Published:Updated:

மீத்தேன் எமன்

கரைந்துபோன நிலம்... கையேந்தும் விவசாயி! கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில் படங்கள்: கே. குணசீலன்

மீத்தேன் எமன்

கரைந்துபோன நிலம்... கையேந்தும் விவசாயி! கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில் படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

 - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

போராட்டம்

'தேங்கிக் கிடக்கும் தண்ணீர்தான்... நடமாடக்கூடிய ஜீவராசிகளுக்குச் சொந்தம். நிலத்துக்குள் இருக்கும் தண்ணீர் மொத்தமும், நடமாட முடியாத தாவரங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்வார்கள். ஆனால், இப்போது, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தால், அதையும் கூட கொண்டு வரும் வேகத்தோடு இந்த மனித குலம் இயங்கிக் கொண்டிருப்பதுதான் வேதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீர்... மனித குலத்துக்கான சொத்தல்ல. பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடிகள், மனிதர்கள் என அனைத்து உயிர்களும் இந்த உலகில் வாழ்வதற்காகத்தான், தண்ணீரைப் படைத்திருக்கிறது, இயற்கை. ஆனால், இன்றைக்கு நம்முடைய செயல்பாடுகள், ஒட்டுமொத்த தண்ணீரும் மனிதர்களுக்கே சொந்தம் என்பது போலத்தானே மாறிக்கிடக்கிறது!

இன்றைக்கு, பணவெறியோடும் அதிகாரத் திமிரோடும் தண்ணீர் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் அநீதியின் உச்சம்! சாயத் தொழிற்சாலைகள், சாராயத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் போன்றவற்றின் நச்சுக்கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதும்; விவசாயத்துக்கான தண்ணீரையும், லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கக்கூடிய குடிநீரையும் பன்னாட்டு கார் நிறுவனங்கள் தினந்தோறும் வெறித்தனமாக விழுங்கிக் கொண்டிருப்பதும், அனைவரும் அறிந்தவை. ஆனால், காவிரிப் படுகை மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ருத்ர தாண்டவத்தால் தண்ணீரின் பயணப் பாதைகளை இழந்து, பாசனத்துக்கு தவிக்கும் விளைநிலங்களின் ஆதங்கக்குரல்கள் அங்கேயே அடங்கி கிடக்கின்றன.

மீத்தேன் எமன்

நீர்நிலைகளையும், அவற்றின் வழித்தடங் களையும் அழித்தொழிப்பது... ஈவு இரக்கமற்ற கொடூரம் அல்லவா? இங்கு அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல்-கேஸ் கிணறுகள் அனைத்துமே விளைநிலங்களின் மீதுதான் பூதாகரமாக வீற்றிருக்கின்றன. கிணறு என்றதுமே, அப்பாவித்தனமாக, உங்கள் வீடுகளில் உள்ள கிணறுகளையோ, பண்ணைகளில் உள்ள சற்று பெரிய கிணறுகளையோ கற்பனை செய்து கொண்டு... 'இதனால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என எண்ணி விடாதீர்கள். ஒவ்வொரு கிணறும் 5 முதல் 7 ஏக்கர் விளைநிலத்தை வளைத்துப் போட்டு அமைத்திருக்கும் ராட்சத கிணறுகள். இதனால், இந்த விளைநிலங்கள் இழந்த உணவு உற்பத்தி குறித்து, உடனே உங்கள் மனம் கணக்குப் போட ஆரம்பிக்கும். காவிரிப் படுகையில் உள்ள மொத்த கிணறுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தால், இழந்துள்ள உணவு உற்பத்தியின் மொத்த அளவு நம் நெஞ்சைப் பதற வைக்கும். அது குறித்துப் பிறகு பார்ப்போம். இக்கிணறுகளால், சுற்று வட்டாரப் பகுதிகளில் பாழாகிப் போன விளைநிலங்களின் அவலம் குறித்து, முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

திருவாரூர் மாவட்டம், சிங்களாஞ்சேரி கிராமத்துக்கு நான் சென்றபோது... பிரமாண்டமாய் கண்ணில் பட்டது, ஓர் ராட்சத பெட்ரோல்-கேஸ் கிணறு. இக்கிணற்றின் வருகையால், வாய்க்கால்கள் தடைபட்டதால்... இந்த ஊரில் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள விளைநிலங்களிலும் ஏராளமான வீட்டுமனைகள் ஊற்றெடுத்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரம் மிகவும் ரணமானது.

மீத்தேன் எமன்

''எனக்குனு இருந்ததே இந்த ஒரு ஏக்கர் நிலம்தான். இதுல வெள்ளாமை பண்ணிதான் என் குடும்பத்தைக் காப்பாத்திக்கிட்டு இருந்தேன். இதுக்கும் ஆபத்து வந்து, திண்டாட்டத்துல தவிப்போம்னு நினைச்சுக் கூடப் பார்க்கல. இருபது வருசத்துக்கு முன்ன, ஒ.என்.ஜி.சி. ஆளுங்க என்னோட அரை ஏக்கர் நிலத்தை இந்த கிணறுக்காக எடுத்துக்கிட்டாங்க. அதை என்னால தடுக்க முடியல. போனா போகட்டும்... மிச்சமிருக்குற அரை ஏக்கர் நிலத்துல வெள்ளாமை செஞ்சி, பொழைச்சுக்கலாம்னு நினைச்சுட்டு

மீத்தேன் எமன்

இருந்தேன். ஆனா, இந்த பெட்ரோல்-கேஸ் கிணறோட கட்டுமானத்தால, வாய்க்கால் அடைச்சுக்கிடுச்சு. அதனால, பாசனத்துக்கு வாய்ப்பில்லாம விவசாயம் செய்ய முடியாமப் போயிடுச்சு. மொத்தத்துல என்னோட ஒரு ஏக்கர் நிலமும் பாழாகிடுச்சு.

என்கிட்ட இருந்து ஒ.என்.ஜி.சி. எடுத்துக்கிட்ட அரை ஏக்கருக்கு மட்டும்தான் நஷ்டஈடு கொடுத்திட்டிருக்காங்க. அதுவும்கூட நியாயமானதா இல்லை. ஆரம்பத்துல வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதுக்கு பிறகு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. இனிமே பணம் கிடையாதுனு போன வருஷம் சொல்லிட்டாங்க. அதுக்கப் பறம் பல தடவை நாயா, பேயா அலைஞ்சு, கெஞ்சி கூத்தாடின பிறகு, இப்ப வருஷத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாங்க. ஏக்கருக்கு 40 மூட்டையில இருந்து 50 மூட்டை நெல்லு விளைஞ்சிக்கிட்டுருந்த பூமி, என் கையை விட்டுப் போகாம இருந்திருந்தா, இன்னிக்கு ஒ.என்.ஜி.சி-க்கிட்ட கையேந்த வேண்டிய நிலை எனக்கு வந்திருக்காது'' என ஆற்றாமையோடு பேசினார், மருதமுத்து என்ற விவசாயி.

இவருக்காவது ஒரு ஏக்கர்... இங்கே இருக்கும் ஓடம்போக்கி எனும் வாய்க்கால் அடைபட்டதால், 70 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் சாகுபடியை இழந்து நிற்கும் சோகம், கொடுமையிலும் கொடுமை!

 - பாசக்கயிறு நீளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism