Published:Updated:

'ஊர்கூடி நீர் இழு...'

கூட்டுமுயற்சியால் உயிர்பெற்ற 1,120 ஏக்கர்!

'ஊர்கூடி நீர் இழு...'

கூட்டுமுயற்சியால் உயிர்பெற்ற 1,120 ஏக்கர்!

Published:Updated:

''அடிப்படை பிரச்னைகளுக்காக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டிருப்பதைவிட... நாம் மனது வைத்தால், பிரச்னைகளை ஊதித் தள்ளிவிடலாம். அதற்கு நாங்களே உதாரணம்'' என்கிறார்கள், திருவாரூர் மாவட்டம், தப்பளாம்புலியூர் கிராம விவசாயிகள்.

இக்கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், குமார், கணேசமூர்த்தி, வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, பாசனதாரர்கள் சபை உருவாக்கப்பட்டு... விவசாயிகளின் பங்களிப்பு மூலம் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது.

'ஊர்கூடி நீர் இழு...'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு காலத்தில் அனைத்துக் கிராமங்களிலுமே பாசனதாரர்கள் சபை சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதனால்தான் வாய்க்கால்கள் உயிர்ப்போடு இருந்தன. காலப்போக்கில், இந்த சபைகளை ஒரேயடியாக மறந்துவிட்டோம். இதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் தூர்வாரும் பணிக்காக அரசாங்கத்தை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் தப்பளாம்புலியூர் விவசாயிகள் பழையபடி வெற்றிப்பாதையைத் திறந்துள்ளனர்!

'ஊர்கூடி நீர் இழு...'

இதைப் பற்றிப் பேசிய சபையின் செயலாளர் குமரேசன், ''எங்க ஊர்ல 1,120 ஏக்கர் விளைநிலம் இருக்கு. பாண்டவை ஆறு கிளை வாய்க்கால்கள் மூலமாதான், பாசனம். இந்த வாய்க்கால்களைப் பராமரிக்கறதுக்காகவே 20 ஏக்கர் நிலம் இருக்கு. இதை குத்தகைக்கு விட்டு கிடைக்கற பணத்துலதான், வருஷா வருஷம் வாய்க்கால்களை தூர் வாருவாங்க. பெரும்பாலான விவசாயிகள், போர்வெல் அமைச்சுட்டதால, வாய்க்கால் தூர் வாருற வேலையே நடக்கல. கிட்டத்தட்ட பத்து வருஷமா அலட்சியமாக இருந்ததால குத்தகையும் நின்னுடுச்சு. இப்போ, நிலத்தடி நீர் ரொம்ப ஆழத்துக்குப் போயிட்டதால, தண்ணி உப்பா மாறிடுச்சு. அது, பயிர்லயும் வேலையைக் காட்டிடுச்சு. அதனாலதான், பதறிப் போய், பாசனதாரர்கள் சபையை உருவாக்கினோம்.

ஏக்கருக்கு 210 ரூபாய்னு விவசாயிகள்கிட்ட பணம் வசூல் செஞ்சோம். வாய்க்கால் நிலங்களைக் குத்தகைக்கு விட்டதுல ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. மொத்தம், இரண்டரை லட்சம் ரூபாய் பணம் சேர, அதை வெச்சே இந்த வருஷம் சிறப்பா தூர் வாரிட்டோம்.

'ஊர்கூடி நீர் இழு...'

இனி ஒவ்வொரு வருஷமும் இதேமாதிரி ஊர் மக்கள் பங்களிப்போட வாய்க்கால்களைப் பராமரிக்கப் போறோம். பாசனதாரர்கள் சபையின் மூன்று நிர்வாகிகள் பேர்ல வங்கியில் கூட்டுக் கணக்கு தொடங்கி, இதுக்கான பணத்தைப் போடப் போறோம். அதனால, முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை'' என்று சொன்னார் வெற்றிப் புன்னகையோடு!

'ஊர் கூடி தேர் இழு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism