Published:Updated:

காவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

காவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

பிரச்னை

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 2013-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அரசிதழில் வெளியானபோது... 'இனி காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி தமிழ்நாட்டுக்குள் ஓடி வந்துவிடும்’ என்பதுபோல வெற்றி விழா கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டன. 'பொன்னியின் செல்வி’, 'காவிரித்தாய்’ என பட்டங்கள் சூட்டி, பல கோடி ரூபாய் செலவில் படுகோலாகலமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்தும் அந்த இறுதித் தீர்ப்பு இன்னும் உயிர்பெறாததால்... விவசாயிகளிடம் ஏமாற்றமும் எதிர்பார்ப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கர்நாடகா மாநிலத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை நம்முடைய ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்காததால், இந்த ஆண்டும் குறுவை சாகுபடியைக் கைவிட வேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள், விவசாயிகள்.

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் மூலம்தான் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு, இந்த விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும், கர்நாடகா மாநிலத்துக்கு சாதகமான காட்சிகள் மாறவில்லை. மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சியும் தன்னுடைய சட்டக் கடமையை நிறைவேற்ற மறுக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முன்மொழிவு எதுவும் எங்கள் துறையில் இல்லை. இது தொடர்பாக எந்தத் தாக்கீதும் எங்களுக்கு வரவில்லை'' என்கிறார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் ''மேலாண்மை வாரியம் அமைப்பதை, என்ன விலை கொடுத்தும் தடுத்து நிறுத்துவோம்'' என்கிறார்கள்.

காவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..!

இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, ஜூலை 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது, காவிரி உரிமை மீட்புக் குழு. இக்குழுவில் உள்ள விவசாய சங்கங்களும் அரசியல் இயக்கங்களும் இப்போராட் டத்துக்காக, கிராமம் கிராமமாகச் சென்று, அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றன.

குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசனிடம் பேசியபோது, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு, நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் உத்தரவிடப்படவில்லை. அது வெறும் பரிந்துரைதான் என்றும் கர்நாடகாவின் அனைத்துக் குழுவினரும் நெஞ்சாரப் பொய் சொல்லி வருகிறார்கள். அவர்கள், பிரதமரிடம் அளித்த மனுவில் இந்தப் பொய்யான தகவலைப் பதிவு செய்துள்ளார்கள். இறுதித் தீர்ப்பின் தொகுதி 5, பக்கம் 224-ல் 'இத்தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆணையிட நேர்ந்ததற்கான சட்ட சூழல்களையும் அத்தீர்ப்பு விளக்கியிருக்கிறது.

காவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..!

'நர்மதை ஆற்றுத் தீர்ப்பு 1970-ம் ஆண்டில் வழங்கப்பட்டபோது, அதைச் செயல்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான பொறியமைவு இல்லாததால், அத்தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்துவிட்டது. தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான பொறியமைவு ஏற்படுத்துவதற்காகவே, மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறு சட்டத்தில் 6-ஏ என்ற பிரிவு 1972-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது’ என காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பு, வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததுபோல், இறுதித் தீர்ப்பும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே, மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுகிறோம்' என்றும் இறுதித் தீர்ப்புரை கூறுகிறது.

இதைக் கர்நாடக அனைத்துக் கட்சி குழுவிடம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறி இருக்கவேண்டும். ஆனால் அவர் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார். இது தமிழகத்தை வஞ்சிக்கும் மௌனம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், 'மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது’ எனவும் கர்நாடாகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வாதம் மிகவும் அபத்தமானது. நயவஞ்சகமாக திசை திருப்பக் கூடிய செயல். உண்மை என்னவென்றால், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுதான் அந்த வழக்கையே தொடர்ந்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த வழக்குக்கும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாவும், அனந்தகுமாரும் தமிழகத்துக்கும் சேர்த்துதான் மத்திய அமைச்சர்கள். ஆனால், கர்நாடகாவுக்கு மட்டும் அமைச்சர்களாக இருப்பது போல் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்ற மணியரசன் நிறைவாக,

காவிரி கலாட்டா... மௌன மோடி... வேடிக்கை லேடி..!

''தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கக்கூடிய அரசியல் தலைமை தமிழ்நாட்டில் இல்லை. 'மேலாண்மை வாரியம் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு கால அவகாசம் தேவை' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவே கூறுவது, வேதனையளிக்கிறது. விவசாயமும், குடிநீரும் வாழ்வாதாரம். அதிகாரிகளை நியமிக்க, பிரதமர் மோடிக்கு, சில மணிநேரங்களே போதும். முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், செய்ய மறுக்கிறார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே காவிரி நீரைப் பெற்றுவிட முடியாது. அரசியல் ரீதியான அழுத்தமும் மக்கள் எழுச்சியும் அவசியமானது. அ.தி.மு.க வில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என அக் கட்சித் தலைமை சொல்கிறது. தி.மு.கவில் 85 லட்சம் பேர் இருப்பதாக அக்கட்சித் தலைமை சொல்கிறது. காவிரி உரிமைக்காக, போராட வேண்டிய சுமார் 2 கோடி தமிழ் மக்களை, இந்த இரு கட்சிகளும் தடுத்து வைத்துள்ளன. இவர்களுக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லை. மாறி மாறி சுயலாபத்துடன் இந்த இருகட்சிகளுமே மத்திய அரசுகளுடன் சமரசத்துடன் செயல்படுவதால்தான், கர்நாடகாவுக்கு சாதகமாகவே மத்திய அரசு கள் நடந்து கொள்கின்றன. அது காங்கிரஸாக இருந்தாலும் சரி... பி.ஜே.பி-யாக இருந்தாலும் சரி'' என்றார் ஆவேசத்துடன்.

அம்மா, காவிரித் தாயே... கடிதம் எழுதிக் கொண்டிருப்பதால் மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடாது. செயலிலும் தமிழக அரசு இறங்க வேண்டும். கூட்டுப்பொறுப்புடைய மத்திய அமைச்சர்களே... மாநில உணர்வோடு நடந்து கொள்ளும்போது, தமிழகம் எனும் தனிப்பொறுப்பை மட்டுமே கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வீறு கொண்டு எழ வேண்டும். கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை தொகுதி எம்.பி.-க்களையும் தன் வசம் வைத்திருக்கும் அவர், அதிரடி அம்புகளை விட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism