Published:Updated:

கலகல கனகாம்பரம்...

கலங்கி நின்ற ரசாயன விவசாயி... கைகொடுத்த ஜீரோ பட்ஜெட் விவசாயி !

பிரீமியம் ஸ்டோரி

 ஆலோசனை

ஜி.பழனிச்சாமி

பளிச்... பளிச்...

ஜீரோ பட்ஜெட் கனகாம்பரம்
ரசாயன உரமே தேவையில்லை
பூச்சிகளை விரட்ட அஸ்திரங்கள்

''ரசாயன விவசாயத்துல கனகாம்பர பூ சாகுபடி பண்ற விவசாயி ராஜகோபால், இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆலோசனை கேட்டு தன்னோட தோட்டத்துக்கு என்னைக் கூப்பிடுறார். நீங்களும் கூடவே வந்தா... நல்லாயிருக்கும்'' என்று நம்மை அழைத்தார் முன்னோடி இயற்கை விவசாயியான 'பட்டக்காரன்புதூர்’ சுப்பிரமணியம். இவர், 'ஜீரோ பட்ஜெட்’ பாசிப்பயறு மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.

கலகல கனகாம்பரம்...
##~##

முற்பகல் பொழுது ஒன்றில் சுப்பிரமணியத்தோடு இணைந்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள முனியன்தோட்டம் பகுதியிலிருக்கும் ராஜகோபாலின் தோட்டத்துக்குச் சென்றோம்.

வருமானத்தில் பாதி உரக்கடைக்குத்தான்!

சந்தோஷம் பொங்க வரவேற்ற ராஜகோபால், ''எனக்கு இதுதான் பூர்வீகம். கிணத்துப் பாசனத்தோட நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. தண்ணி செழிம்பா இருந்த காலங்கள்ல வாழை, வெங்காயம், பருத்தினு சாகுபடி பண்ணுவோம். இப்போலாம் தண்ணி பத்தல. தோட்டம் நிறைஞ்ச வெள்ளாமை பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. எங்க பகுதியில முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லினு நிறைய பூ விவசாயம் நடக்குது. அதனால, நானும் அரை ஏக்கர்ல மட்டும் கனகாம்பரம் போட்டிருக்கேன். ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைத்தான் நானும் உபயோகப்படுத்துறேன்.

கனகாம்பரத்துக்கு நல்ல விலை கிடைச்சாலும், வர்ற வருமானத்துல பாதி உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்குமே போயிடுது. எங்க மாவட்டத்துல நிறைய பேர் இயற்கை விவசாயம் மூலமா வாழை, மஞ்சள், எலுமிச்சைனு சாகுபடி செஞ்சு நல்ல லாபம் எடுக்குறாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான் எனக்கும் இயற்கை முறை மேல ஆசை வந்துச்சு.

கலகல கனகாம்பரம்...

வழிகாட்டிய பசுமை விகடன்!

அதில்லாம 'இயற்கையில விளைவிச்சா பூ ரொம்ப நேரம் வாடாம இருக்கும். அதனால நல்ல விலையும் கிடைக்கும்’னு வியாபாரிகளும் சொன்னாங்க. அவங்கள்ல ஒருத்தரான தேவராஜ்தான் எனக்கு 'பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் புத்தகத்துல சுப்பிரமணியத்தோட பேட்டி வெளியாகியிருந்துச்சு. அதைப் படிச்ச பிறகுதான்... அவர்கிட்ட பேசி வரவழைக்கணும்னு முடிவு பண்ணினேன். இதோ வந்துட்டார்... பசுமைவிகடனையும் கூப்பிட்டுக்கிட்டு'' என்று சிரித்த ராஜகோபால்... சிவப்புத் தொப்பி அணிந்த புதுச்சேரி போலீஸ் பட்டாளம்போல், கனகாம்பர அணிவகுத்து நின்ற தோட்டத்தைச் சுற்றி காட்டினார்.

பிறகு, ''அரை ஏக்கர் கனகாம்பர சாகுபடிக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை உற்பத்திச் செலவு செய்யறேன். அடியுரமா 50 கிலோ டி.ஏ.பி., 500 மில்லி களைக்கொல்லி; மேலுரமா 50 கிலோ யூரியா; 150 கிலோ காம்ப்ளக்ஸ்; 50 கிலோ கலப்பு உரம்; பூச்சிக்கொல்லிக்கு எண்டோசல்ஃபான்னு அள்ளிக் கொட்ட வேண்டியிருக்கு. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுற மாதிரி எனக்கு இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுங்க'' என்று ராஜகோபால் கேட்க, ஆலோசனைகளை ஆரம்பித்தார் சுப்பிரமணியம்.

ரசாயனம் மண் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!

கலகல கனகாம்பரம்...

''நான் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் 'சுபாஷ் பாலேக்கர்’ சொல்லிக் கொடுத்த 'ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. பல ஆண்டுகளாக ரசாயனங்களைப் பயன்படுத்தியதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விட்டன. ரசாயன உரங்களால் கூடுதல் செலவாவதோடு, மண் ஆரோக்கியமும் கெட்டுப்போய் விடுகிறது. நாட்டு மாடு இருந்தால் போதும், கைப்பிடி அளவுகூட ரசாயனத்தைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்யலாம்.

கோடை உழவு!

பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் ஏர் கலப்பை மூலம் நன்கு உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். இதனால் மண் இளகுவதுடன், ஆழத்தில் உள்ள தீமை செய்யும் உயிரினங்கள் மேலே வந்து வெயிலில் அழிந்துவிடும். பிறகு, வைகாசி மாதம் 5 மாட்டு வண்டி ஆட்டு எரு, அதே அளவு தொழுவுரம் இரண்டையும் கலந்து இறைத்து இரண்டு முறை உழவு செய்து பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இடைவெளி அவசியம்!

ஒன்றரை அடி இடைவெளியில் பார் அமைத்து நடவு செய்திருக்கிறீர்கள்... அது தவறு. செடிகள் வளர்ந்து ஒன்றோடொன்று உராய்ந்தால், போதுமான சூரிய ஒளி கிடைக்காமல் வளர்ச்சி தடைபடும். அதனால் பாருக்கு பார் இரண்டரை அடி இடைவெளியும், செடிக்கு செடி இரண்டடி இடைவெளியும் இருக்க வேண்டும். நடவு செய்யும் முன்பு, நாற்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். இதனால், வேர்ப்புழு, வேரழுகல்...  போன்ற நோய்கள் கட்டுப்படும்.

மண்ணுக்கு ஜீவன் கொடுக்கும் ஜீவாமிர்தம்!

மண் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்ததில் இருந்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அரை ஏக்கருக்கு 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கி, மண்ணை எப்போதும் ஜீவனுள்ளதாக வைத்திருக்கும். மண்ணுக்கு அடியில் உள்ள மண்புழுக்களை இது மேலே வரச் செய்யும். தவிர, செடிகள் சீராக வளரும். பூக்கள் உதிராமல் நல்ல நிறத்துடன் பூக்கும்.

பூச்சிகளுக்கு அஸ்திரங்கள்!

நடவு செய்து ஒரு மாதம் கழித்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கன ஜீவாமிர்தத்தை ஒவ்வொரு செடியின் தூரிலும் கைப்பிடி அளவுக்கு இட வேண்டும். செடியின் வளர்ச்சி மற்றும் ஊட்டத்தைப் பொறுத்து கன ஜீவாமிர்தத்தின் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். தோட்டத்துக்குள் ஏதேனும் புழு, பூச்சிகள் தென்பட்டால்... 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னிஅஸ்திரம் தெளிக்க வேண்டும். இது கூடுதல் வேகத்துடன் செயல்பட,

3 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர்  கலந்து தெளிக்கலாம். இதையும் மீறி பூச்சிகள் இருந்தால், பிரம்மாஸ்திரக் கரைசலை, மூன்று லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர்  கலந்து தெளிக்கலாம். இவற்றை சரியாகக் கடைபிடித்து வந்தால் போதும். வேறெந்த ரசாயன உரமோ... பூச்சிக்கொல்லியோ தேவையேயில்லை.

அருமையான மகசூல் கிடைக்கும். இதே முறையையே எல்லாப் பயிர்களுக்கும் கடைபிடிக்கலாம்.

நான் ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறிட்டேன்!

அனைத்தையும் தெளிவாகக் கேட்டுக் கொண்ட ராஜகோபால், ''இனி நான் ஜீரோ பட்ஜெட் முறையிலதான் பூ சாகுபடி பண்ணப் போறேன்'' என்றவர்... ''அடுத்தத் தடவை ஜீரோ பட்ஜெட் கனகாம்பர சாகுபடி பத்தி என்கிட்ட பேட்டி எடுக்க நீங்க வந்தாகணும்'' என்று அழைப்பு வைத்து கைகள் கூப்பினார் நன்றி பெருக்கோடு!

பிரம்மாஸ்திரம்:

 

சாணம் - 5 கிலோ
மாட்டுச் சிறுநீர் - 5 லிட்டர்
வேப்பிலை - 5 கிலோ
புங்கன் இலை - 2 கிலோ
ஆடாதொடை இலை - 2 கிலோ
எருக்கன் இலை - 2 கிலோ
நுனா இலை - 2 கிலோ
ஊமத்தை - 2 செடி

இலைகளை ஒன்றாகச் சேர்த்து இடித்து, மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றைச் சேர்த்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வடிகட்டினால் பிரம்மாஸ்திரம் தயார். மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

அக்னி அஸ்திரம்:

புகையிலை - 1 கிலோ
பூண்டு - அரை கிலோ
பச்சைமிளகாய் - அரை கிலோ
வேப்பிலை- 5 கிலோ

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, மண்பானையில் இட்டு, 15 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து, ஆறு லிட்டர் கரைசலாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து 48 மணி நேரம் கழித்து வடிகட்டினால்... அக்னி அஸ்திரம் தயார். மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பீஜாமிர்தம்:

சாணம் - 2 கிலோ, மாட்டுச் சிறுநீர் - 2 லிட்டர், சுத்தமானச் சுண்ணாம்பு - 50 கிராம், ஜீவனுள்ள மண் - ஒரு கைப்பிடி... இவற்றை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, 12 மணி நேரம் வைத்திருந்தால், பீஜாமிர்தம் தயார்.

கன ஜீவாமிர்தம்:

சாணம்- 100 கிலோ, மாட்டுச்சிறுநீர்- 10 லிட்டர் ஆகியவற்றுடன், முளைகட்ட வைத்து பொடித்த சிறுதானியக் கலவை நான்கு கிலோ அளவில் கலந்து பிசைந்து, உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். இதை ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 படங்கள்: வி. ராஜேஷ்

தொடர்புக்கு
சுப்பிரமணியம்,
அலைபேசி: 98945-05188.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு