Published:Updated:

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !

பிரீமியம் ஸ்டோரி

தொழில்நுட்பம்

 என்.சுவாமிநாதன்

'மிளகாய் வத்தல் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் விறுவிறு பூமியான விருதுநகரில்  ஜூலை 31 அன்று கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்... 'விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க'த்தினர். துறைசார்ந்த விஞ்ஞானிகள்,  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எனப் பலரும் பங்கேற்ற இக்கருத்தரங்கில்... ஆக்கப்பூர்வமான வகையில் பல்வேறு ஆலோசனைகளும் வந்து விழுந்தது... பாராட்டத்தக்கதாக இருந்தது!

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !
##~##

அருப்புக்கோட்டை, மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் செல்லையா பேசும்போது, ''மிளகாயின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாக இருந்தாலும், உலக அளவில் மிளகாய் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான்! இங்கே ஆண்டுக்கு 12 லட்சம் டன் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசியவர், ''மிளகாய் சாகுபடிக்கு செம்மண்ணும், கரிசல் மண்ணும் ஏற்றவை. நல்ல காற்றோட்டமும் வடிகால் வசதியும் இருந்தால், அதிக மகசூல் கிடைக்கும். விதைப்புக்கு முன் மிளகாய் விதைகளை சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், வடித்த கஞ்சி போன்றவற்றைக் கொண்டு விதைநேர்த்தி செய்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். அதேபோல மிளகாய்க்கு அதிகத் தண்ணீரும் தேவையில்லை. மண் தன்மையைப் பொறுத்து ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது'' என்று பயனுள்ள குறிப்புகளையும் தந்தார்.

உர மேலாண்மை பற்றி பேச வந்த கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஜவஹர், இயற்கை உரங்களைத் தூக்கிப் பிடித்து பேசியது கவனிக்கத் தக்கதாக இருந்தது.

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !

''நிலத்தின் தன்மையைப் பொறுத்து பயிருக்கு உரமிட்டால் போதுமானது. மண் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து, அதற்கேற்ற உரங்களைக் கொடுக்க வேண்டும். கூடிய மட்டும் இயற்கை முறையில் சாகுபடி செய்வது நல்லது. தென் மாவட்டங்களில் இயற்கை முறையில் சாகுபடி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. மண்புழு உரம், பசுந்தாள் உரம், ஆட்டுக் கழிவு, தொழுவுரம்

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !

போன்றவற்றைக் கொண்டே சாகுபடி செய்ய முடியும்'' என்ற ஜவஹர்,

''பல்கலைக்கழகத்தின் சான்றளிப்புத் துறை மூலம் அங்கக வேளாண்மைச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு 'இயற்கை விளைபொருள்' என விற்பனை செய்ய முடியும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது, பூச்சி, நோய்கள் தாக்குவது குறைவதோடு, அதிக விலையும் கிடைக்கும்'' என்று உற்சாகமூட்டினார்.

மதிப்புக்கூட்டல் பற்றிப் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் காமராஜ், ''மிளகாய் வத்தல் சாகுபடியில் தற்போது ஏகப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. வழக்கமாக மிளகாயை வெயிலில் காய வைக்கும்போது 35% வரை இழப்பு ஏற்படலாம். சூரிய உலர்ப்பான் (Solar tunnel drier) மூலம் காய வைக்கும்போது, அந்த இழப்பைக் குறைக்க முடியும்.

மிளகாயைக் காய வைக்க சூரிய உலர்ப்பான் !

இப்படி உலர்த்துவது ஏற்றுமதி செய்வதற்கான ஒரு தகுதியாகவும் இருக்கும்.

வேளாண்மைப் பல்கலைக்கழக உயிர் சக்தித் துறை மூலம் சூரிய உலர்ப்பான் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 1 லட்ச ரூபாய்தான். இதன் மூலம் மூன்றே நாட்களில் ஒரு டன் மிளகாயை உலர்த்த முடியும்.

இக்கருவிக்கு மானியமும் உண்டு. மிளகாய்க் கழிவுகளில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் மின்சாரம்கூட உற்பத்தி செய்யலாம். இதற்கும் மத்திய அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் மானியம் கிடைக்கும்'' என்று ஆச்சரிய தகவல்கள் தந்தார்.

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் நிறைவேறியதா...? என்பதற்கு, மதுரை மாவட்டம், ஆவல்சூரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பையாவின் கருத்துக்கள்தான் பதில். அவர் சொன்னது-

''ரெண்டு ஏக்கர்ல மிளகாய் சாகுபடி பண்றேன். இந்தக் கருத்தரங்கு மூலமா நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டேன்.

அதேசமயம், விளைபொருட்களுக்குக் கட்டுபடியான விலையையும் விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தா... இன்னும் எங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்.''

படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு