Published:Updated:

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டுகள் ! காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டுகள் ! காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி

Published:Updated:

திட்டம்

 'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பார்கள். அதேபோல ஆட்கள் பிரச்னையும், மின்சாரப் பிரச்னையும் விவசாயிகளை வாட்டி வதைக்கின்றன. மேற்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்விதமாக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, மின் வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... மாநிலம் முழுவதும் 80% மானியத்தில் சோலார் (சூரியசக்தி) பம்ப்செட்களை அமைத்துக் கொடுத்து வருகிறது, அரசு (இதைப் பற்றி, 'சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்... வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை...’ என்ற தலைப்பில் 10.5.2014 தேதியிட்ட இதழில் எழுதி இருக்கிறோம்).

நடைமுறையில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள, இரும்பேடு கிராமத்தில், சோலார் பம்ப்செட் அமைத்திருக்கும் சிவானந்தத்தைச் சந்தித்தோம். சோலார் பம்ப்செட்டை இயக்கிக் காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தார், சிவானந்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

''பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, அப்பாகூட விவசாயத்துல இறங்கிட்டேன். நெல், கரும்பு, மணிலானு பல பயிர்களை சாகுபடி செஞ்சதுல ஓரளவுக்கு வருமானம் கிடைச்சுது. வேளாண்மைத்துறை அதிகாரிகளோட அறிமுகம் கிடைச்சப்போ அவங்க சொன்ன முறைகள்ல நெல், மணிலா, கோலியஸ், சூரியகாந்தி மாதிரியான பயிர்களை சாகுபடி செஞ்சேன். விளைச்சல் அதிகமா இருந்தாலும், விலை குறைவா இருந்ததால, பெரிய லாபமில்லை. அதனால, உரம், பூச்சிக்கொல்லி செலவைக் குறைக்கிறதுக்காக இயற்கை விவசாயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிவானந்தம், தண்ணீர் பிரச்னை பற்றிப் பேச ஆரம்பித்தார்.

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

''பாகப்பிரிவினையில எனக்கு 8 ஏக்கர் நிலம் கிடைச்சுது. விவசாயத்துல போதுமான வருமானம் கிடைக்காததால வீட்டுப் பிரச்னைகளை சமாளிக்கறதுக்காக, 3 ஏக்கரை விற்பனை செய்துட்டேன். 5 ஏக்கர்தான் கையில இருக்கு. ஒரு காலத்துல, இங்க இருக்கற கமண்டல நாக நதியில தண்ணி வரும். அது எங்க கிராமத்துல இருக்குற ஏரியில நிரம்பி, வாய்க்கால் மூலமா பாசனம் நடந்துச்சு. வாய்க்கால்ல தண்ணி குறையவும் 50 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டியிருந்தார் எங்கப்பா. அதுல, 15 அடியில தண்ணி இருந்துச்சு. அதை வெச்சுதான், 2 ஏக்கர்ல கரும்பு போட்டு, வெல்லம் ஆட்டி விற்பனை செஞ்சுட்டிருந்தேன். கிணத்துலயும் தண்ணி குறைய ஆரம்பிச்சுடுச்சு. அதனால, கரும்பை விட்டுட்டு நெல், மணிலானு மாறிட்டேன். கிணத்துல சுத்தமா தண்ணி இல்லாம போனதால, 2 வருஷத்துக்கு முன்ன, நிலத்துக்கு பக்கத்துலயே 85 சென்ட் நிலம் வாங்கி, 310 அடிக்கு போர்வெல் போட்டேன். அதுல 100 அடியில தண்ணீர் கிடைச்சுது. இலவச கரன்ட்டுக்காக 50 ஆயிரம் ரூபாயைக் கட்டி ரெண்டு வருஷமாகியும் கிடைக்கல.

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

இந்த சமயத்துலதான் வேளாண் பொறியியல்துறை மூலமா 80% மானியத்துல சோலார் பம்ப்செட் அமைச்சுக் கொடுக்கறதா தகவல் தெரிஞ்சுது. அதிகாரிகளைப் போய் பார்த்தப்ப... மீதமுள்ள 20% தொகையான 95 ஆயிரத்து 342 ரூபாய்க்கு டி.டி எடுத்துக் கொடுக்கச் சொன்னாங்க (இது பழைய விலை. தற்போது கூடியிருக்கிறது. விவரங்கள் பெட்டிச் செய்தி மற்றும் அட்டவணையில்). அதுக்கப்பறம், மார்ச் மாசம் என்னுடைய போர்வெல்லுல சோலார் பாசனத்துக்கான கருவிகளை அமைச்சுக் கொடுத்துட்டாங்க. 17 பேனல்கள் மூலமா 5,100 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகுது. இதை, பிரத்யேக கருவி மூலமா 'த்ரீ ஃபேஸா’ மாத்தி, போர்வெல்லுல இருக்குற 5 ஹெச்.பி மோட்டாரை ஓட்டிட்டு இருக்கேன். காலையில 7.30 மணியிலிருந்து, சாயந்திரம் 4.30 மணி வரை மோட்டார் ஓடுது'' என்ற சிவானந்தம்,

''இந்த சோலார் பம்ப்செட் பாசனம் மூலமா ஒண்ணரை ஏக்கர் நெல் வயலுக்கு தண்ணி பாய்ச்சலாம். சொட்டுநீர், தெளிப்புநீர் போட்டிருந்தா மூணு ஏக்கருக்கு போதுமானதா இருக்கும். கரன்ட் எப்போ வரும் நாள் முழுக்க மோட்டார் பொட்டிகிட்ட காத்துக் கிடக்குற விவசாயிகளுக்கு, சோலார் பம்ப்செட் வரப்பிரசாதம்தான்'' என்றார், மகிழ்ச்சியாக.!

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

தமிழக அரசின் கவனத்துக்கு...

சோலார் பம்ப்செட் பயன்படுத்தி வரும் அனுபவத்தின் மூலமாக, தமிழக அரசுக்கு சிவானந்தம் வைக்கும் கோரிக்கைகள்...

காலை மற்றும் மாலை வேளைகளில் குறைவான அளவு தண்ணீரைத்தான் பம்ப் செய்கிறது இந்த பம்ப்செட். கூடுதலாக சோலார் பேனல்களைச் சேர்த்து, கூடுதல் மின்உற்பத்திக்கு அரசு உதவினால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

சோலார் பேனல் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தின் மூலமாக மோட்டார் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று வரையறை செய்துள்ளனர். இதனால், மோட்டர் ரூமில் எரியும் மின்விளக்குகளுக்காக மட்டும், மின்வாரியத்திடம் இருந்து தனி மின் இணைப்பு அமைக்க வேண்டியிருக்கிறது. எனவே, சோலார் பேனல் மின்சாரத்தின் மூலமாகவே மின்விளக்கு எரிக்கும் வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.

இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து, பல்லாண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயி களுக்கு, சோலார் பம்ப்செட் மானியம் பெறு வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தொடர்புக்கு, சிவனாந்தம்,
செல்போன்: 95979-81740.

80% மானியம்... புதிய விலையுடன்!

5 ஹெச்.பி சோலார் பம்ப்செட் அமைப்பதற்கு சொட்டுநீர்ப் பாசனத்துடன் கிணறு அல்லது போர்வெல் இருக்கவேண்டும். தண்ணீர் 150 அடியில் கிடைக்க வேண்டும். சோலார் பேனல்கள் அமைக்க, கிணற்றில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் 200 சதுரஅடி அளவுக்கு நிழல் விழாத இடம் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் பொருந்தும் விவசாயிகள், தங்களின் மாவட்ட வேளாண் பொறியியல் துறையை அணுகி, இந்தத் திட்டத்தில் பயனடையலாம். இவ்வளவு பரப்பில் நிலம் இருக்க வேண்டும், என்கிற குறியீடு கிடையாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism