Published:Updated:

ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்!

பொன். விமலா

ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்!

பொன். விமலா

Published:Updated:

 பார்வை

நாடகம், சினிமா போன்றவையெல்லாம், இன்றைக்கு பொழுதுபோக்கு என்பதாகவே மாறிக் கிடக்கின்றன. ஆனால், நல்ல விஷயங்களை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காக மட்டுமே இவையெல்லாம் பிறந்தன என்பது உலக வரலாறு. சுதந்திரப் போராட்டங்கள் தொடங்கி எத்தனையோ விஷயங்களில் மக்களை ஒருமுகப்படுத்திய பெருமை... நாடகத்துக்கும் சினிமாவுக்கும் உண்டு. காலப்போக்கில், அவற்றின் நோக்கம் மாறிப்போனாலும், அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு படம் மக்களின் மண்டையில் ஓங்கிக் குட்டும்! அந்த வகையிலான படங்கள் தமிழில் வருவது, கிட்டத்தட்ட அருகியே விட்டது. ஆனால், மலையாள மொழியில் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருக் கின்றன. இந்த வரிசையில் வந்திருக்கும் 'ஹவ் ஓல்டு ஆர் யூ', எனும் திரைப்படம் இயற்கை விவசாயத்தின் தேவையை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது... குறிப்பிடத்தக்கது!

'தினமும் புதுப்புது நோய்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. இதற்கு முக்கியக் காரணம்... ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் விவசாயத்தில் அதிகளவில் பயன்படுத்துவதுதான். இயற்கை முறையில் பயிர் செய்து, இயற்கைச் சூழலை உருவாக்க... நம் வீட்டு மொட்டை மாடியே போதும்’ என்று பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி விழிகளை விரிய வைக்கிறது, இத்திரைப்படம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்!

மஞ்சு வாரியர், 'நிருபமா’ என்கிற பாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கிறார். அவருடைய கணவனும் மகளும் நிருபமாவைப் பிரிந்து வெளிநாடு செல்கிறார்கள். இதனால், வெறுமையான சூழலுக்குத் தள்ளப்படுகிறார் நிருபமா. இந்நிலையில், மொட்டை மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணிக்கு ஒரு தடவை அன்பளிப்பாகத் தருகிறார். அந்தப் பெண்மணியோ... தான் வேலை பார்க்கும் வீட்டிலுள்ளவர்களிடம் அவற்றைக் கொடுக்கிறார். அது, மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீடு. அந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு... நிருபமாவுக்கு அழைப்பு விடுக்கிறார் அந்தத் தொழிலதிபர். 'நீங்கள் கொடுத்த இயற்கைக் காய்கறிக்கு இணையே இல்லை. என் வீட்டில் இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் வரவிருக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் அளவுக்கு இயற்கைக் காய்கறிகள் வேண்டும். நீங்கள்தான் ஒரு ஏக்கரில் தோட்டம் வைத்திருக்கிறீர்களே...’ என்று கடகடவென தொழிலதிபர் கேட்க... திகைத்துப் போகும் நிருபமா, யோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.

'ஒரு ஏக்கர்ல விவசாயம்னு ஒரு பந்தாவுக்காக அவங்ககிட்ட சொல்லிட்டேன்' என்று அந்த வேலைக்கார பெண்மணி, நிருபமாவிடம் மன்னிப்பு கேட்க, 'சரி சமாளிப்போம்' என்றபடி, அந்த ஊரில் உள்ள பெரிய காய்கறி மண்டியை அணுகுகிறார். ரசாயன விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை குவித்து வைத்திருக்கும் மண்டிக்காரர், காய்கள், பழங்கள் கெட்டுப்போகாமல் தளதளவென்றிருப்பதற்காக பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ரசாயனங்களை, நிருபமாவின் கண்முன்பாகவே அடிக்கிறார். மாம்பழங்களை கல் வைத்து பழுக்க வைக்கிறார். இதையெல்லாம் நியாயமும்படுத்துகிறார். அதிர்ச்சியாகும் நிருபமா... 'உங்க வீட்டுக்கும் இதையேதான் கொண்டு போவீங்களா?' என்று கேட்க...

'அதுக்கு வேற வரும்... இயற்கை விவசாயத்துல விளைஞ்சது!'' என்று பதில் தருகிறார் மண்டிக்காரர்.

கொதித்தெழுந்து வெளியேறும் நிருபமா, தன் மொட்டை மாடியில் வந்து நின்று செடி, கொடிகளை வாஞ்சையோடு பார்க்கிறார். அப்படியே சுற்றியிருக்கும் மொட்டை மாடிகளெல்லாம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கும் நிருபமாவுக்கு... புதிய எண்ணம் பிறக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களிடம் மாடித்தோட்டம் பற்றி சொல்லி... 2,000 ஆயிரம் பேருக்கான காய்கறி தரவேண்டியிருப்பதையும் இதையே ஒரு தொழிலாகச் செய்யலாம் என்பதையும் எடுத்துச் சொல்லி, பலருடனும் கைகோக்கிறார். மொட்டை மாடிகள் எங்கும் இயற்கை முறையில் விளையும் காய்கறித் தோட்டங்கள் சிலுசிலுக்கின்றன!

தொடர்ச்சியாக, கட்டடக்கலை நிபுணர்களுக்கான கருத்தரங்கில் பேசுவதற்கு, கல்லூரி கால தோழி மூலமாக வாய்ப்பு கிடைக்க... ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகளில் உள்ள நச்சுத்தன்மை, கேரளாவின் காசர்கோடு பகுதியில் முந்திரி மரங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் விஷமருந்து தெளித்ததால், அந்தப் பகுதி மக்கள் இன்றளவிலும் பாதிக்கப்பட்டிருப்பது என்று பலவற்றையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டு, 'இன்றைக்கு மக்கள் கேன்சரின் பிடியில் சிக்கியிருப்பதற்கு காரணமே ரசாயன உரங்களில் விளைந்த காய்கறிகள்தான். அதனால், கட்டடங்களில் வீட்டுத் தோட்டத்துக்கும் இடம் ஒதுக்குங்கள்' என்று வேண்டுகோள் வைக்கிறார்.

முன்வரிசையில் அமர்ந்திருக்கும் மாநில அமைச்சர், நெகிழ்ந்து போய், 'கேன்சரை உருவாக்கிவிட்டு, ஊருக்கு ஊர் கேன்சர் மருத்துவமனைகளைக் கட்டுவதைவிட, அந்த நோய் வராமல் தடுக்கும் வீட்டுத் தோட்டத்தை வீட்டுக்கு வீடு அமைக்கலாம். இதற்கு நீங்களே தலைமை ஏற்பதாக இருந்தால், உங் களிடம் ஒப்படைக்கத் தயார்' என்கிறார். அதை ஏற்று, சாதிக்கிறார் நிருபமா. விஷயம், குடியரசுத் தலைவர் வரை எட்டுகிறது. அதன் பிறகு, நாடு முழுக்க பிரபலமாகிறார், நிருபமா.

படத்தின் கரு, இயற்கை விவசாயம் அல்ல. 35 வயதைக் கடக்கும் பெண்களுக்கே இருக்கும் சில முக்கியமான பிரச்னைகளில் வயதும் ஒன்று. இந்த வயதுப் பிரச்னையை வைத்து, கணவன் மற்றும் மகளுடன் போராடும் நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்க்கைதான் கதைக்கரு. தனித்து நின்று வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் அந்தப் பெண், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுப்பதை, எந்தவித பிரசார நெடியும் இல்லாமல், கதையோடு கதையாக வெகு இயல்பாக ஓடவிட்டிருப்பது... அழகோ அழகு! மொத்தத்தில், மொட்டைமாடியில் இருந்தே இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்தலாம் என்கிற இயற்கை சிந்தனையை அனைவர் மீதும் அள்ளித் தெளிக்கிறது, படம்!

''இயற்கைதான் திருப்புமுனை!''

ஹவ் ஓல்ட் ஆர் யூ... ஒரு பசுமைத் திரைப்படம்!

இதைப்பற்றி பேசும் படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூ, ''நாயகி, மாடியில நின்று தோட்டத்தில் காய்கறி பறிப்பது போல ஒரு காட்சியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில், இந்தக் காட்சியையே கதையில் முக்கிய திருப்புமுனையாக ஏன் மாற்றக்கூடாது என்று தோன்றவே... கதையை மாற்றி அமைத்தோம். 'ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மூலமான ஆபத்துகள்... கார்பைடு கல் மூலமாக பழுக்க வைத்த மாம்பழ ஜூஸ் குடித்து நிறைய பேர் மயக்கம்' என்பது போன்ற நிறைய செய்திகளைப் படித்திருக்கிறேன். அதையெல்லாமும் இடம் பார்த்து கோத்தேன். மாடித் தோட்டத்திலயே இயற்கையான முறையில, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை விளையவைக்க முடியும் எனும்போது, ஏன் ரசாயனங்களுக்கு பலியாக வேண்டும். இப்படி இயற்கை விவசாயத்தைச் சொன்னதுதான், படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு போயிருக்கிறது'' என்று பெருமையோடு சொல்லும் ஆண்ட்ரூ, இயற்கையான முறையில் விளையும் காய்கறி, பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism