Published:Updated:

அக்ஹோனி போரா...

வேக வைக்காமலே சோறாக மாறும் நெல் !

காசி.வேம்பையன்

பளிச்... பளிச்...

எல்லா மண்ணிலும் பயிரிடலாம்.
பூச்சித் தாக்குதல் இல்லை.
145 நாள் பயிர்.  

பாரம்பரிய ரகங்களாகத் தேடிப் பிடித்து சாகுபடி செய்வதில், இயற்கை வழி விவசாயிகளுக்கு அலாதி ஆர்வம் உண்டு. அதேசமயம், புதுப்புது அறிமுக ரகங்களாக தேடிப்பிடித்து சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்... ரசாயன வழி விவசாயிகள். புதுப்புது ரகங்களாக தேடிப்பிடித்து சாகுபடி செய்யும் திருவண்ணாமலை மாவட்டம், நயம்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரசாயன விவசாயியான சிவலிங்கம், கொஞ்சம் வித்தியாசமாக... 'மத்திய நெல் ஆராய்ச்சி நிலைய'த்தின் சார்பில் 2009ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட சமைக்காமலே சாப்பிடக்கூடிய ரகமான 'அக்ஹோனி போரா’ (Aghoni bora) என்கிற நெல் ரகத்தை சாகுபடி செய்து, நல்ல மகசூல் எடுத்திருக்கிறார்... முழுக்க இயற்கை வழி விவசாய முறையில்!

அக்ஹோனி போரா...

விதைநெல் உற்பத்தியில் உதயமான தேடல்!

##~##

அறுவடைப் பணியில் இருந்த சிவலிங்கத்தைச் சந்தித்தோம். ''நாங்க விவசாயக் குடும்பம்தான். எங்க அப்பா அரசாங்கத்துக்கு விதைநெல் உற்பத்தி செஞ்சு கொடுத்திட்டு இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சிட்டு அவர்கூட சேர்ந்து நானும் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இப்போ மானாவாரி நிலம் 5 ஏக்கரும் கிணத்துப்பாசனத்தோட 5 ஏக்கரும் சேர்த்து மொத்தம் பத்து ஏக்கர் இருக்கு. மானாவாரியா கடலை, எள், உளுந்துனு சாகுபடிச் செய்வேன். இறவையில நெல், கரும்பு போடுவேன். ஆரம்பத்துல விதைநெல் உற்பத்தி செய்ததால வேளாண்மைத்துறையில இருந்து புதுப்புது ரகங்களைக் கொடுத்து சாகுபடி பண்ணச் சொல்வாங்க. அந்தப் பழக்கத்துல நான் புதுப்புது ரகமாத் தேடிப்பிடிச்சு சாகுபடி பண்ண ஆரம்பிச்சேன்.

விதைக்காகவே விற்பனை!

விவசாயக் கண்காட்சி, கருத்தரங்குக்கெல்லாம் போறப்போ புது ரக நெல்லை வாங்கிட்டு வந்து சாகுபடி பண்ணுவேன். அந்த மாதிரி ரகங்கள அறுவடை பண்றப்போ பெரும்பாலும் தெரிஞ்சவங்க, பக்கத்துத் தோட்டத்துக்காரங்களுக்கு விதைநெல்லாவே வித்துடுவேன். இந்தத் தடவை எனக்கு 2 கிலோ 'அக்ஹோனி போரா’ ரக விதைநெல் கிடைச்சது. அதை 30 சென்ட் நிலத்துல விதைச்சேன்.

அக்ஹோனி போரா...

இந்த ரகத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. இதோட புழுங்கல் அரிசியைப் பொங்க வைக்க வேண்டியதில்லை. தண்ணியில முக்கால் மணி நேரம் ஊறவெச்சு எடுத்து, சுடு தண்ணில பத்து நிமிஷம் போட்டு வெச்சிருந்தா சோறாகிடும்'' என்று அதிசயிக்க வைத்தவர், அப்படியே செய்தும் காட்டினார்.

காய விட்டால், விரைவில் அறுவடை!

''குளிர் பிரதேசத்துல விளைவிக்கிறதுக்காக உருவாக்கப்பட்ட ரகம் இது. ஆனாலும் என்னோட வயல்ல நல்லாத்தான் வந்துருக்கு. இதில்லாம தனியா ஒண்ணரை சென்ட்ல பாசுமதி ரகமும் போட்டிருக்கேன்.

எங்கப்பா, சால் முறையிலதான் (பார் முறை நடவு) நெல் நடவு செய்வார். ஒரு வாரம் கழிச்சு, நிலத்தை நல்லாக் காய விட்டு தண்ணி கட்டுவார். பதினஞ்சாவது நாள்ல களை எடுத்துடுவார். இப்படி பண்ணும்போது அதிக தூர் வெடிச்சு, பயிர் சீக்கிரமே வளந்துடும். வழக்கத்தைவிட பத்து நாள் முன்னாடியே அறுவடைக்கு வந்துடும். அதே முறையைத்தான் நானும் கடை பிடிச்சிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிவலிங்கம், 30 சென்ட்  நிலத்தில் அக்ஹோனி போரா ரகத்தை சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அது அப்படியே பாடமாக இங்கே...

30 சென்டுக்கு 2 கிலோ விதைநெல்!

அக்ஹோனி போரா நெல் ரகத்துக்கு 145 நாட்கள் வயது. அனைத்துப் பட்டங்கள் மற்றும் அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. 30 சென்ட் நிலத்தில் நடவு செய்ய, 2 கிலோ விதை தேவை. ஒரு சென்ட் நிலத்தைக் களை நீங்கக் கொத்தி, சமப்படுத்த வேண்டும். 2 கிலோ விதைநெல்லில், 200 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி ஈரச் சாக்கில் இட்டு 24 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து, நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும். 12

அக்ஹோனி போரா...

மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் இருந்து தண்ணீரை வடித்துவிட வேண்டும். 3 மற்றும் 5ம் நாட்களும் இதேபோல தண்ணீர் கட்டி வடிக்க வேண்டும். தொடர்ந்து தரை தெரியாத அளவுக்கு தண்ணீர் இருக்குமாறு, பராமரித்து வர வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.

5 அங்குல இடைவெளி!

நாற்றங்கால் தயாரிப்பு ஒரு வாரம் முன்னதாகவே சாகுபடிக்கு தேர்ந்தெடுத்திருக்கும் வயலில் ஓர் உழவு செய்து, 4 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைப்பு செய்து, பூ எடுத்தவுடன் மடக்கி இரண்டு உழவு செய்ய வேண்டும்.

50 கிலோ மண்புழு உரம், இரண்டரை கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து வயலில் தூவ வேண்டும்.  நாற்றுகளை வரிசைக்கு வரிசை 10 அங்குலமும் நாற்றுக்கு நாற்று

5 அங்குலமும் இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நான்கு நாட்கள் வரை தரை தெரியாத அளவுக்குத் தண்ணீர் கட்டவேண்டும். பிறகு, தண்ணீரை வடித்து ஒரு வாரத்துக்குக் காய விட்டு, தண்ணீர் கட்ட வேண்டும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த வசம்பு !

15-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை சேற்றில் அழுத்தி 5 கிலோ நுண்ணூட்டக் கலவை உரத்தைத் தூவ வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதுமானது. 45-ம் நாளில் களைகள் இருந்தால், மீண்டும் அழுத்திவிட வேண்டும். 65 மற்றும் 80-ம் நாட்களில் 5 கிலோ வசம்புத்தூளை வயலில் தூவ வேண்டும்.

அக்ஹோனி போரா...

இதுவே பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடும் என்பதால், பூச்சிகொல்லிகளுக்கு வேலை இல்லை. வேறு ஊட்டங்களும் கொடுக்கத் தேவையில்லை. 90ம் நாளில் கதிர் பிடித்து, 120ம் நாளுக்கு மேல் முற்றி, 130-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

30 சென்டில் 8 மூட்டை மகசூல்!

சாகுபடிப் பாடம் முடித்த சிவலிங்கம், நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார். ''ஒவ்வொரு தூர்லயும் நாப்பதுல இருந்து அம்பது சிம்பு இருந்துச்சு. ஒவ்வொரு சிம்புலயும் நூத்தம்பதுல இருந்து இருநூறு நெல்மணிங்க. அறுவடை பண்ணினதுல மொத்தம் 8 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சிருக்கு.

அக்ஹோனி போரா...

அடுத்த போகத்திலயும் இதை சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். சொந்தத் தேவைக்கு போக 500 கிலோ நெல்லை விதைக்காக விற்பனை செஞ்சுடுவேன். கிலோ அறுபது ரூபாய்னு விற்க முடியும். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக 23 ஆயிரம் ரூபாய் லாபம்தான். வீட்டுத் தேவைக்கு எடுத்து வெச்ச நெல்லுல இருந்து 60 கிலோ அளவுக்கு அரிசி கிடைக்கும். இதுவும் லாபக் கணக்குலதான் சேரும்'' என்றார் மகிழ்ச்சியாக.

 படங்கள்: பா. கந்தகுமார்
தொடர்புக்கு சிவலிங்கம்,
அலைபேசி: 88834-40295, 77084-13085.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு