ப நாள் தாக்கு பிடிக்கும். அதனால, நாம நிர்ணயிக்கிற விலைக்கு வாங்கிட்டு போறாங்க. இப்போ, இமாம் பசந்த்-ஒரு கிலோ 120 ரூபாய், பங்கனப்பள்ளி-ஒரு கிலோ 70 ரூபாய், அல்போன்சா-ஒரு கிலோ 70 ரூபாய், செந்தூரா-ஒரு கிலோ 50 ரூபாய், காலாபாடி-ஒரு கிலோ 60 ரூபாய்னு போயிட்டு இருக்கு. பெங்களூரா, நீலம் இன்னும் அறுப்புக்கு வரல.

மாம்பழம் விலையும்... விளைச்சலும்!

இயற்கை விவசாய முறையில சாகுபடி பண்ணிட்டு இருக்கிறதால காம்புகள் வலிமையா இருக்கு. காத்துக்கு அதிகமா காய்கள் விழுறதில்லை. அப்படி விழற காய்களை சந்தைக்கு அனுப்பறதில்லை. ஏன்னா... அடிமாட்டு விலைக்குக் கேக்கறாங்க. அதனால அந்தக் காய்களை அப்படியே நிலத்துக்கு உரமாக்கிடுறேன்'' என்று சொன்னார்.

மாம்பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்துவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா, ''ரெண்டரை ஏக்கர்ல அல்போன்சா, செந்தூரா அறுவடை செஞ்சேன். ஆரம்பத்துல டன்

மாம்பழம் விலையும்... விளைச்சலும்!

30 ஆயிரம் ரூபாய் விலையில ஒன்றரை டன் அல்போன்சாவை வித்தேன். இப்போ 26 ஆயிரம் ரூபாய்னு 1 டன்னை ஜூஸ் ஃபேக்டரிக்கு அனுப்பியிருக்கேன். செந்தூரா கிலோ, 16 ரூபாய்னு 300 கிலோ வித்தேன். ரெண்டரை ஏக்கர்ல மொத்தமா 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன். இன்னும் நீலம், பெங்களூரா கொஞ்சம் இருக்கு. மொத்தமா பாக்கும்போது, இத்தனை வறட்சியிலயும்கூட போன வருஷத்தைவிட இந்த வருஷம் விளைச்சலும் விலையும் பரவாயில்லை'' என்றார்.  

கிருஷ்ணகிரி மாவட்ட மா உற்பத்தியாளர் மற்றும் பழக்கூழ் தயாரிப்பாளர் கூட்டமைப்பின் (கிரிஷ்மா) பொருளாளர் உதய்சிங், ''இங்க ஏற்றுமதிக்கான சூழல் குறைவாத்தான் இருக்கு. மகாராஷ்டிரா மாதிரியான வடமாநிலங்கள்ல ஏற்றுமதி நிறைய நடக்குது. கிருஷ்ணகிரி மாவட்டத்துல 45 ஆயிரம் ஹெக்டேர் அளவுல மா சாகுபடி நடக்குது. அதுல

90% மானாவாரியில விளையுது. இந்த முறை சராசரியான விளைச்சல் கிடைச்சிட்டு இருக்கு. போன வருஷத்தைவிட விலை கூடுதலாத்தான் இருக்கு. இந்தப் பகுதியில இருக்கிற 55 ஜுஸ் ஃபேக்டரிகளும், மும்பை மார்க்கெட்டும்தான் முக்கிய சந்தை. தரத்தைப் பொருத்து செந்தூரா 1 டன்,

12 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரையும்; காதர் (அல்போன்சா) 1 டன், 25 ஆயிரம் ரூபாய்ல இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையும்; ருமானி 1 டன், 15 ஆயிரம் ரூபாய்ல இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரையும்; பங்கனப்பள்ளி 1 டன், 15 ஆயிரம் ரூபாய்ல இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரையும், பீத்தர் 1 டன், 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரையும்; பெங்களூரா (தோத்தாபுரி) 1 டன், 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரையும்; மல்கோவா 1 டன் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேலயும் வித்துட்டு இருக்கு. ஜூன் 15-க்கு மேலதான் நீலம் அறுப்புக்கு வரும்'' என்று சொன்ன உதய்சிங்,

''இங்கே மா விளைச்சலுக்காக கொடுக்குற கவனிப்பு குறைவாத்தான் இருக்கு. குறிப்பா, மா விளைச்சலுக்கு பிப்ரவரி மாசத்துல

தண்ணி தேவைப்படும். மழைக்காலத்தில் தோட்டத்துல குழிகளைத் தோண்டி தண்ணீர் சேமிச்சி வெச்சா... மூணு மாசத்துக்கு தாங்கும். பிப்ரவரி மாசத்துல இந்த தண்ணியை வெச்சு சமாளிச்சிக்கலாம். டிராக்டர்ல கொண்டுபோய் தண்ணி ஊத்துற செலவையும் மிச்சப்படுத்தலாம்.

இந்த மண்ணுல இயற்கையாவே இருக்கிற சுண்ணாம்புச் சத்தும், இங்கே நிலவுற வறட்சியான சூழ்நிலையும் மாம்பழங்களுக்கு இனிப்புச் சுவையைக் கூட்டுது. அதேபோல மண்ணுல இருக்கிற ஜிங்க் சத்தும் காய்களோட தரத்துக்கு உதவுது. விவசாயிகளே தோட்டத்தை நல்லா பராமரிச்சு, தேவையான உரங்களைக் கொடுத்து, அறுவடை செய்ற காய்களை சேமிச்சு வெச்சு, நல்ல விலை கிடைக்கிறப்போ வித்தா, கூடுதல் லாபம் பாக்கலாம்'' என்று அறிவுரையாகச் சொன்னார்.

இந்திய மாம்பழங்களை ஆராய, விஞ்ஞானிகள் குழு!

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு, கடந்த மே மாதம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருக்கிறது. இது, 2015-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த

28 நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. 'கடந்த ஆண்டில், இறக்குமதியான இந்திய மாம்பழங்களில் 6% வரை பழ வண்டு மற்றும் பூச்சித் தாக்குதல் இருந்தது' என்று ஐரோப்பிய யூனியனின் சுகாதார மையம் அறிக்கை அளித்திருப்பதுதான் தடைக்குக் காரணம்.

உலக மாம்பழ மொத்த உற்பத்தியில் இந்தியா 40% பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் மாம்பழத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கிறது. கடந்த 89-ம் ஆண்டு அமெரிக்காவும் இதுபோன்ற தடையை விதித்து, பிறகு 2007-ம் ஆண்டு அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மாம்பழம் விலையும்... விளைச்சலும்!

இதுகுறித்து பேசிய 'கிரிஷ்மா' அமைப்பின் பொருளாளர் உதய்சிங், ''மிகவும் முதிர்ந்த காய்களை அறுவடை செய்யறது, மரத்தில் பழுத்த பழங்களை அறுவடை செய்யறது போன்ற காரணங்களால புழுக்கள், வண்டுகள் உட்கார்ந்துடுது. தரமற்ற பூச்சிக்கொல்லிகளையும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிகளவில் பூச்சிக்கொல்லி தெளிக்கிறதும்கூட பிரச்னைக்குக் காரணமா இருக்கு.

வெளிநாட்டிலிருந்து வருகிற ஆப்பிள் போன்ற பழங்கள்ல ஒரு சீல் ஒட்டியிருப்பாங்க. அதோட அந்தப் பெட்டியில் எங்கிருந்து வருது, பழம் பறித்து, எத்தனை நாள் ஆகுதுனு எல்லா விவரங்களும் இருக்கும். குறிப்பிட்ட பெட்டியில் பிரச்னைன்னா... அதை யாருடையதுனு கண்டு பிடிச்சி, சம்பந்தபட்ட நபருடைய பழங்களை மட்டும் ஏற்றுமதி பண்ணாம தடுத்துட முடியும். ஆனா, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுற மாம்பழங்கள் இந்த வழிமுறை களோடு ஏற்றுமதி செய்யப்படுறதில்ல. அதனாலதான் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் தடைபடுது. அறுவடை செய்யற இடத்திலிருந்தே இந்த விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி பாதுகாப்பா அனுப்ப ஏற்பாடு செய்யணும். அதோட, ஏற்றுமதிக்குனு சில வழிமுறைகள் இருக்கு. அதையெல்லாம் சரிவர கடைப்பிடிக்கணும்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism