Published:Updated:

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

நீங்கள் கேட்டவை

 புறா பாண்டி

''எனது ஆழ்குழாய் கிணற்றில் (போர்வெல்) சுமார் 460 அடி ஆழத்தில், மோட்டார் சிக்கிக் கொண்டு விட்டது. மூன்று முறை முயன்றும் வெளியே எடுக்க முடியவில்லை. அதை எப்படி மேலே எடுப்பது?''

குழந்தைவேலு, கரூர்.

ஆழ்குழாய் மோட்டார்களை வெளியே எடுப்பதில் அனுபவம் வாய்ந்த கோவை மாவட்டம், பாசக்குட்டையைச் சேர்ந்த குமாரசாமி பதில் சொல்கிறார்.

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?
##~##

''ஆழ்குழாய் கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டால், அதை எப்படியாவது எடுத்து விடலாம் என்று நீங்களாக முயற்சி செய்ய வேண்டாம். அவசரப்பட்டு இழுக்கும்போது மண் சரிந்து, மோட்டாருக்கு பாதிப்பு ஏற்படலாம். மூன்று முறை முயற்சி செய்தும் வெளியே எடுக்க முடியாமல் போனதற்கு, மண் சரிவுகூட காரணமாக இருக்கும். இனி, அந்த மோட்டாரை எடுப்பது கடினம். அப்படியே எடுத்தாலும், அது பயன்படாது. எனவே, ஆழ்குழாய் கிணறு அமைப்பவர்கள் மூலம் அந்த மோட்டாரைக் கீழே அழுத்திவிட்டு புதிய மோட்டாரைப் பொருத்துவதுதான் நல்லது. இல்லாவிடில், நஷ்டம்தான் மிஞ்சும்.

ஆயிரம் அடி ஆழத்தில் மோட்டார் மாட்டிக் கொண்டாலும் பக்குவமாக முயன்றால், அதை எடுத்துவிட முடியும். ஆனால், இத்தகைய முயற்சியில் இறங்குபவர்களுக்கு நல்ல அனுபவம் இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்களைப் பயன்படுத்தினால்... பலன் கிடைக்காது.''

தொடர்புக்கு, அலைபேசி: 99763-63849.

''மாட்டுச் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க முடியுமா? வேறு என்னென்ன பொருட்கள் தயாரிக்க முடியும். அதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''

கே. மூர்த்தி, வேலூர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள 'கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா’வின் ஒருங்கிணைப்பாளர், சுனில் மான்சின்ஹா பதில் சொல்கிறார்.

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

''காமதேனு என்று சொல்லப்படும், பசு மாட்டின் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க முடியும். ஆனால், இக்காகிதம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சீக்கிரத்தில் கிழிந்து விடுகிறது. யானைச் சாணத்தில் இருந்தும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் யானைச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட காகிதமும் மெலிதாக இருந்ததால், நூல் கழிவுகளையும் கலந்து கடினமான காகிதத்தைத் தயாரித்தார்கள். அதே தொழில்நுட்பத்தைப் பின்பற்றி மாட்டுச் சாணத்துடனும் நூல் கழிவுகளைக் கலந்து காகிதம் தயாரிக்க முயன்று வருகிறோம்.

பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய்... போன்றவற்றைப் பயன்படுத்தி சோப்பு, பல்பொடி, திருநீறு, வாசனை பவுடர்... என பலவிதமான பொருட்களைத் தயாரிக்க முடியும். இவற்றுக்கு அதிகத் தேவையும் உள்ளது. பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் 'அர்க்’ என்ற பொருள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய், ஆஸ்துமா... போன்ற கொடிய நோய்கள்கூட குணமாகிறது. இதற்கு காப்புரிமையும் பெற்று வைத்துள்ளோம். மேலும், பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி... போன்ற விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கலாம்.

பசுவின் மூலம் மாதம்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் பெற முடியும். பல விவசாயிகளுக்கு அதுபற்றிய விவரங்கள் தெரிவதில்லை. இலவசமாகவே இதற்கான பயிற்சிகளை எங்கள் நிறுவனம் மூலமாக கொடுத்து வருகிறோம். தங்கும் இடம், உணவு உட்பட இலவசமாகவே வழங்கப்படுகிறது. பத்து பேர் என்கிற அளவில் இங்கு தங்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் பயிற்சிக்கு ஆட்கள் வரும்போது மட்டும் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள், முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.''

தொடர்புக்கு: Go-vigyan Anusandhan Kendra, Kamdhenu Bhavan, Pt. Baccharaj Vyas Square, Chitar Oli, Mahal, Nagpur - 440 002, Maharastra State (INDIA)

தொலைபேசி: 0712-2772273, 2734182, அலைபேசி: 094221-01324.

''வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க விரும்புகிறேன். தயார் நிலையில் காய்கறிச் செடிகள் கிடைக்குமா?''

நித்யா, புனே.

வீட்டுத் தோட்டம் அமைப்பதில் அனுபவம் வாய்ந்த கோயம்புத்தூர், சித்ரா துரைசாமி பதில் சொல்கிறார்.

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

''நகரத்தில் உள்ளவர்களுக்கு வீட்டில் காய்கறித் தோட்டம் போடுவது என்பது பெரிய கனவாக இருக்கும். தொட்டிகளில் வளர்க்கும்போது, சரியான மண், மட்கிய உரங்கள் இல்லாவிட்டால், செடிகள் வளராது. தவிர, காய்கறிச் செடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த, ரசாயனங்களைத் தெளித்து விடுவார்கள். இதன் அளவு கூடி விட்டாலும் செடிகள் பட்டுப் போகும்.

இப்படிப் பல பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு தொட்டிகளுக்கு பதில் பாலிதீன் பைகள் முலம் புதிய முறையில் வடிவமைத்து வருகிறோம். மண், இயற்கை உரங்கள் மற்றும் விதையுடன் தயார் நிலையில் உள்ள பைகள் 150 ரூபாய் அளவில் விலைக்கு கிடைக்கின்றன. அனைத்து விதமான காய்கறிகள், கீரைகள் என இருப்பதால் உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இப்பைகளில் தேவைக்கேற்றவாறு இயற்கை உரங்களையும் போட்டுக் கொள்ளலாம். மூன்று நபர்கள் உள்ள குடும்பத்துக்கு 80 பைகள் தேவைப்படும். இடம் மற்றும் தேவையைப் பொறுத்து எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ளலாம். முற்றிலும் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி தோட்டம் அமைக்கும்போது சூழலுக்குக் கேடில்லாமல் விஷம் இல்லாத காய்கறிகளைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

நிழல் வலை எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் வீட்டுத்தோட்டங்களை அமைக்கலாம். இந்த வலைகள் கடைகளில் கிடைக்கும். இவற்றை பந்தல் போல கட்டிவிட்டு, அதன் கீழே செடிகளை வைத்துப் பராமரிக்கலாம். நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதையும் இந்த நிழல் வலைகள் குறைக்கும்.''

தொடர்புக்கு, அலைபேசி: 97897-74662.

''கால்நடைப் பண்ணை வைக்க விரும்புகிறேன். இதைப் பற்றிய படிப்புகள் உள்ளனவா?''

ரா. மகேஷ், திருத்தணி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர். து. கதிரேசன் பதில் சொல்கிறார்.

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

''எங்கள் பல்கலைக்கழகத்தில் கால்நடைப் பண்ணை மற்றும் அது சார்ந்த மேலாண்மை தொடர்பான சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பாடத்தின் பயிற்சிக் காலம் 6 மாதங்கள். வெள்ளாடு வளர்ப்புக்கு மட்டும்

3 மாதங்கள்தான் பயிற்சி காலம்.

இந்தச் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புவோர் ஒரு தாளில் பெயர், முழுஅஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி எண் மற்றும் சேர விரும்பும் பாடத்தின் தலைப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இரண்டு புகைப்படங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணத்தையும் சேர்த்து 'விரிவாக்கக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை - 600051’ என்ற முகவரிக்கு அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம்.

சான்றிதழ் படிப்பு, அதில் சேர்வதற்கான கல்வித் தகுதி மற்றும் கட்டணம் ஆகியவை தனியே கொடுக்கப்பட்டுள்ளன.  பயிற்சிக் கட்டணத்தை 'ஜிலீமீ ஞிமீமீ, The Dee, Tanuvas, Chennai - 600051 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்கப்பட்ட வரைவோலை (Demand Draft) அல்லது இந்திய அஞ்சல் ஆணை(Indian Postal Order) மூலம் செலுத்தலாம்.

தொலைபேசி எண்: 044-25554375 (நேரடி) 044-25554555, 25554556.

ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய மோட்டாரை மீட்பது எப்படி ?

''நேரடி நெல் விதைக்கும் கருவி எங்கு கிடைக்கும்?''

இரா. கிருஷ்ணமூர்த்தி, ஆனத்தூர்.

''நேரடி நெல் விதைக்கும் கருவி, காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். இதைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியும் கொடுக்கிறார்கள்.''

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603 203. தொலைபேசி: 044-27452371.

படங்கள்: தி. விஜய்

 விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2

என்ற முகவரிக்கு தபால் மூலமும்

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு

இ-மெயில் மூலமும்  PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு