Published:Updated:

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

கைகொடுத்த சோலார்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: ர. சதானந்த்

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

கைகொடுத்த சோலார்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: ர. சதானந்த்

Published:Updated:

முயற்சி

'தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும்... வேறெந்த சலுகைகளும் வேண்டாம்’ என்பதுதான் இன்றையச் சூழ்நிலையில் பெருவாரியான விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. அந்தளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், கால்வாய் அமைத்து, பாசனத் துக்கு அரசாங்கம் வசதிகளைச் செய்து தரும் என்று காத்திருக்காமல்... தாங்களே ஒன்றிணைந்து, குடிநீர்த் திட்டக் கழிவு நீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து... வறண்ட நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றியிருக்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் என்றால், ஆச்சர்யம்தானே!

காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த 16 முன்னோடி விவசாயிகள் இணைந்துதான் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ரங்கசாமியிடம் பேசியபோது, ''பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரிச்சு, 'அத்திகடவு நீர்த் திட்டம்’ மூலமா கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல இருக்கிற நிறைய கிராமங்களுக்கு குடிநீர் கொடுத்துட்டு இருக்குது அர சாங்கம். இப்படி சுத்திகரிக்கிறப்போ வர்ற கழிவு நீர், 15 கிலோ மீட்டர் தூரம் ஓடையில போய், பவானி ஆத்துல சேருது. இந்தக் கழிவு நீர் ஓடையில வருஷம் முழுசும் தண்ணீர் ஓடும். ஓடைக்குப் பக்கத்துல கிணறு தோண்டி, அதுல ஆயில் மோட்டார் பொருத்தி பல விவசாயிங்க நல்லா வெள்ளாமை செஞ்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, நாலு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

கிணத்துப் பாசனத்தை மட்டுமேதான் நம்பி வெள்ளாமை செய்றோம். அடிக்கடி கிணறு வறண்டு போய், ஆடு, மாடுகளுக்குக்கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை வந்துடும். இந்த நிலையில, 'ஓடையில இருந்து எங்களுக்கும் தண்ணீர் கொடுக்கணும்’னு அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கை வெச்சோம். ஆனா, அது நிறைவேறுற மாதிரி தெரியல. அதனால, யாரையும் எதிர்பார்க்காம, நாங்க 16 பேரும் ஒண்ணா சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குழாய் மூலமா தண்ணியைக் கொண்டு வந்துட்டோம். எங்க 16 பேருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்துல பாசனம் நடக்குது. வாழை, தென்னை, கறிவேப்பிலைனு வளமான விவசாயம் வருஷம் முழுக்க நடக்குது'' என்ற ரங்கசாமியைத் தொடர்ந்தார், சின்னசாமி.

விறுவிறுப்பான விவசாயம்!

''ஓடையில ஓடுற தண்ணீரை நேரடியா மோட்டார் வெச்சு உறிஞ்சி எடுக்கறதுக்கு அனுமதி கிடையாது.  ஆனா, பக்கத்துல கிணறு தோண்டி அதுல இருந்து தண்ணீர் எடுத்துக்கலாம். அதனால, ஓடைக்குப் பக்கத்துல பத்து சென்ட் இடத்தை வாங்கி, அதுல பத்தடி ஆழத்துக்கு கிணறு வெட்டியிருக்கோம். அதுல நல்லா தண்ணி ஊறிட்டு இருக்கு. அந்த இடத்துக்கு கரண்ட் கிடைக்க வாய்ப்பில்லாததால, 26 ஹெச்.பி ஆயில் இன்ஜின் மோட்டார் பொருத்தி, குழாய் மூலமா தண்ணியை எங்க தோட்டத்துக்குக் கொண்டு வந்தோம். பஞ்சாயத்துல அனுமதி வாங்கி, பி.வி.சி குழாய்களை மண்ணுல புதைச்சிருக்கோம். எங்க இடத்துல 16 கிளையா பிரிச்சு, முறை வெச்சு பாசனம் செய்றோம்.

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

மொத்தம் இதுக்கு 35 லட்சம் ரூபாய் செலவாச்சு. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் மோட்டார் ஓடவேண்டிய சூழ்நிலை. ஒரு மணி நேரம் ஓட்டறதுக்கு, 300 ரூபாய்க்கு டீசல் ஊத்தணும். தினமும் 3 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் ஊத்த வேண்டியிருந்துச்சு. அதனால, மூணு மாசத்துக்கு முன்ன, 20 ஹெச்.பி பவர்ல சோலார் மோட்டார் மாட்டியிருக்கோம். இதுல ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தாராளமா தண்ணி எடுக்க முடியுது.

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

இதை அமைக்கறதுக்கு மானியம் எல்லாம் போக, 14 லட்ச ரூபாய் செலவாச்சு. ஆனா, ஆயில் மோட்டார்ல கிடைச்ச தண்ணியைவிட கூடுதலா வருது. 16 பேருக்கும் சராசரியா ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரெண்டு மணி நேரம் பாசனம் செய்யற அளவுக்கு தண்ணி கிடைக்குது. காயுற நிலைமையில இருந்த தென்னையை எல்லாம் காப்பாத்திட்டோம்'' என்று சொன்னார் சின்னசாமி.

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

நிறைவாகப் பேசிய ரங்கசாமி, ''கடுமையான வறட்சியால் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத சூழல்ல இருந்த எங்களுக்கு, இந்த நீர் கைகொடுத்து காப்பாத்திடுச்சு. இது மாதிரி வீணாகுற தண்ணீரை முறையாகப் பாசனம் செய்யறதுக்கு அரசாங்கம் வழி வகுத்துக் கொடுத்தாலே, நிறைய விவசாயிகளுக்கு உதவியா இருக்கும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

தொடர்புக்கு,
ரங்கசாமி செல்போன்: 99437-70835,
முனைவர் ஆர்.ஜெயக்குமார்,
செல்போன்: 88832-64000

 தாராளமாகப் பாய்ச்சலாம்..!

கழனியைச் செழிக்க வைத்த கழிவு நீர்..!

'கழிவு நீரில் விவசாயம்' என்றதுமே... சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அதனால், வெள்ளியங்காடு பகுதி விவசாயிகள் பாய்ச்சும் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு, கோயம்புத்துர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பரிசோதனைக் கூடத்தில் கொடுத்தோம். நீரின் வேதியியல் தன்மைகளை ஆய்வுசெய்த பிறகு, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசிய துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.ஜெயக்குமார், ''சராசரியாக தண்ணீரின் கார, அமிலத்தன்மை (பி.ஹெச்) 7 முதல் 8.5 வரை இருக்கும். இந்தக் கழிவு நீரைப் பொருத்தமட்டில் கார, அமிலத்தன்மை 8.9 பி.ஹெச். என்று கொஞ்சம்போல கூடுதலாக உள்ளது. ஆனால், இதன் காரணமாக எந்தவொரு பாதிப்பும் இல்லை. என்றாலும், இதைக் குறைத்துக் கொண்டால், பயிர்கள் மேலும் சிறப்பாக இருக்கும். கார, அமிலத் தன்மையைக் குறைக்கும் ஆற்றல் ஜிப்சத்துக்கு உண்டு. பாசன வாய்க்காலில் ஜிப்சம் உள்ள மூட்டையை வைத்துவிட்டால், அது பாசன நீரில் லேசாகக் கரைந்து, கார, அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதே நீரை பயிர்களுக்குக் கொடுக்காமல்... கிணற்று நீரையும் மாற்றி மாற்றி பாசனம் செய்யலாம். இப்படி செய்யும்போதுக், கார, அமிலத்தன்மை குறையும். ஆண்டுதோறும் நன்கு மட்கிய தொழுவுரத்தை அடியுரமாகக் கொடுப்பதன் மூலமும் கார, அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தலாம். மற்றபடி இந்த நீரில் வேறு எந்த வேதியியல் கலவையும் கிடையாது. தாராளமாகப் பயன்படுத்தலாம்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism