Published:Updated:

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !

பிரீமியம் ஸ்டோரி

சாதனை

காசி.வேம்பபயன்

'கூட்டுறவே நாட்டுயர்வு... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...' என்பதுதான் நம்நாட்டில் இயங்கிவரும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தாரக மந்திரம். ஆனால், இந்தக் கொள்கையை நிதர்சனமாக்கியபடி செயல்பட்டு வரும் அமைப்புகளை விரல்விட்டு எண்ணி விடலாம் என்பதுதான் உண்மை. அவற்றில் ஒன்றாக, அசத்தலாக நடைபோட்டு... மாநில விருது, தேசிய விருது என்றெல்லாம் அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது, வேலூர் மாவட்டம், ஓமகுப்பம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம்!

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !
##~##

ஒரு பக்கம் ஜவ்வாது மலை... இன்னொருப் பக்கம் ஏலகிரி மலை... இவற்றுக்கிடையில் தென்னை, வாழை, கரும்பு... என செழுமை கட்டி இருக்கிறது, ஓமகுப்பம் கிராமம்.

கடனைக் கட்டும் விவசாயிகளுக்குச் சலுகை

நேரடியாக அங்கே சென்ற நாம், கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் சீனனைச் சந்தித்தபோது, உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார். ''இது 1980-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிச்ச எட்டு வருஷம் வரைக்கும் தவணை பாக்கியே இல்லாம கடனைத் திரும்பக் கட்டினதுக்காக பல விருதுகளை வாங்கியிருக்கோம். இந்தச் சங்கத்துல கடன் வாங்குறவங்கள்ல 2% பேர்தான் கடனை சரியான முறையில திரும்பக் கட்டுறதில்ல. அதனால ஒழுங்கா கடனைத் திருப்பிக் கட்டுற விவசாயிகளுக்கு உதவலாமேங்கிற நோக்கத்துல இருபது இருபது விவசாயிகள இணைச்சு... 'கூட்டுப்பொறுப்புக் குழு’ங்கற பேர்ல குழுக்களை அமைச்சிருக்கோம்.

பண்ணைக் கருவிகளுக்கு மானியக்கடன்

மானியத்தோட கூடிய கடன் மூலமா பவர் டில்லர், மினி டிராக்டர், கதிரடிக்கும் இயந்திரம்னு வாங்கிக் கொடுத்திருக்கோம். சங்கத்துக்கான இடத்துலயே அதையெல்லாம் நிறுத்தி வெச்சு, தேவைப்படுற விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுறோம். இதன் மூலமா கிடைக்கிற வருமானத்துல... கடன் தவணை, செலவுகள் போக மீதி இருக்குற லாபத்தை அந்தந்தக் குழுக்களோட கணக்குல வரவு வெச்சுக்கிட்டிருக்கோம்.

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !

போன வருஷத்துல பவர் டில்லர் மூலமா 11 ஆயிரம் ரூபாய்; மினி டிராக்டர் மூலமா 9 ஆயிரம் ரூபாய்; கதிரடிக்கும் இயந்திரத்தின் மூலமா

8 ஆயிரம் ரூபாய்னு லாபம் கிடைச்சிருக்கு. இதில்லாம எங்க கூட்டுறவுச் சங்கம் மூலமாவே, 'விவசாய சேவை மையம்’னு ஆரம்பிச்சு 3 மினி டிராக்டர், 2 பவர் டில்லர், 2 பவர்வீடர், 1 கதிர் அடிக்கும் இயந்திரம்னு வாங்கிப் போட்டிருக்கோம்.

கடந்த ஆண்டு ஜூன் மாசத்துல மட்டும் இந்தக் கருவிகள் மூலமா 2,41,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. எல்லாச் செலவும் போக 1,27,000 ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு. தனியாரைவிட ரொம்பவும் குறைவானத் தொகையைத்தான் வாடகையா வசூல் பண்றோம். உதாரணமா... மினி டிராக்டருக்கு தனியார்கிட்ட ஒரு மணிக்கு 600 ரூபாய் வாடகை. நாங்க 450 ரூபாய்தான் வாங்குறோம்'' என்று சொல்லி புல்லரிக்க வைத்தவர், தொடர்ந்தார்.  

இயற்கை விவசாயத்துக்கு பசுமைப் புரட்சி - 2011

''இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்குறதுக்காக 'பசுமைப் புரட்சி2011’னு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சுருக்கோம். இந்தத் திட்டத்துக்கு எங்களுக்கு வழிகாட்டினது 'பசுமை விகடன்’தான். உங்க மூலமா நாங்க தெரிஞ்சிக்கிட்ட பல விவசாயிகளைச் சந்திச்சு மண்புழு உரம் தயாரிக்கிறதைக் கத்துக்கிட்டோம்.

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !

அதுக்கப்பறம் தரமான மண்புழு உரத்தைத் தயாரிச்சு விவசாயிகளுக்கு கிலோ 6 ரூபாய்னு விற்பனை செய்யுறோம். இதில்லாம வேப்பம் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்குனு தரமான இயற்கை இடுபொருட்களையும் விற்பனை செய்யுறோம்'' என்று குறிப்பிட்ட சீனன்,

தேசிய விருது

''நாத்து தேவைப்படுற விவசாயிகளுக்கு பக்கத்து ஊர்களிலிருந்து வரவழைச்சுக் கொடுக்கிறோம். ஜெராக்ஸ், செல்போன் ரீ-சார்ஜ், கம்ப்யூட்டர் சிட்டானு பல சேவைகளை சங்கத்து மூலமா செய்யுறோம். இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்டு இதுவரைக்கும் 22 மாநிலங்கள்ல இருந்து, நபார்டு அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், விவசாயிகள்னு நிறையபேர் இங்க நேரடியா வந்து, எங்க பணிகளை ஆச்சரியத்தோட பார்வையிட்டு பாராட்டிட்டு போயிருக்காங்க.

கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !
கடன் மட்டுமல்ல கருவிகளும்...சாதனை படைக்கும் கூட்டுறவுச் சங்கம் !

'தமிழகத்துலேயே சிறந்த கூட்டுறவுச் சங்கம்', 'தேசிய அளவுல சிறந்த சங்கம்'னு விருதெல்லாம் வாங்கியிருக்கோம். நபார்டு மூலமா எங்களோட செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட ரிசர்வ் பேங்க் அதிகாரிகள் மிகமிகக் குறைஞ்ச வட்டியில (2%) விவசாயக் கடன் கொடுக்குற வகையில ஒரு கிளையைத் தொடங்குறதா சொல்லியிருக்காங்க'' என்றார் பெருமையுடன்.

கூட்டுப் பொறுப்புக் கண்காணிப்புக் குழுவின் தலைவி ஆனந்தி ரகுபதி, ''வேலைக்கு சரிவர ஆளுங்க கிடைக்காததால கருவிகளை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கு.

உழவு ஓட்டுறதுக்கு, களை எடுக்குறதுக்குனு எல்லாத்துக்குமே குறைஞ்ச வாடகையில கருவிங்க கிடைக்கிறதால எங்க பகுதி விவசாயிங்களுக்கு சிரமமே இல்லை'' என்று சொன்னார்.

வேலூர் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சந்திரசேகரன், ''மாவட்டத்துல இருக்குற மத்த சங்கங்களுக்கு ஓமகுப்பம் சங்கம்தான் முன்மாதிரி.  மத்த சங்க செயலாளர்களை ஓமக்குப்பம் போய் பாத்துட்டு வரச் சொல்றோம்ல'' என்று வஞ்சனை இல்லாமல் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்!

படங்கள்: ச.வெங்கடேசன்
தொடர்புக்கு
ஓமகுப்பம் கூட்டுறவுச் சங்கம்,
தொலைபேசி: 04174-269360,
சீனன்: அலைபேசி: 97518-79757.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு