Published:Updated:

ஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி !

இயற்கைக்கு மாறும் 'துல்லிய' விவசாயி

கு.ராமகிருஷ்ணன்

 பளிச்... பளிச்...

 50-ம் நாளிலிருந்து அறுவடை.
120 நாட்கள் வரை மகசூல்.
ஏக்கருக்கு 1,26,000 ரூபாய் லாபம்.

'அதிக வெப்பநிலை நிலவும் காவிரி டெல்டா பகுதியில்... நெல், உளுந்து போன்ற பயிர்கள் நன்கு விளையும் களிமண் பூமியில்... 'துல்லியப் பண்ணைத் திட்டம்' என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கத்திரிக்காய் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்திருப்பதால், மேகநாதனுக்கு 'வேளாண் செம்மல்' விருது வழங்கப்படுகிறது'

ஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி !
##~##

-கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த உழவர் தினவிழாவில் இப்படி பெருமைப்படுத்தப்பட்டவர்... திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலூகா, எடைமேலையூர் மேகநாதன்.

அறிவுறுத்திய அறிவியல் மையம்!

காலை வேளையன்றில் மேகநாதனைத் தேடிச் சென்ற நாம், வாழ்த்துக்களோடு சந்தித்தோம். மிக உற்சாகமாக பேச ஆரம்பித்தவர், ''எங்களுக்கு

20 ஏக்கர் நிலம் இருக்கு. மணல் கலந்த களிமண் பூமிதான். 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல பசுந்தீவனம், 10 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றேன். ஆத்துல தண்ணி வர்ற வரைக்கும் நெல் வயல்ல ஒரு பகுதியில வீரிய ரக கத்திரியை சாகுபடி செய்வேன்.

எங்க ஊர்ல யாருமே கத்திரி சாகுபடி செய்ய மாட்டாங்க. நீடாமங்கலம் கே.வி.கே. விஞ்ஞானிகள், துல்லியப் பண்ணைத் திட்டத்துல காய்கறி சாகுபடி செய்யச் சொல்லி எங்க பகுதி விவசாயிகள்ட்ட சொன்னாங்க. ஆனா... 'விளைச்சல் சரியா இருக்காது’னு பயந்துக்கிட்டு யாரும் முன்வரல. எனக்கும் பயமிருந்தாலும், ஒரு நம்பிக்கையில இறங்கினேன்.

80% மானியம்!

ரெண்டரை ஏக்கர்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு. இதுல 80 சதவிகிதத் தொகையை மானியமா கொடுத்துட்டாங்க. முதல் வருஷத்துக்கான உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாத்தையும்கூட கொடுத்துட்டாங்க. கே.வி.கே-ல இருந்து, தொடர்ந்து மேற்பார்வை பண்ணினாங்க.

ஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி !

முதல் வருஷம் ஏக்கருக்கு 14 டன்... ரெண்டாவது வருஷம் 19 டன்... போன வருஷம் 24 டன்னு மகசூல் அதிகரிச்சுக்கிட்டே போக... எனக்கு விருது வந்து சேர்ந்திருக்கு. ரெண்டரை ஏக்கருக்கு சொட்டுநீர் போட்டிருந்தாலும், ஒண்ணரை ஏக்கர்லதான் முழுசா கத்திரியை சாகுபடி செய்றேன்.

ஆத்துல தண்ணி வந்தா... நெல் விதைக்கணுங்கிறதுக்காக வயல்ல 6 அல்லது 7 மாசம் வரைக்கும்தான் கத்திரிப் பயிரை வெச்சுக்குவேன். நாத்து உற்பத்தியில இருந்து கணக்குப் பார்த்தா... மார்கழி கடைசியில ஆரம்பிச்சு ஆடி அல்லது ஆவணி வரைக்கும் கத்திரி சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்தவர், சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அது அப்படியே பாடமாக இங்கே...  

மூன்றடிப் பாத்தி!

ஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி !

சாகுபடி நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி 15 டன் தொழுவுரம், 6 டன் கரும்பு ஆலைக்கழிவு ஆகியவற்றைப் போட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பின்பு, ஒரு அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திக்குப் பாத்தி இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும்.

பாத்தியின் நடுவில் ஒன்றரை அடி இடைவெளியில் நீர் பாய்ச்சுமாறு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில் வரிசையாக நாற்றுகளை நடவு செய்து தண்ணீர்விட வேண்டும்.

களையைக் கட்டுப்படுத்தும் சொட்டுநீர்!

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்விட வேண்டும். வாரம் ஒரு முறை 5 கிலோ காம்ப்ளக்ஸ் உரத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, சொட்டுநீர் உரத் தொட்டியில் கலந்துவிட வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 5 கிலோ யூரியா மற்றும் 5 கிலோ பொட்டாஷை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இதேபோல கொடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை 4 கிலோ சூப்பர்-பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும். காய்ப்புக்கு வந்த பிறகு, காய்ப்புழுத் தாக்குதல் இருக்கும்.

இதைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மாலத்தியான் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்த 20 நாட்கள் கழித்து, 200 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி புரொபொனோபாஸ் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் அறுவடை வரை 20 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். கத்திரி சாகுபடியைப் பொறுத்தவரை களை ஒரு முக்கிய பிரச்னையாகவே இருக்கும்.

ஏக்கருக்கு 30 டன்... களிமண்ணிலும் களை கட்டும் கத்திரி !

ஆனால், சொட்டுநீர் அமைக்கும்போது அதிகளவில் களைகள் மண்டுவதில்லை. ஒரு முறை மட்டும் களை எடுத்தாலே போதுமானது. நடவு செய்த 50-ம் நாளுக்கு மேல் காய்களைப் பறிக்கலாம்.

120 நாட்களில் 24 டன்!

சாகுபடிப் பாடத்தை முடித்த மேகநாதன், தொடர்ந்து மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேசினார். ''ஐம்பதாம் நாள்ல இருந்து நாலு மாசம் வரைக்கும் தினமும் காய் பறிக்கலாம். ஒரு ஏக்கர்ல ஒரு நாளைக்கு நூத்தம்பது கிலோல இருந்து... முந்நூறு கிலோ வரை காய் கிடைக்கும். எப்படிப் பாத்தாலும், சராசரியா 24 டன் வரை மகசூல் கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 10 ரூபாய் விலை கிடைச்சிடும்.  

பூச்சிமருந்தைக் குறைச்சுட்டேன்!

நாலாவது வருஷமா இந்தத் தடவையும் கத்திரி போட்டிருக்கேன். புதுமுயற்சியா... இந்தத் தடவை ரசாயனப் பயன்பாட்டையும் பூச்சிக்கொல்லிகளையும் குறைச்சுக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கேன். பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலா 200 லிட்டர் தண்ணியில ஒன்றரை லிட்டர் வேப்பெண்ணெய், 300 கிராம் காதி சோப் ரெண்டையும் கலந்து 15 நாளுக்கு ஒரு  தடவை தெளிச்சுக்கிட்டிருக்கேன். பூச்சிங்க நல்லாவே கட்டுப்பட்டிருக்கு. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் நாலாயிரம் ரூபாய்தான் செலவாகுது. ஆனா, ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி இருந்தா... எப்படியும் 18 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியிருக்கும்.

ஏக்கருக்கு 30 டன்!

போன வருஷத்தைவிட இந்த வருஷம் இன்னும் கூடுதல் மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். காய் பறிக்க ஆரம்பிச்சு, மூணு மாசத்துக்கு மேல ஆகுது. இப்பவே 20 டன் மகசூல் எடுத்துட்டேன். இன்னும் ரெண்டு மாசம் வரைக்கும் காய் பறிக்கலாம். இந்த வருஷம் எப்படியும் மொத்த மகசூல் 30 டன்னைத் தாண்டிடும்னு நினைக்கிறேன்'' என்று சொல்லி ஆச்சரியமூட்டிய மேகநாதன், விவசாய ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார் என்பதை அடுத்து அவர் சொன்ன விஷயங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

''சோதனை முயற்சியா, 40 சென்ட்ல 6 டன் தொழுவுரத்தையும் 20 கிலோ காம்ப்ளக்ஸ் உரத்தையும் மட்டும் கொடுத்து பூச்சிக்கொல்லி பயன்படுத்தாம... ஐ.ஆர்-20 நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சேன். அதுல 14 மூட்டை மகசூல் கிடைச்சுது. இனி, இதையே கடைபிடிக்கலாம்னு இருக்கேன். அடுத்தாப்ல... தொழுவுரம், மாட்டுச் சிறுநீர் மட்டுமே உபயோகப்படுத்தி ஒரு சின்ன பரப்புல கத்திரி சாகுபடியும் செஞ்சு பாக்கலாம்னு இருக்கேன்'' என்றார் மகிழ்ச்சியாக.

 படங்கள்: மு. ராமசாமி
தொடர்புக்கு மேகநாதன்,
அலைபேசி : 94428-46608.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு