நீர் மேலாண்மை

10.05.2050
தமிழ்நாடு.

அன்புள்ள மகன், மகளுக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள்ளாத வயதில் உங்கள் தந்தை எழுதும் கடிதம். எனது கடைசிக் காலத்தில் சில செய்திகளை உங்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன். தற்போது எனக்கு 50 வயதுதான் ஆகிறது. ஆனால், பார்ப்பதற்கு 80 வயதுடையவன் போலத் தோன்றுகிறேன். நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த உலகுக்கும், தற்போது காணும் உலகுக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. எனக்கு 5 வயது ஆனபோது, இந்த உலகம் இப்படி இல்லை. இன்னும் வித்தியாசமாக, விசித்திரமாக இருந்தது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. வயல்வெளிகள் இருந்தன. ஆறு, குளம், அருவிகள் என்ற பெயரில் நீர்நிலைகள் இருந்தன. 'நான் அருவிகளில் குளித்திருக்கிறேன்’ என்ற உண்மையைச் சொன்னால் சிரிப்பீர்கள்... 'என்ன நீரில் குளித்தீர்களா?’ என ஏளனம் செய்வீர்கள். ஆனால், அதுதான் உண்மை.

80% தண்ணீர் தரும் பண்ணைக் குட்டைகள்!

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை... தண்ணீர் விலைமதிக்க முடியாத பொருளாகிப் போன காலத்தில் வாழும் உங்களால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். தண்ணீருக்குப் பதிலாக மினரல் எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறீர்கள். தலைமுடி இருந்தால், சுத்தம் செய்ய அதிக தண்ணீர் செலவாகும் என்பதால், உங்கள் கால பெண்கள் தலையில் முடியே இல்லாமல் மொட்டையாகவே அலைகிறீர்கள். என் சிறு வயதில் வீட்டுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷனில் கொடுத்தது போல, இப்போது உங்களுக்கு வீட்டுக்கு மாதம் 5 லிட்டர் தண்ணீர் கொடுக்கிறது, அரசாங்கம். தண்ணீருக்காக என்னுடைய தலைமுறை இப்படித் தவிக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. பெற்றவர்கள் செய்த பாவம், பிள்ளைகளை பாதிக்கும் என்பார்கள் அது உண்மைதான்.

'மரங்களை வளருங்கள், மழை நீரைச் சேமியுங்கள், நீராதாரங்களைப் பராமரியுங்கள்’ என அரசாங்கமும் இயற்கை ஆர்வலர்களும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். அதை அலட்சியம் செய்ததன் பலனை இன்று நீங்களும் நானும் அனுபவிக்கிறோம். இன்றைக்கு எந்த நீர்நிலையிலும் நீர் இல்லை. கடல்நீரை குடிநீராகச் சுத்திகரிக்கும் நிலையங்களும் தற்போது இயங்கவில்லை. ஏனென்றால், அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமே குடிநீர்தான். தங்கம், வைரம், பிளாட்டினத்தின் விலையைவிட தண்ணீரின் விலை அதிகமாக உள்ளது. உருப்படியான உணவுகூட கிடைக்காமல், சிந்தடிக் உணவை உட்கொள்ள வேண்டிய இழிநிலை ஏற்பட்டிருக்கிறது. நீர் இல்லாமல் துணிகளைத் துவைக்க முடியாமல், யூஸ் அண்ட் துரோ வகை உடைகளேயே பயன்படுத்துகிறோம். இந்த நிலையை மாற்ற நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். மரம், செடி, கொடி, பூ, மீன், தண்ணீர் ஆகியவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு இணையத்தில் காட்டுவதை விட்டு, இயற்கையாய் காட்டும் முயற்சியில் இறங்குங்கள். அவற்றை மீண்டும் உருவாக்க முயற்சி செய்யுங்கள். அதுதான், இந்தத் தந்தைக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

இப்படிக்கு,
சொர்க்கத்தைத் தொலைத்த உங்கள் தந்தை.

விஞ்ஞானிகள் சொல்லும் உண்மை!

80% தண்ணீர் தரும் பண்ணைக் குட்டைகள்!

பக்கத்தில் இடம்பிடித்திருப்பது, தண்ணீர் சேமிப்பு எத்தனை அவசியமானது என்பதை செவிட்டில் அறைவதுபோல சொல்ல வேண்டும் என்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு, நானே எழுதி வைத்துக் கொண்ட கடிதம்தான். 2050-ம் ஆண்டு இப்படியரு கடிதம் எழுதப்படும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று நினைத்துத்தான் எழுதினேன். ஆனால், சமீபத்தில் கோயம்புத்தூர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில், '2025-ம் ஆண்டே இந்த நிலை வந்துவிடும்’ என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். எனவே, கடிதத்தில் உள்ள தந்தையைப் போல காலம் கடந்து சிந்திக்காமல்... இந்த நொடியில் இருந்தே தண்ணீர் சேமிப்பை ஒரு தவமாக, சமூகக் கடமையாக நாம் ஒவ்வொருவரும் செய்யத் தொடங்க வேண்டும். இல்லையெனில். எதிர்வரும் பேராபத்தைத் தடுக்க முடியாது. அதிலும் விவசாயிகள் நீர்ச் சேமிப்பை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஐந்து கொழுக் கலப்பை அவசியம்!

எதிர்வரும் பருவமழை மூலம் கிடைக்கும் ஒரு சொட்டு நீரைக்கூட விரயமாக்காமல் நிலத்தில் சேமிக்க வேண்டும். குறிப்பாக, தற்போது பரவலாகக் கிடைத்த மழையைப் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யுங்கள். 'தற்போது செய்யும் உழவு, பத்து டன் எருவை நிலத்தில் கொட்டியதற்கு சமம்’ என்கிறார்கள், அனுபவ விவசாயிகள். விவசாய நிலங்களில் மழை நீரை சேமிப்பதைப் பற்றி என்னிடம் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் விரிவாக்க அலுவலரும் வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்.

''நிலங்களில் விவசாயம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தற்போது கிடைத்த மழையைப் பயன்படுத்தி உடனடியாக உழவு செய்யவேண்டும். கொக்கிக் கலப்பையைவிட, ஐந்து கலப்பையே சிறந்தது. ஐந்து கலப்பை மூலமாக உழவு செய்யும்போது ஆழமான கரைகள் ஏற்பட்டு, அடுத்து பெய்யும் மழைநீர் ஒவ்வொரு கரைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தில் சேர்ந்து நிலத்துக்குள் இறங்கும். அதேபோல, மேடான பகுதிகளில் இருந்து வழிந்து வரும் நீர் ஒரு நிலத்தில் இருந்து, அடுத்த நிலத்துக்குப் போகாத வகையில், தாழ்வான பகுதியில் குழியெடுத்து, கரையை உயர்த்த வேண்டும்.

அடுத்து முக்கியமாக செய்ய வேண்டியது, பண்ணைக் குட்டைகள். இவை, ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும் அவசியமானவை. இவற்றின் மூலம் கிட்டத்தட்ட 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை நிலத்தில் சேமிக்க முடியும். குட்டைகளில் சேகரமாகும் நீர், படுக்கை வசத்தில் பரவி, கிட்டத்தட்ட 400 முதல் 550 மீட்டர் சுற்றளவுக்கு... அதாவது 14 ஏக்கர் நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். பண்ணைக் குட்டைகளில் சேகரமாகும் நீர் 80% நிலத்துக்குள் இறங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். பண்ணைக் குட்டைகள், வெறும் மழைநீர்ச் சேமிக்கும் குட்டை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. இதன் அருமை புரியாததால், 'அரசாங்கம் மானியத்தில் அமைத்துக் கொடுக்கிறதே’ என்று பாறை நிலங்கள், குப்பைகளைக் கொட்டும் இடங்கள் எனத் தேவையில்லாத இடங்களில் அமைக்கிறார்கள்.

80% தண்ணீர் தரும் பண்ணைக் குட்டைகள்!

ஆனால், உண்மையில் பண்ணைக் குட்டைகளின் பணி மகத்தானது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, மண்ணில் ஈரப்பதத்தைக் காப்பது மட்டுமல்லாமல், பயிர்களின் சல்லிவேர்களுக்கு நீரை நேரடியாகக் கொண்டு சேர்க்கின்றன. நிலத்தின் சரிவுப் பகுதிகள் எந்த இடத்தில் இணைகிறதோ அதுவே, பண்ணைக் குட்டை எடுக்கச் சிறந்த இடம். கிணறு, போர்வெல் இருக்கும் இடங்களுக்கு மேல் பகுதிகளிலும் அமைக்கலாம்.

15 அடி, 30 அடி, 60 அடி என மூன்று அளவுகளில் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம். 15 அடி நீளம், 15 அடி அகலம், 4 அடி ஆழத்தில் அமைக்கும் குட்டையில் ஒரு லட்சம் லிட்டர் நீரையும்; 30 அடி நீளம், 30 அடி அகலம், 4 அடி ஆழத்தில் அமைக்கும் குட்டையில் நான்கு லட்சம் லிட்டர் நீரையும்; 60 அடி நீளம்,

60 அடி அகலம், 4 அடி ஆழத்தில் அமைக்கும் குட்டையில் 16 லட்சம் லிட்டர் நீரையும் சேமிக்கலாம். பண்ணைக் குட்டைகளில் மழைநீர்ச் சேமிப்புடன் மீன் வளர்க்க நினைப்பவர்கள், ஆழத்தை அதிகப்படுத்தி, தரைப்பகுதியில் கரம்பை மண்ணைக் கொட்டி, மட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மானியம் உண்டு!

பண்ணைக் குட்டைகள், செம்மண் பகுதிகளில் பக்கவாட்டில் நீரைக் கடத்தும். இதனால், மண்ணில் உள்ள நுண்துளைகள் வழியே காற்றோட்டம் அதிகமாகும். மண்ணில் சரியாகக் கரையாமல் கட்டியாக நிலங்களில் இருக்கும் ரசாயன உரங்கள் (சால்ட் டெபாசிட்) தண்ணீரில் கலந்து விடுவதால்... வேர்கள் சுலபமாக எடுத்துக் கொள்ளும்.

களிமண் பகுதிகளில் அதிக நாட்கள் தண்ணீர் நிற்பதால், மண்ணில் உள்ள உப்புகளை வடித்து எடுத்துவிடும். இதனால், விளைச்சல் அதிகமாகும். பண்ணைக் குட்டைகள் அமைத்த நிலத்துக்கும் மற்ற நிலத்துக்குமான வித்தியாசத்தை வறட்சிக் காலங்களில் கண்கூடாகப் பார்க்கலாம்.

விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க... அதிகம் மெனக்கெடவோ செலவு செய்யவோ, தேவையில்லை. வேளாண்மைதுறை, வேளாண் பொறியியல்துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகளை அணுகினால், அதிகபட்சமாக 100% வரை மானியத்தில் அமைத்துக் கொடுக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் பண்ணைக் குட்டைகளை அமைத்துக் கொண்டால், வறட்சியை சுலபமாகச் சமாளிக்கலாம்'' என்றார், பிரிட்டோ ராஜ்.

தொடர்புக்கு,
பிரிட்டோ ராஜ்,
செல்போன்: 99444-50552.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism