Published:Updated:

தீவன வங்கி....

சிறு,குறு விவசாயிகளுக்கு சிறப்பான வருமானம்!

பிரீமியம் ஸ்டோரி

ஆலோசனை

 ஜி.பிரபு

'லாபம் தருவது நாட்டு மாடா... கலப்பின மாடா?’ என்ற தலைப்பில் 10-8-11 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரையில், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக விவசாயத்துறைப் பேராசிரியர் ரங்கநாதன் 'தீவன வங்கி’ பற்றி சொல்லியிருந்தார். நிறைய வாசகர்கள் நம்மைத் தொடர்புகொண்டு, 'தீவன வங்கி' பற்றி விளக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோருக்குமே பயன்படும் வகையில், 'தீவன வங்கி’ பற்றி கொஞ்சம் விளக்கமாகவே இங்கே பேசுகிறார்...  திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் இணைப் பேராசியர் பீர் முகமது.

தீவன வங்கி....
##~##

''வேளாண்மைக்கு உதவுவதோடு பால், இறைச்சி போன்றவற்றின் மூலமும் கால்நடைகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. ஆனால், அந்த கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதுதான் சிக்கலாக இருக்கிறது. மொத்தக் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களின் அளவில் 50% மட்டும்தான் இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதனால்தான் கால்நடை வளர்ப்பு என்பது நம்நாட்டில் தன்னிறைவை அடையாமலே இருக்கிறது!

ஆடு, கறவை மாடு, வான்கோழி, கோழி... என எதுவாக இருந்தாலும் அதற்கு சமச்சீரான உணவு அவசியம். ஆடு, கறவை மாடுகள் போன்றவற்றின் பராமரிப்பில் 60 சதவிகிதத்துக்கு மேல் தீவனத்துக்காகத்தான் செலவாகிறது. அப்படியிருக்கும்போது அதிகளவில் தீவனப்பயிர்களை உற்பத்தி செய்தால்... தீவனச்செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க முடியும். கறவை மாடு வளர்க்கிற அனைத்து விவசாயிகளிடமும் நிலம் இருந்தால்தான் பசுந்தீவன உற்பத்தி சாத்தியம்.

அப்படியானால், நிலமில்லாத விவசாயிகள் மாடு வளர்க்க முடியாதா? என்ற கேள்வி எழலாம். அதற்குத்தான் தீவன வங்கிகள்! அதாவது நிலமிருக்கும் விவசாயிகள், தீவனப்பயிர்களை சாகுபடி செய்து நிலமில்லாத மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதுதான் தீவன வங்கித் திட்டம். பல பயிர்களை சாகுபடி செய்தும் இயற்கைச் சீற்றங்கள், விலையின்மை... போன்ற பல காரணங்களால் நஷ்டத்தில் இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தீவன வங்கி அமைப்பது நல்ல லாபகரமான தொழிலாக இருக்கும். இன்றையச் சூழ்நிலையில் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் எட்டு முதல் பத்து மாடுகளுக்கு தீவன உற்பத்தி செய்ய முடியும்.

தீவன வங்கி....

மக்காச்சோளம், சோளம், தீவனக் கம்பு, கினியா, நேப்பியர் ஒட்டுப்புல், சூடான் புல், கோ-3, கோ-4 எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், முயல்மசால், வேலிமசால், தீவனத் தட்டைப்பயறு, சவுண்டல், கிளரிசீடியா, வாகை, வேம்பு, அகத்தி, கல்யாணமுருங்கை, கொருக்காய்புளி... என ஏகப்பட்ட தீவனப் பயிர்கள் இருக்கின்றன.

தீவன வங்கி....

இவை, எல்லா வகையான மண்கண்டங்களிலுமே வளரும் தன்மை கொண்டிருக்கின்றன. குறைவான தண்ணீரே இவற்றுக்குப் போதுமானது. வரப்புகள், வேலி ஓரங்கள் என்றுகூட நடவு செய்யலாம். புல் வகைகளை ஊடுபயிராகக்கூட சாகுபடி செய்து கொள்ள முடியும். இவற்றுக்குப் பராமரிப்புச் செலவும் குறைவு. இயற்கை முறையில் வளர்த்தால், உரச் செலவையும் வெகுவாகக் குறைக்க முடியும்.

நடவு செய்த இரண்டாம் மாதத்தில் இருந்து மகசூல் கொடுக்கக் கூடியவை... ஒரு முறை நடவு செய்தால், 20 வருடங்கள் வரை மகசூல் கொடுக்கக்கூடியவை என்று பல ரக தீவனப்பயிர்கள் இருக்கின்றன. இதையெல்லாம் சரியாக கணித்து, அவற்றை உற்பத்தி செய்து தீவன வங்கி அமைத்து விற்பனை செய்யும் விவசாயி, ஒரு ஏக்கரில் இருந்து தினமும் 300 ரூபாய் வரைகூட சம்பாதிக்க முடியும்'' என்ற பீர் முகமது நிறைவாக,

''தற்போது, தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடுகளை வழங்க இருக்கிறார்கள். அதனால், வருங்காலங்களில் பசுந்தீவனத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த சமயத்தில் தீவன உற்பத்தியைத் தொடங்கினால் வருங்காலங்களில் நல்ல வருமானம் பார்க்க முடியும்'' என்ற நல்யோசனையையும் சொன்னார்.

படங்கள்: தி. விஜய்
தொடர்புக்கு: பீர் முகமது,
தொலைபேசி : 0451-2423147.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு