Published:Updated:

சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!

காசி. வேம்பையன் படங்கள்: தி. விஜய்

சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!

காசி. வேம்பையன் படங்கள்: தி. விஜய்

Published:Updated:

கருவி

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு... போன்ற சிறுதானியங்களை தோல் நீக்கம் செய்ய, தொன்றுதொட்டு உரல்-உலக்கையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரல்-உலக்கையைப் பயன்படுத்தத் தெரியாததாலும், 'அவற்றைப் பயன்படுத்துவது சிரமம்’ என்று நினைப்பதாலும், பலர் சிறுதானியப் பயன்பாட்டைக் குறைத்து வருகின்ற னர். இதற்காகவே... சிறு தானியங்களில் இருக்கும் உமியை நீக்கி, கைக்குத்தல் அரிசியாக மாற்றுவதற்கான புதிய கருவியை வடிவமைத்திருக்கிறது, கோயம்புத்தூரில் இயங்கிவரும் மத்திய வேளாண் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்.

இக்கருவியை வடிவமைத்துள்ள முதன்மை விஞ்ஞானி சி. பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம். ''இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படும் இந்த மையம் 1983-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் அகில உலக நெல் ஆராய்ச்சி நிலையத்துடன் (International rice research institute) இணைந்து, கோனோவீடர் கருவிகளை உருவாக்கி வந்தது, இம்மையம். தொடர்ந்து, கரும்பு சாகு படிக்குத் தேவையான 'ஒரு பரு கரணை’களை வெட்டுவதற்கான கால் மற்றும் கையால் இயக்கும் கருவிகள், மோட்டார்கள் மூலம் இயங்கும் கருவிகளைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!

கரும்பு பார் போடும் கருவியோடு இணைந்த நடவுக் கருவி, கறிவேப்பிலை உருவும் கருவி, முருங்கைக்கீரை உருவும் கருவி, வாழை மரங்களைத் தூளாக்கும் கருவி, சோற்றுக் கற்றாழையில் இருந்து ஜெல் எடுக்கும் கருவி என பலவிதமான கருவிகளை இந்த மையம் வடிவமைத்துள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான பலவிதமான பாசனத் தொழில்நுட்பங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறோம்.

எங்கள் மையத்தில் கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்கான காப்புரிமை எங்களிடம் இருந்தாலும்... கருவிகளை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான உரிமத்தையும், வடிவமைப்புக்கான மாதிரி வரைப்படங்களையும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு... சிறுதொழில் முனைவோருக்கு வழங்குகிறோம்'' என்று முன்னுரை கொடுத்த பாலசுப்பிரமணியன், சிறுதானிய உமி நீக்கும் கருவியை உருவாக்கிய விதம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!

''98-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மத்திய அறுவடை பின்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPHET-Central Institute of Post Harvest Engineering and Technology) வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள், 'ஜங் ஃபுட்’ என்று சொல்லப்படும் நொறுக்குத்தீனி வகைகள் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்குவதுதான். கருவி வடிவமைக்கும்போது, விஞ்ஞானிகள், மருத்துவர்கள்... எனப்பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து கலந்துரையாடுவோம். அப்போது, நொறுக்குத்தீனிகளும், அதிகமான கலோரிகள் இருக்கும் குளிர்பானங்களையும் குடிப்பதால்... உடல்பருமன் அதிகரிக்கும் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், 'அதற்கு மாற்றான உணவு முறைகளை உருவாக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்தேன்.

இந்த நேரத்தில் (2003-2006-ம் ஆண்டு), வேலை பார்த்துக்கொண்டே... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பி.ஹெச்.டி வழிகாட்டி பேராசிரியர் விஸ்வநாதன், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுக்கு மாற்றான சிறுதானியங்களைப் பற்றி ஆய்வு செய்யச் சொன்னார். அந்த ஆய்வுக்காக தேனி, கம்பம், மதுரை பகுதியில் தங்கி ஆய்வு செய்ததோடு, சிறுதானியங்கள் தோல் நீக்குவதற்கான 'மல்டி கிரைன் பேர்லர்’ (Multigrain pearler) என்ற  இயந்திரத்தை உருவாக்கினேன். இதற்காக, 'இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்’ எனக்கு ஜவஹர்லால் நேரு விருதை வழங்கியது.

கோயம்புத்தூர் மையத்துக்கு மாற்றலாகி வந்த பிறகு, தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களில் அதிகமாக விளையும் சிறுதானியங்களின் மகத்துவம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால்... 'அவற்றில் இருக்கும் பிரச்னைகளை, களையும் வகையிலான இயந்திரங்களை உருவாக்க வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. 'சிறுதானியங்களுக்கு என்னவிதமான கருவிகள் தேவை?’ என்று ஆய்வுகள் செய்தபோது, தற்சமயம் நடைமுறையில் இருக்கும் இயந்திரங்களில் உமி நீக்கம் செய்யும்போது, தானியத்தையும் சேர்த்து சேதப்படுத்துவதைத் தெரிந்து கொண்டேன். கருவிகளின் விலையும் அதிகமாக இருந்ததோடு, மும்முனை மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் சூழ்நிலையும் இருந்தது. அதைத் தொடர்ந்துதான், சிறுதானியங்களில் உமியை மட்டும் நீக்கி, கைக்குத்தல் அரிசியாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினேன். அதன் விளைவுதான் இக்கருவி'' என்று சொன்ன பாலசுப்பிரமணியன், சிறுதானிய உமி நீக்கும் கருவியை இயக்கிக் காட்டி அதைப்பற்றி விளக்கினார்.

சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!

''பி.ஹெச்.டி படிப்பின்போது நான் வடிவமைத்த கருவியில் குறைவான அளவுதான் அரைக்க முடியும். இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிகள் செய்து, முந்தைய கருவியில் இருந்த குறைபாடுகளையும் நீக்கி... 'சி.ஐ.ஏ.இ மில்லட் மில்’ (CIAE millet mill) என்ற இந்தக் கருவியை 120 கிலோ எடையில் வடிவமைத்துள்ளேன். இதில், ஒரே நேரத்தில் 25 கிலோ அளவுக்கு தானியங்களைக் கொட்டி வைக்கும் அளவுக்கு 'டிரம்’ உள்ளது. உமி நீக்கம் செய்ய... கருவியின் உள்பகுதியில் 'சாணை’ பிடிக்கப் பயன்படுத்தப்படும் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முனை மின்சார (சிங்கிள் ஃபேஸ்) மோட்டாரில் இயங்கக்கூடிய இக்கருவியில், ஒரு மணி நேரத்தில் 100 கிலோ தானியத்தை

95 சதவிகித அளவுக்கு உமி மற்றும் தவிடு பகுதியை நீக்கம் செய்ய முடியும். உலக்கையில் குத்தினால், ஒரு மணி நேரத்தில் ஒன்றரை கிலோ அளவுதான் உமி நீக்க முடியும். இந்த இயந்திரத்தின் எடையும் குறைவு. இயக்குவதும் எளிது. அதிகமான சத்தம் இருக்காது. மேலும், உமி பறந்து சென்று மாசுபடுத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பல கட்ட சோதனைகள் செய்துதான் இதை வெளியிட்டுள்ளோம். இந்த இயந்திரத்துக்கான காப்புரிமை எங்களிடம் உள்ளது. ஆனால், தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை சிறுதொழில் முனைவோருக்கு வழங்கி இருக்கிறோம். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய். வரி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தனி. சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்... இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார் பாலசுப்பிரமணியன்.

தொடர்புக்கு:

பாலசுப்பிரமணியன், முதன்மை விஞ்ஞானி, மண்டல அலுவலகம்,
மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்,
கோயம்புத்தூர்-641 003.
செல்போன்: 86810-17811.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism